அமுதவாணன் பேசியதில் சிறிது கோபத்தோடு இருந்தவளுக்கு, கூடவே கொஞ்சம் மனதிற்கு வேதனையாகவும் இருந்தது. அதனால் மன அமைதிக்காக கோவிலுக்கு செல்ல முடிவெடுத்து அமுதன் வீட்டிலிருந்து கோவிலுக்கு சென்றாள். அப்போதே அமுதன் அவளை அலைபேசியில் அழைக்கவும், அவனிடம் அப்போது பேச தோன்றாமல், அலைபேசியை அமைதியாக்கி கைப்பையில் வைத்தவள், சிறிது நேரம் கோவிலில் அமர்ந்திருந்தாள். அப்போது தான் அங்கு மகியின் அன்னை பூங்கொடி, மகியின் பாட்டி முத்தழகி, மற்றும் அருள்மொழியின் அன்னை கலையரசி மூவரும் கோவிலுக்கு வந்தனர்.
அவர்கள் இவளை கவனிக்கவில்லை. ஆனால் இவள் அவர்களை பார்த்துவிட்டாள். பார்த்ததோடு அமைதியாக இல்லாமல், அவர்களிடம் சென்று பேச நினைத்தவள், உடனே அதை செயலாற்றினாள். அவர்கள் அருகில் சென்றவள், “பாட்டி எப்படி இருக்கீங்க? அத்தை பெரியம்மா நீங்களும் நல்லா இருக்கீங்களா?” என்று மூவரையும் விசாரித்தாள்.
“உன்னை பார்த்துட்டோம் இல்ல.. இனி எங்க நல்லா இருக்கிறது..” என்று பாட்டி கோபமாக கூறவும், அவள் முகம் அப்படியே வாடிவிட்டது.
“செய்றதெல்லாம் செஞ்சுட்டு.. நல்ல பொண்ணு மாதிரி எங்களை விசாரிக்கிறியா? உனக்கு மனசாட்சி இல்ல..” என்று கலையும் அவளிடம் கோபத்தை காட்டினார்.
பூங்கொடிக்கோ மற்ற இருவரும் சுடரிடம் கோபமாக பேசுவதை பார்த்து மனதிற்கு வருத்தமாக இருந்தது. ஏற்கனவே அவளிடம் எப்போதும் அவர் மென்மையாக தான் நடந்துக் கொள்வார். இதில் இப்போது சுடர் அவரது மருமகள் ஆயிற்றே, அதனால் “எதற்கு இப்போது இந்த பெண் இங்கு வந்தாள். பார்த்ததும் ஒதுங்கி போயிருக்களாமே..” என்று தான் நினைத்தார். அதையும் மீறி மாமியாரிடமோ, நாத்தனாரிடமோ ஏதும் சொல்ல முடியாது. அதற்கு காரணம் அவர்கள் மீது பயம் என்று இல்லை. ஆனால் இப்போது அவர்கள் இருக்கும் மனநிலைக்கு அவர்களது கோபமும் நியாயமானது. அதனால் சுடர் தானாக வந்து பேசியது தான் இப்போது அவருக்கு தவறாக தோன்றியது.
“பாட்டி உங்க கோபம் புரியுது.. ஆனா இப்போ நான் உங்க வீட்டு பொண்ணு இல்லையா? அதுவும் இல்லாம இப்போ நடந்ததுல என்னோட தப்பு என்ன இருக்கு?”
“தப்போட மொத்த உருவமா வந்து நின்னுக்கிட்டு என்ன தப்புன்னா கேக்கற? நீ இங்க வந்ததே தப்பு தான்.. சந்தோஷமா போயிட்டிருக்கும் என் பொண்ணோட வாழ்க்கையில குறுக்க புகுந்தது பத்தாதுன்னு.. இப்போ என்னோட பேத்தி வாழ்க்கையை கேள்விக்குறியாக்கிட்டு, இப்போ எங்க வீட்லயும் நுழைஞ்சு இன்னும் என்ன பண்ணலாம்னு இப்படி அப்பாவியா வந்து நடிக்கிற?” முத்துப்பாட்டி கோபமாக கேட்க,
“என்னோட பெண்ணுக்கு ஒரு நல்லது நடக்கப் போகுதுன்னு எவ்வளவு சந்தோஷமா இருந்தோம்.. இப்படி ஒட்டு மொத்தமா எல்லா சந்தோஷத்தையும் அழிச்சிட்டியே.. இப்படி எங்க சந்தோஷத்துல சமாதி கட்டி அதுல உன்னோட வாழ்க்கையை அமைச்சிருக்கியே.. அது நல்லப்படியா..” என்ற போதே,
“கலை போதும் நிறுத்து..” என்று பூங்கொடி கூறினார். அவர்கள் இருவரும் இதுவரை தங்கள் ஆதங்கத்தை கோபமாக வெளிப்படுத்தினர். ஆனால் இப்போது கலை பேசுவது சாபம் விடுவது போல் ஆகிவிடும்.. அப்படி பேசுவது தவறு இல்லையா? இந்த சாபம் சுடருக்கு மட்டும் தானா? அது தன் மகன் மகியையும் பாதிக்கும் தானே.. நடந்த விஷயங்களில் கோபம் இருக்கலாம். ஆனால் அது வெறுப்பாய் மாறிடக் கூடாது.. இனி சுடரின் ஒவ்வொரு விஷயமும் மகியை சார்ந்ததல்லவா.. மகி யார்? கலைக்கு அண்ணன் மகன் தானே..
