(Reading time: 13 - 26 minutes)

தொடர்கதை - நெஞ்சோடு கலந்திடு உறவாலே!! - 25 - சித்ரா. வெ

Nenchodu kalanthidu uravale

ன்னத்தான் மகி அவளிடம் மன்னிப்பு கேட்டு அவளை வீட்டிற்கு அழைத்துச் சென்றாலும், தீம் பார்க்கில் நடந்த சம்பவம் சுடரொளியின் மனதில் பாதிப்பை உண்டாக்கியிருந்தது. அவர்களுக்கு தன்னை சுத்தமாக பிடிக்கவில்லை என்பதை உணர்ந்துக் கொண்டாள் அவள். மகியின் சமாதான செயல் கூட, இவர்கள் இப்படி நடந்துக் கொண்டது எழிலுக்கோ இல்லை பூங்கொடிக்கோ  தெரிந்தால் அவர்கள் வருத்தப்படுவார்கள் என்பதற்காக  மட்டுமே இருக்கும் என்ற புரிதல் தான் அவளுக்கு அப்போது தோன்றியது. அதனால் இனி அந்த வீட்டிற்கு செல்ல கூடாது என்பதில் உறுதியாக இருந்தாள்.

எழில் எவ்வளவு வற்புறுத்தி கூப்பிட்டும் தன்னால் வர முடியாது என்று சொல்லிவிட்டாள். ஏதாவது பிரச்சனையா? என்று எழில் கேட்டதற்கு ஒன்றுமில்லை என்று சமாளித்து விட்டாள். சுடரை தனியாக வீட்டில் விட்டுவிட்டு செல்லவும் முடியாது, கதிர் அவளிடம் சரியாக பேசினால் கூட பரவாயில்லை.  அதுவும் இல்லை என்பதால் வார விடுமுறை நாட்களில் புவி, தமிழை மட்டும் அங்கு  அனுப்பிவிட்டு எழில் சுடருக்கு துணையாக வீட்டிலேயே இருந்துக் கொள்வாள்.

இப்படியே மூன்று வாரங்கள் கடந்த நிலையில், ஒவ்வொரு வாரமும் சுடர் வருவாள் என்று எதிர்பார்த்த மகிக்கு ஏமாற்றம் தான் கிடைத்தது. அதுவுமில்லாமல் பூங்கொடி வேறு,

“சுடர் வருத்தப்பட்றா மாதிரி நீங்க நடந்துக்கிட்டீங்களா மகி.. இங்க வர விருப்பமில்லன்னு எழில்க்கிட்ட அவ சொன்னாளாம்.. என்ன இருந்தாலும் அவ உன்னோட அத்தைக்கு பொண்ணு தான் டா.. அவளை எதுவும் கஷ்டப்படுத்துற மாதிரி நடந்துக்காதீங்கன்னு சொன்னேன் இல்ல..” என்று கேட்கவும், மகிக்கு ஒரு மாதிரி உறுத்தலாக வேறு இருந்தது.

அதுவே எப்போதும் மகி சுடரை பற்றி நினைத்துக் கொண்டிருக்க காரணமாய் அமைந்தது. இதில் தமிழ், புவிக்கு வேறு பரிட்சை நடப்பதால் அடுத்து வந்த விடுமுறை நாளிலும், எழில் வீட்டில் யாருமே வர முடியாமல் போனது. ஞாயிற்றுக் கிழமை என்பதால் வீட்டில் மற்றவர்களுக்காக பூங்கொடி பிரியாணி செய்து வைத்திருக்க, எழில் வீட்டுக்கு எடுத்து செல்லும்படி மகியிடம் கொடுத்தனுப்பினார். இது அவ்வப்போது நடப்பது  தான் என்றாலும், ஏனோ இன்று சுடரை பார்க்கும் ஆவலில் அவன் உற்சாகமாக கிளம்பினான்.

அவன் அங்கு செல்லும்போது கதிரும் அங்கு தான் இருந்தார். ஏற்கனவே பூங்கொடி எழிலுக்கு அலைபேசி மூலம் தொடர்புக் கொண்டு மகியிடம் பிரியாணி கொடுத்தனுப்பும் விஷயத்தை கூறியதால், அவனை அங்கு அனைவரும் எதிர்பார்த்திருக்க, “வா மகி.” என்று  அவர் ஆர்வமாக வரவேற்றார். அவன் வந்தது தெரிந்து காபி போட்டு வந்து கொடுத்துவிட்டு சென்ற எழில் பின் அவர் வேலையில் மூழ்கிவிட்டார். விடுமுறை நாள் என்பதால் கதிர் தொலைக்காட்சி முன் இருக்க, மகியும் அங்கேயே அமர்ந்துக் கொண்டான். தமிழ், புவியும் கூட அங்கு தான் செஸ் விளையாடிக் கொண்டிருந்தனர். ஆனால் சுடர் மட்டும் அங்கு இல்லை.

