(Reading time: 14 - 28 minutes)

ருவரும் கிளம்பிச் சென்றதும் அமுதன் அன்னையை தேடி வந்தான். ஆனந்தி அவன் பக்கம் திரும்பியும் பார்க்கவில்லை.  அதிலேயே அவர் கோபமாக இருப்பதை அவன் உணர்ந்துக் கொண்டான்.

“அம்மா சாரிம்மா..” என்று அவர் அருகில் சென்று அமர்ந்து அவரின் கைகளை பிடித்துக் கொண்டான்.

“என்னடா சாரி.. சாரி சொன்னா எல்லாம் சரியாகிடுமா.. ஆரம்பத்துல இருந்து நான் உன்கிட்ட எதுக்காக கண்டிப்பா நடந்துக்கிறேன்னு இப்போ புரிஞ்சுதா.. அது சாதாரணமான விஷயமில்ல, ஒரு பொண்ணோட வாழ்க்கைன்னு புரிஞ்சிக்காம போயிட்டியே.. சரி நடந்த தப்பை சரி செஞ்சுக்கணுமா.. இல்லையா.. அதிலேயும் சொதப்பிட்டு வந்துருக்க.. அருளுக்காக அந்த இடத்துல யோசிக்கலன்னாலும்.. சுடருக்காகவது யோசிச்சு செஞ்சுருக்கலாம்.. இப்போ என்னல்லாம் நடக்க இருந்திருக்குன்னு எழில் சொல்லி கேட்டல்ல.. இதெல்லாம் கேட்டு மனசுக்கு எவ்வளவு கஷ்டமா போச்சு தெரியுமா அமுதா.. போடா அதெல்லாம் நீ புரிஞ்சிக்கிட்டு இருந்திருந்தா இப்படியெல்லாம் செஞ்சிருக்க மாட்ட..”

“சாரிம்மா.. அப்போ அதெல்லாம் உண்மையாகவே தப்புன்னு தோனலம்மா.. நான் தெரிஞ்சே செஞ்சிருந்தாலும், எல்லாமே எங்க கை மீறி போயிடுச்சும்மா.. அதை அவங்க யூஸ் பண்ணிக்க பார்க்குறாங்கன்னு தான் அப்போ நினைக்க தோனுச்சு.. அதான்ம்மா எல்லாத்துக்கும் காரணம்”

“சரி அமுதா.. இப்போ நீ நினைச்சா எல்லாமே சரி பண்ண முடியும்.. அருள் மட்டுமில்ல சுடரோட வாழ்க்கையும் சரிப் பண்ணிடலாம். அதுக்கு நீதான் மனசு வைக்கணும்.. நான் சொல்றது புரியுதா?”

“ம்ம் புரியுதும்மா.. எனக்கும் எல்லாத்தையும் சரி செய்யணும்னு தான் தோனுதும்மா.. அதுமட்டுமில்ல அருளை உங்களுக்கு பிடிக்குமில்ல.. அதனால நீங்க என்ன சொன்னாலும் சரிம்மா..” என்றதும் ஆனந்தி மகிழ்ந்து போனார்.

மகன் தவறு தான் செய்திருக்கிறான் என்றாலும் அவன் அதை தெரிந்து செய்திருக்க மாட்டான் என்பதை அவர் அறிவார். அவன் வளர்ந்த சூழ்நிலை அப்படி..  அவனுக்கு சரி எது? தவறு எது? எதை எப்படி செய்ய வேண்டும்? அதனால் ஏற்படும் பின் விளைவுகள் இதைப்பற்றியெல்லாம் யோசிக்காமல், வாழ்க்கையை விளையாட்டாகவே வாழ்கிறான் என்பதை அவரால் புரிந்துக் கொள்ள முடிந்தது.

அமுதனின் தந்தை பிறப்பிலேயே இங்கிலாந்தை சேர்ந்தவர், பெயர் ரிச்சர்ட், ஆங்கில பேராசிரியர்.. அவருக்கு அருகில் வசித்த ஒரு தமிழ் குடும்பத்துடன் நட்புறவு ஏற்பட்டு, அப்படியே தமிழ் மொழி மீதும் அவருக்கு பற்று உண்டானது. தமிழ்மொழியை பற்றி ஆராய்ச்சி செய்யவே தமிழ்நாடு வந்தார். ஒரு பல்கலை கழகத்தின் உதவியை நாடினார். அந்த பல்கலை கழகத்தில் எம்.ஏ தமிழ் லிட்ரெச்சர் கடைசி வருடத்தில் ஆனந்தியும் கதிரவனும் படித்துக் கொண்டிருந்தனர். ஆராய்ச்சியில் ரிச்சர்ட்க்கு தேவையான உதவிகள் செய்யவே ஆனந்தியையும் கதிரவனையும் நியமித்திருந்தனர். அதில் ஆனந்தியும் ரிச்சர்டும் ஒருவரையொருவர் நேசிக்க ஆரம்பித்தனர்.

ஆனந்தி உறவினரின் ஆதரவில் இருந்ததால் அவர்களின் காதல் திருமணத்திற்கு எந்த தடையும் இருக்கவில்லை. திருமணத்திற்கு பிறகு ரிச்சர்ட் ஆனந்தியை லண்டனுக்கே அழைத்துச் சென்றார். அங்கேயே தமிழ் விரும்பி படிப்போருக்காக ஆனந்திக்கு ரிச்சர்ட் ஒரு பள்ளி ஆரம்பித்து தந்தார். நாடு, இனம், மொழி எதுவுமே அவர்கள் திருமண வாழ்க்கைக்கு பிரச்சனையாக இருந்ததில்லை. சந்தோஷத்துடனும் காதலுடனும் அவர்கள் இல்லறம் நல்லறமாய் நீடித்தது. அவர்கள் காதலின் வெளிப்பாடாக அழகிய ஆண்குழந்தை பிறந்தது.

குழந்தைக்கு பெயர் சூட்டும் உரிமையை கூட ரிச்சர்ட் ஆனந்திக்கே கொடுத்தார். அழகிய தமிழ் பெயர் சூட்ட விரும்பி ஆனந்தி குழந்தைக்கு அமுதவாணன் என்ற பெயரை தேர்ந்தெடுத்தாள். ரிச்சார்ட்க்கும் அது பிடித்திருந்தது. இருந்தும் ரிச்சர்ட் அவர்களின் முறைப்படி தேவாலயத்தில் சென்று பெயர் சூட்ட வேண்டுமென்பதால் சார்லஸ் என்ற பெயரை ஆனந்தி அவர் விருப்பப்படியே தேர்ந்தெடுத்தார். அன்றிலிருந்து அவன் பெயர் சார்லஸ் அமுதவாணன் ஆகியது. அந்த நாட்டை சேர்ந்தவர்களுக்கு அவன் சார்லஸ், அன்னை தந்தைக்கு அவன் அமுதவாணன்.. சுருக்கமாக அமுதா.. மனைவியின் மூலம் தமிழ் கற்றுக் கொண்ட ரிச்சர்டும் மகனை மனைவியின் விருப்பப்படியே தான் அழைப்பார்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.