(Reading time: 11 - 22 minutes)

தொடர்கதை - நெஞ்சோடு கலந்திடு உறவாலே!! - 21 - சித்ரா. வெ

Nenchodu kalanthidu uravale

ப்படியும் அப்பா தங்களோடு வந்துவிடுவார்.. தங்களோடு தான் இருப்பார் என்ற நம்பிக்கையோடு தன் அன்னையுடன் லண்டனுக்கு சென்ற சுடரொளிக்கு.. அவர் எப்போதும் இங்கு வரப்போவதில்லை, வரவும் முடியாது என்பதை புரிந்துக் கொள்ள கொஞ்ச நாள் ஆனது. தன் அன்னை புதிதாக ஒருவரை “இவர் தான் உன் அப்பா” என்று அறிமுகப்படுத்திய போது அந்த உறவை அப்போதைக்கு சுடரொளியால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. பின் எப்போதும் அவளால் ஏற்றுக் கொள்ள முடியாத சூழ்நிலையும் வந்தது.

தந்தை தான் உடன் இல்லை. ஒருவேளை தாயின் அரவணைப்பு இருந்திருந்தாலாவது அவள் தன் தந்தையை காலப்போக்கில் மறந்திருப்பாளோ.. ஆனால் வெண்மதிக்கு தன் புதிய கணவனை எப்போதும் தன் கையைவிட்டு அவன் போகாதபடி வைத்துக் கொள்வதிலேயே காலம் போய்விட்டது. என்ன இருந்தாலும் அவள் மூன்றாவது மனைவி தானே.. அவளுக்கு பின் தன் கணவனின் பார்வை வேறொரு பெண் மீது பட்டுவிடக் கூடாது என்பதில் கவனமாக இருந்தாள்.  செங்குட்டுவனுக்கு அவள் மேல் இருக்கும் மயக்கம் எப்போதும் தீராதப்படி பார்த்துக் கொள்வதிலேயே அவளுக்கு நேரம் சரியாக இருந்தது. இதில் மகளது பொறுப்பை தன் தாயிடம் தான் ஒப்படைத்து இருந்தாள்.

வடிவிற்கு நாடு விட்டு நாடு வந்த பின்பும் கூட கதிரவனின் மீது உள்ள கோபம் குறைந்தபாடில்லை. அதை இங்கேயும் சுடரொளி மீதே காண்பிக்க ஆரம்பித்தார். அதிலும் அடிக்கடி அப்பா வேண்டும் என்று அவள் அடம்பிடிக்க, அவளிடம் மிகவுமே கண்டிப்பாக இருக்க ஆரம்பித்தார். அவள் தெரியாமல் ஏதாவது தவறு செய்தால் கூட, அதற்கு ஏதாவது தண்டனை கொடுப்பார்.

வெண்மதி மற்றும் வடிவு சொன்னதற்காக செங்குட்டுவன் சட்டப்படி சுடரொளியை தன் மகளாக்கி கொண்டார். செங்குட்டுவனின் மகள் என்ற அந்தஸ்து மூலம் சுடரொளிக்கு எல்லா வசதிகளும் கிடைத்தாலும், வடிவின் கண்டிப்பும் கதிரவன் மேல் இருந்த பாசத்தின் காரணமாக சுடரொளி எதையும் சரியாக அனுபவித்ததில்லை. இதில் அங்கு சென்றதில் இருந்து தாயின் முகத்தை அவள் சரியாக பார்ப்பது கூட இல்லை. எப்போதும் தன் கணவனுடன் வெளியில் சென்றுவிடும் வெண்மதியின் பாசம் அவளுக்கு   அன்றிலிருந்து கிடைத்ததே இல்லை.