இத்தனை விஷயங்கள் நடந்த பின்பும் அவரும் புகழேந்தியும் அருள்மொழிக்காக பார்க்கும் போது, கலை பேசுவதை கூட யோசித்து பேச வேண்டாமா? அதனால் தான் இருவரும் என்ன நினைத்தாலும் பரவாயில்லை என்று கொஞ்சம் கண்டிப்பது கலையின் பெயரை அழைத்தார். கலைக்கும் அது புரிந்தது போல உடனே அமைதியாகிவிட்டார்.
இதுக்கு மேலும் சுடர் இங்கு இருந்தால் மற்ற இருவரும் என்னவெல்லாம் பேசுவார்களோ என்று பயந்த பூங்கொடி.. “சுடர் நடந்ததையெல்லாம் எல்லோரும் மறந்துடுவோமா..? எல்லோரோட மனசுலயும் கோபம் இன்னும் இருக்கும்.. எங்களை பார்த்தும் பார்க்காதது போல போகாம எதுக்கு இப்போ இங்க முன்னாடி வந்த.. முதலில் இங்க இருந்து கிளம்பு..” என்றவர் மற்ற இருவரும் வருகிறார்களா என்று கூட பார்க்காமல் சன்னிதானத்திற்குள் நுழைந்தார். கலையும் பாட்டியும் சுடரை முறைத்துவிட்டு பூங்கொடி பின்னாலேயே சென்றனர்.
பாட்டியும் கலையும் பேசியது கூட சுடருக்கு பெரிதாக தெரியவில்லை. ஏனெனில் எப்போதும் அவர்கள் அவளிடம் நன்றாக பேசியதில்லை. ஆனால் பூங்கொடி பேசியது தான் கஷ்டமாக இருந்தது. அவர்களிடம் இருந்து இந்த பேச்சை அவள் எதிர்பார்க்கவில்லை. புகழேந்தி மாமா அப்போது என்ன சொல்லியிருந்தார். அருள்மொழி திருமணம் முடிந்ததும் இவர்களுக்கும் திருமணம் செய்து வைப்பதாக தானே கூறினார். ஆனால் பூங்கொடி அத்தை ஒதுங்கி போக சொல்வது ஏன்? என்று குழம்பியவளுக்கு, மனதில் இருந்த வருத்தமெல்லாம் மகியின் மீது கோபமாக திரும்பியது. அப்போது வீட்டுக்குள் வந்து அடைந்தவள் தான்.. நடந்ததை நினைத்து கண்ணீர் சிந்தவில்லையென்றாலும், கவலையோடு படுத்திருந்தாள்.
நடந்ததை சொல்லி முடித்தவள், “நீ ஒன்னும் என் கூட இருக்க வேண்டாம்.. முதலில் நீ வீட்டுக்கு போ.. நமக்கு நடந்தது ஒன்னும் கல்யாணம் இல்ல.. யாருக்கும் என்னை பிடிக்காது.. யாரும் எனக்கும் வேண்டாம்..” என்று சொல்லியப்படி அழுதாள்.
“அய்யோ சுடர் என்ன பேசற நீ.. இன்னும் நடந்ததை யாரும் மறந்திருக்க மாட்டாங்க.. அந்த நேரம் பார்த்து நீ அவங்க முன்ன போய் நின்னதும் கோபத்தை காட்டிட்டாங்க.. அப்பா என்ன சொன்னார்னு உனக்கு தெரியுமில்ல.. சீக்கிரம் எல்லோரும் நம்மை ஏத்துப்பாங்க பாரு.. பொறுமை எப்போதும்.அவசியம்.. அதைவிட்டுட்டு நீயே இது கல்யாணம் இல்லன்னு பேசினா எப்படி? இங்கப்பாரு நீ எதுவும் சாப்பிடலன்னு தெரியும்.. முதலில் நான் ஏதாவது செஞ்சு கொண்டு வரேன்.. ரெண்டுப்பேரும் சாப்பிடுவோம்.. அப்போ தான் உனக்கு சண்டை போடவும், எனக்கு உன்னை சமாதானப்படுத்தவும் தெம்பு கிடைக்கும்..” என்று சொல்லி சிரித்தவன் அவளை கட்டிலில் அமர வைத்துவிட்டு வெளியில் வந்தான்.