தொடர்கதை - நெஞ்சோடு கலந்திடு உறவாலே!! - 19 - சித்ரா. வெ

மகி ரெஸ்ட்டாரன்ட்டில் வேலை முடித்து வீட்டுக்கு வரும்போது மாலை மறைந்து இருட்ட ஆரம்பித்திருந்தது. வீட்டுக்குள்ளும் இருள் சூழ்ந்திருந்தது. கேட்டை திறந்துக் கொண்டு அவன் வரும்போதே எதிரில் வந்த வீட்டு உரிமையாளர் பெண்மணி, “உன்னோட வெளிய கிளம்பின சுடர் மதியமே வீட்டுக்கு வந்துட்டா.. அதுல இருந்து வீட்லயே அடைஞ்சு கிடக்குறா.. நான் கொஞ்ச நேரம் போய் பேசிட்டிருக்கலாம்னு நினைச்சு போனப்பவும், நான் கொஞ்ச நேரம் தூங்கப் போறேன் ஆன்ட்டி, அதனால தொந்தரவு செய்யாதீங்கன்னு சொல்லிட்டா.. நானும் வந்துட்டேன், ஆனா மதியம் சமைக்கவுமில்ல.. சாப்பிட்டாளான்னும் தெரியல.. இப்பவும் இதுவரைக்கும் எழுந்தது போல தெரியல.. என்னன்னு பாருப்பா..” என்று சொன்னவர், வெளியில் கிளம்பிச் சென்றார்.
அதற்கேற்றார் போல் வீட்டில் விளக்குகள் போடாமலிருக்கவும் ஏதோ பிரச்சனை என்று மகியால் உணர்ந்துக் கொள்ள முடிந்தது. சமையலறையில் சென்று பார்த்தால் எதுவும் சமையல் செய்ததற்கு அறிகுறியே இல்லை. சுடர் படுக்கை அறையில் கட்டிலில் படுத்துக் கொண்டிருந்தாள். உள்ளே சென்றனவனோ, “சுடர் என்னாச்சு.. ஏன் இப்போ மூட் அப்சட்.. மதியம் சாப்பிட்டியா? ஏதாச்சும் பிரச்சனைன்னா என்கிட்ட சொன்னா தானே தெரியும்.. இப்படியே ரூம்க்குள்ள அடைஞ்சிட்டு இருந்தா எல்லாம் சரியாகிடுமா? உன்னை டென்ஷன் படுத்தினவங்க யாரு?” என்று சமாதானமாக பேசிப் பார்த்தான். ஆனால் அவள் அப்படியே படுத்திருந்தாள். கண்கள் மூடியப்படி தான் படுத்திருந்தாள். ஆனால் தூங்கவில்லை.
“இப்போது தான் கொஞ்சம் கொஞ்சமாக சரியாகி கொண்டு வருகிறாள் என்று பார்த்தால், இவள் இப்படி மூட் அப்சட் ஆனது எதனால் என்று புரியாமல் குழம்பினான். அந்த நேரம் அவளது அலைபேசி ஒலி எழுப்பியது. ஆனால் அதற்கு கூட அவள் அசையவில்லை. யார் அவளை அழைத்து என்று எடுத்து பார்த்தான். அமுதனிடம் இருந்து தான் அழைப்பு வந்திருந்தது. முழுவதுமாக ஒலி எழுப்பி பின் அணைப்பு துண்டிக்கப்பட்டது. அதில் பார்த்தால் அமுதனிடம் இருந்து ஏகப்பட்ட அழைப்பு வந்திருந்தது. ஆனால் எதையும் ஏற்று அவள் பேசாமல் இருந்திருக்கிறாள். அப்படியானால் அமுதன் தான் ஏதாவது அவளை சொல்லியிருக்கிறானா? என்று மகி நினைத்துக் கொண்டிருக்கும் போதே, திரும்ப அமுதனிடம் இருந்து அழைப்பு வந்தது.