அப்போதிலிருந்தே தன் தந்தையின் நினைவுகள் தான் அவளுக்கு துணையாகி போனது. பள்ளியிலோ வீட்டிலோ எது நடந்தாலும் அதை  ஒரு டைரியில் தந்தைக்கு கடிதம் எழுவது போல் எழுதி தன் தந்தையிடமே நேரில் அனைத்தையும் பகிர்ந்துக் கொள்வதாக நினைத்துக் கொள்வாள். அதே போல் தன் நினைவில் பசுமையாக பதிந்துவிட்ட தந்தையின் முகத்தை டைரியில் வரைந்தும் வைத்திருப்பாள். ஆரம்பத்தில் சரியாக வரைய தெரியாமல் உருவத்தை கொஞ்சம் மாற்றி வரைந்திருந்தாலும் நாளடைவில் அவள் அழகாக வரைய கத்துக் கொண்டாள்.

Pencilஹாய் பிரெண்ட், அத்தியாயத்தை படித்து விட்டு, உங்கள் கருத்தை பகிர மறக்காதீர்கள். உங்கள் ஒவ்வொரு கமன்ட்டும் எழுத்தாளருக்கு மிக பெரிய டானிக். உங்கள் கமண்ட்டை பகிர இதை க்ளிக் செய்யுங்கள் down

வீட்டில் தனித்து விடப்பட்டு அதுவும் பாட்டியின் கண்டிப்புகள், தண்டனைகள், அவள் தந்தையை சாக்கிட்டு அவளுக்கு விழும் திட்டுகள் இதற்காகவே அவளுக்கு வீட்டை விட்டு வெளியில் இருப்பது பிடிக்கும். ஆனால் பள்ளியிலும் திடிரென வேறு மொழி பேசுபவர்கள் இருக்குமிடம் அவளுக்கு ஒரு வித்தியாசமான சூழலை கொடுக்க, அதுவும் அவளுக்கு பிடித்தமில்லாமல் தான் இருந்தது. அப்படி இருக்கும் போது தான் அவளுக்கு அங்கு அமுதனின் நட்பு அறிமுகமானது.

அமுதவாணன் வயதில் அவளை விடவும் பெரியவன், இருந்தாலும் தன் வகுப்பு தோழியின் அக்கா மூலம் அறிமுகமான அவன், தமிழ் பேசும் காரணத்தினாலேயே அவனுடன் நெருக்கமாகிவிட்டாள். அவனுக்கு சுடரொளியை மிகவும் பிடிக்கும். வாய் வார்த்தையில் நண்பர்கள் என்று சொல்லிக் கொண்டாலும், சுடரை அவன் தன் தங்கை போல் தான் பாவிப்பான். அவனுடைய நட்பே அவளுக்கு அங்கு ஒரு பாதுகாப்பு போல் அமைந்ததால், அவளுக்கு தவறான நட்புகள் அமைந்ததில்லை.

வீட்டில் பெற்றோர்களால் மட்டும் தான் அவன் அமுதன் என்று அழைக்கப்படுவான். மற்றப்படி பள்ளியில் அவன் சார்லஸ் தான்.. நாளைடைவில் அதையே சுருக்கி சார்லி என்று சுடர் அழைக்க ஆரம்பித்தாள்.

அமுதனின் பள்ளி காலம் முடிந்து அவன் பல்கலை கழகத்தில் எடுத்து வைத்த போது அவனை அடிக்கடி பார்க்க முடியாத காரணத்தினால், அவனை , அடிக்கடி வீட்டில் சென்று சந்திக்க ஆரம்பித்தாள் சுடர்.. அப்போது தான் சுடர் ஆனந்திக்கும் அறிமுகமானாள். இருந்தும் சுடர் தன் நண்பனின் மகள் என்று அவருக்கு தெரியவில்லை. சுடரொளி முற்றிலும் வெண்மதியின் ஜாடை.. ஆனந்தி வெண்மதியை இதுவரை நேரில் பார்த்ததில்லை. புகைப்படத்தில் பார்த்திருந்தாலும், தன் நண்பனுக்கு அவள் துரோகம் செய்த காரணத்தினால் வெண்மதியின் முகமே அவரது ஞாபகத்தில் இல்லை. அதனால் சுடரை யாரென்றும் அவருக்கு தெரியவில்லை. தன் மகனின் தோழி என்ற முறையில் மட்டுமே அவளிடம் அன்பாக பழகி வந்தார்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.