(Reading time: 11 - 22 minutes)

சுடரொளியும் பள்ளி படிப்பு முடிந்து பல்கலைகழகத்தில் சேர்ந்துவிட்டாள்.  ஒரு சமயம் அந்த பல்கலைக்கழகத்தில் ஒரு ஓவிய போட்டி நடந்தது. இப்போது சிறிய வயதாக இருக்கும் ஒரு நபர் 10 வருடங்கள் கழித்து எப்படி இருப்பார் என்று கற்பனை செய்து வரைய வேண்டும். ஒவ்வொருத்தர் தங்களுக்கு விருப்பமான ஒருவரின் புகைப்படத்தை வைத்துக் கொண்டு வரைய ஆரம்பிக்க, சுடரொளி மட்டும் தன் மனதில் பதிய வைத்திருந்த தந்தை இப்போது எப்படி இருப்பார் என வரைய நினைத்தாள். அதற்கு அனுமதியிம் வாங்கிக் கொண்டு வரைய ஆரம்பித்தாள்.

அமுதவாணனின் தந்தை அந்த பல்கலை கழகத்தில் தான் பேராசியிராக பணியாற்றினார். தற்போது அவர் உயிரோடு இல்லை. அவருக்கு மதிப்பு கொடுக்கும் விதமாக ஆனந்தியை அந்த போட்டிக்கு நடுவராக அழைத்திருந்தனர். ஓவியங்கள் வரையப்பட்டு முடிந்ததும் அதை ஆனந்தி மேற்பார்வையிட, இப்போது தன் நண்பன் இருக்கும் தோற்றத்தை அச்சு அசலாக வரைந்திருந்ததை பார்த்து  விரைந்தவர், அந்த ஓவியத்தை வரைந்தது யாரென்று விசாரித்த போது தான், சுடர் தன் நண்பன் கதிரின் மகள் என்பதை அறிந்துக் கொண்டார். ஓவியத்திற்கான முதல் பரிசு சுடரொளிக்கே கிடைத்தது.

ஆனால் அதையும் விட தன் தந்தையை ஆனந்திக்கு தெரியும் என்பது தான் அவளுக்கு மிகவும் மகிழ்ச்சியான செய்தியாக இருந்தது. தன் தந்தை இங்கு வர முடியவில்லையென்றால் என்ன? நான் என் சொந்த காலில் நிற்கும் போது என் தந்தையோடு போய் இருந்துக் கொள்வேன் என்று எப்போதோ அவள் மனதில் உறுதி ஏற்றிருந்தாள். ஆனாலும் இது வரையும் தந்தை பற்றி எந்த ஒரு தகவலும் இல்லாமல் இருந்தவளுக்கு, இப்போது அவரை பற்றி தெரிந்துக் கொள்ள ஒரு வாய்ப்பு கிடைத்ததில் அக மகிழ்ந்தாள். அந்த மகிழ்ச்சியோடே “அப்பா எப்படி இருக்கார் ஆன்ட்டி..” என்று கேட்டாள்.

“ம்ம் ரொம்ப நல்லா இருக்கார்.. உனக்கு தெரியுமா? உங்க அப்பா மட்டும் இப்போ தனி இல்லை.. சித்தி அப்புறம் ரெண்டு தம்பிங்க கூட இருக்காங்க..” என்று அவர் சொன்னதும், அவள் மனதில் நிறைந்திருந்த் மகிழ்ச்சி அப்படியே குறைய ஆரம்பித்தது.

தன்னை போலவே அப்பாவும் தன் நினைவோடு இருப்பார் என்று இவள் நினைத்திருக்க, அவருக்கென்று இப்போது ஒரு குடும்பம் இருக்கிறது என்ற செய்தியில் ஏதோ ஒரு ஏமாற்றத்தை உணர்ந்தாள். ஆனால் தான் நினைப்பது ஒரு வகையில் சுயநலமும் கூட, அம்மா தனக்கென்று ஒரு வாழ்க்கையை தேடிக் கொள்ள, இவர்கள் இருவருமே உடனில்லாத பட்சத்தில் அவர் மட்டும் தனிமையில் கஷ்டப்பட வேண்டுமா என்று நினைத்து தன்னை சமாதானப்படுத்திக்கொண்டாள்.

சில நொடிகளில் அவள் முகத்தில் வந்து போன மாற்றத்தை கண்டுக் கொண்டவர், “உங்கம்மா பிரிவைக் கூட உங்க அப்பாவால தாங்கிக்க முடிஞ்சுது.. ஆனா நீயில்லாம அவன் கிட்டத்தட்ட ஒரு பைத்தியக்காரன் போல சுத்திட்டு இருந்தான் தெரியுமா? அவனுக்கு அவன் பார்க்கிற வேலையும் இல்லாம இருந்தா கிட்டத்தட்ட அப்படித்தான்.. அப்போ தான் அவனுக்கு கவர்ன்மெண்ட் காலேஜ்ல வேலை கிடைச்சது.. அதை முயற்சி செஞ்சு மாத்திக்கிட்டு சென்னைக்கு வந்துட்டான். இட மாற்றம் கூட அவனை அப்படியே தான் வச்சுருந்தது.

அப்புறம் அவனோட வேலைப் பார்த்த புகழேந்தின்னு ஒருத்தர், அவரோட தங்கச்சிய கதிருக்கு கல்யாணம் செஞ்சு வைக்க நினைச்சாரு.. அந்த நேரம் நானும் அமுதா அப்பாவும் இந்தியாக்கு போயிருந்தோம்.. நாங்க தான் அவனோட மனசை மாத்தி அவனை கல்யாணத்துக்கு சம்மதிக்க வச்சோம்.. எழில் ரொம்ப நல்ல பொண்ணு.. அவனை புரிஞ்சு நடந்து அப்புறம் ரெண்டுப்பேரும் நல்லா வாழறாங்க..” என்று கூறினார். ஏதோ ஒரு வகையில் சுடருக்கு அந்த செய்தி நிம்மதியை தான் கொடுத்தது.

“இரு உன்னோட அப்பா கூட உன்னை பேச வைக்கிறேன்..” என்று சொல்லி கதிரவனுக்கு தொடர்பு கொண்ட போது அமுதனும் அங்கு தான் இருந்தான். ஆம் சுடர் கதிரவனின் மகன் என்று தெரிந்ததும் அவளை வீட்டுக்கு அழைத்து சென்று தான் ஆனந்தி இத்தனையும் பேசியது. இப்போது கதிரவனுக்கு தொடர்பு கொண்டதும், அலைபேசியை ஸ்பீக்கரில் போட்ட ஆனந்தி கதிரவனோடு பேச காத்திருக்க, சுடருமே நீண்ட வருடங்களுக்கு பிறகு தந்தையின் குரலை கேட்கப் போவதில் ஒருவித பரவசத்தோடு இருந்தாள். அப்பா தன்னோடு என்ன பேசுவார்? உணர்ச்சிவசப்படுவாரா? இல்லை மகிழ்ச்சியில் பேச்சே இல்லாமல் போகுமா? என்றெல்லாம் நினைத்தப்படி தந்தையின் குரலை கேட்க ஆவலோடு இருந்தாள்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.