இந்த முறை மகியே அமுதனின் அழைப்பை ஏற்றான். அடுத்து ஹலோ என்று சொல்வதற்குள் அமுதனே, “கட் பண்ணிடாத சுடர்.. தெரியாம அப்படி பேசிட்டேன், நான் ஒரு லூஸு, நீயே இப்போ தான் கொஞ்சம் இறங்கி வந்த, அதுக்குள்ள தேவையில்லாம பேசி உன்னை டென்ஷன் படுத்திட்டேன்.. அதுக்காக இப்படியா.. இத்தனை முறை போன் பண்ணியும் எடுக்க மாட்டேங்கிறியே சுடர்..” என்று படபடவென்று பேசினான்.
“அப்போ நான் சந்தேகப்பட்டது போல சுடர் மூட் அப்சட் ஆனதுக்கு காரணம் இவன் தானா?” என்று கோபப்பட்ட மகி,
“அமுதன் நீ எல்லாம் என்ன ப்ரண்ட் .. எப்பவும் உன்னை பத்தி மட்டும் தான் யோசிப்பியா? முன்ன தான் அவளை பிரச்சனையில் மாட்டிவிட்டு போன.. இப்போ இப்படி பண்ற.. என்னடா சொன்ன அவளை?” என்று கோபமாக பேசினான்.
திடிரென்று சுடரின் அலைபேசியில் மகி பேசவும் அதில் அதிர்ச்சியாகி அமுதனுக்கு என்ன பேச என்று ஒன்றும் புரியாமல் முழித்தான்.
ஹாய் பிரெண்ட், அத்தியாயத்தை படித்து விட்டு, உங்கள் கருத்தை பகிர மறக்காதீர்கள். உங்கள் ஒவ்வொரு கமன்ட்டும் எழுத்தாளருக்கு மிக பெரிய டானிக். உங்கள் கமண்ட்டை பகிர இதை க்ளிக் செய்யுங்கள் ![]()
இங்கு அதுவரை படுத்திருந்த சுடரோ கோபமாக எழுந்து, மகி கையில் இருந்த அலைபேசியை பிடுங்கி காதில் வைத்து, “சார்லி நான் அப்புறம் பேசறேன் போனை வை..” என்று அழைப்பை துண்டித்தவள், பின் மகியை பார்த்து.. “சார்லி என்னோட ப்ரண்ட்.. நாங்க சண்டை போட்டுப்போம். அப்புறம் சமாதானம் ஆகிப்போம்.. அதுக்கு நடுவுல நீ ஏன் வர? இப்போ நான் இப்படி இருக்கிறதுக்கு காரணம் சார்லி இல்ல.. உன்னோட பேமிலி ஆளுங்க தான்..” என்று கத்தினாள்.
“என்னோட பேமிலியா? அவங்க என்னோட பேமிலி இல்ல சுடர்.. நம்ம பேமிலி என்று திருத்தினான்.
“ஆமா நீதான் மெச்சிக்கணும்.. நம்ம பேமிலியா? அதை நீயும் நானும் சொன்னா மட்டும் போதுமா? அவங்க சொல்லணுமில்ல.. அவங்க என்னல்லாம் பேசினாங்க தெரியுமா? தப்பு செஞ்சது நீ.. ஆனா திட்டு வாங்கறது நான்.. எதுக்குடா எனக்கு தாலி கட்டின? நான் எங்க போனா உனக்கென்னடா.. அக்கறை காட்றங்கிற பேர்ல இப்படி என்னை கஷ்டப்படுத்தி பார்க்கிறியேடா..” என்று அவன் சட்டையை பற்றி உலுக்கினாள்.
“சுடர்.. என்ன நடந்துச்சு.. யார் உன்னை என்ன சொன்னாங்க.. இப்படி டென்ஷன் ஆகாம நடந்ததை சொல்லு..” என்று சட்டையிலிருந்து கையை பிரித்து, அந்த கைகளோடு தன் கைகளை கோர்த்தப்படியே கேட்டான்.
“என்னவா? என்ன சொன்னாங்களா?” என்று கோபத்தோடு கூறியவள், நடந்ததை சொல்ல ஆரம்பித்தாள்.