அவள் வீட்டில் தான் இருக்கிறாளா? இல்லை வெளியில் எங்காவது சென்றிருக்கிறாளா? என்று தெரியவில்லை. அவனது ரெஸ்ட்டாரண்ட் எப்படி இயங்குகிறது என்று கதிர் கேட்கும் கேள்விகளுக்கு வாய் பதில் சொல்லிக் கொண்டிருந்தாலும், மனம் என்னவோ சுடரை சுற்றியே இருந்தது. அந்த வீட்டில் இரண்டு படுக்கை அறைகள் தான் இருக்கும்.. சுடரின் வருகையால் தமிழுக்கும் புவிக்கும் அவர்களுக்கென்று படிப்பதற்காக ஒதுக்கப்பட்ட அறையையே இப்போது அவர்களது படுக்கை அறையாக மாற்றிவிட்டதாக எழில் ஒருமுறை தன் அன்னையிடம் சொல்லிக் கொண்டிருந்ததை மகி கேட்டிருந்ததால், தமிழும் புவியும் ஏற்கனவே இருந்த அறை தான் இப்போது சுடரின் அறையாக இருக்கும் என்று அவன் தெரிந்துக் கொண்டான். அவன் அமர்ந்திருந்த திசைக்கு எதிரில் தான் அந்த அறை இருந்ததால், அந்த அறையை கவனித்தான். கதவு லேசாக திறந்திருந்தது. ஆனால் சுடர் இருக்கிறாளா? என்று தெரியவில்லை. கதிர், எழிலிடம் சாதாரணமாக கூட சுடர் பற்றி கேட்க சங்கடமாக இருந்தது. இப்படியே சிறிது நேரம் கழிந்திருக்க, கதிரின் அலைபேசி ஒலி எழுப்பவே அவர் எழுந்து தன் அறைக்குச் சென்றுவிட்டார்.

தந்தை அப்படி போனதும் தங்களுக்கு பிடித்த சேனலை மாற்றுவதற்காக புவியும் தமிழும் தொலைக்காட்சி முன் வந்தனர். அப்போது புவி மகியின் அருகில் வந்து அமர்ந்தான். யாருக்கும் கேட்காத குரலில் அவனிடம், “உங்க அக்கா வீட்ல இல்லையா டா..” என்று ரகசியமாக மகி கேட்க,

Pencilஹாய் பிரெண்ட், அத்தியாயத்தை படித்து விட்டு, உங்கள் கருத்தை பகிர மறக்காதீர்கள். உங்கள் ஒவ்வொரு கமன்ட்டும் எழுத்தாளருக்கு மிக பெரிய டானிக். உங்கள் கமண்ட்டை பகிர இதை க்ளிக் செய்யுங்கள் down

“அக்கா அவங்க ரூம்ல இருக்காங்க மாமா..” என்று அவன் பதில் கூறினான்.

“நான் வந்து ரொம்ப நேரமாகுதே டா.. இன்னும் உங்க அக்கா வெளியிலேயே வரலயே.. நிஜமா வீட்ல தான் இருக்காளா?

“அப்பா வீட்ல இருக்கப்போ அக்கா வெளிய வர மாட்டாங்க.. நாங்க வீட்ல இருந்தா கூட ரூம்லயே தான் இருப்பாங்க.. அம்மா மட்டும் இருக்கும் போது தான் வெளிய வருவாங்க..”

“சாப்பிட கூட வர மாட்டாளா..?”

“இல்லை வர மாட்டாங்க.. அம்மா ரூம்க்கே கொண்டு போய் தான் சாப்பாடு கொடுப்பாங்க..” என்றவன்,

“மாமா அக்காவை பார்த்தா பாவமா இருக்கு.. நான் அவங்கக்கிட்ட பேசிக்கட்டுமா?” என்று பரிதாபமாக கேட்டான். எதற்காக நம்மிடம் கேட்கிறான் இவன் என்று மகி புரியாத பார்வை பார்க்க, அதை புவி எப்படி புரிந்துக் கொண்டானோ..

“என்க்கு அக்காவை ரொம்ப பிடிச்சிருக்கு.. அக்காக்கிட்ட பேசணும்.. அக்கா நல்லா ட்ராயிங் வரையறாங்க.. அதேபோல நானும் வரையணும்.. அதே சமயம் எனக்கு கிரிக்கெட்டும் பிடிக்கும்.. ஸ்கூல் கிரிக்கெட் கோட்சிங்ல சேர்த்து விட சொன்னா அம்மா இன்னும் கொஞ்சம் போகட்டும் இப்போ தமிழை மட்டும் சேர்த்து விட்றேன்னு சொல்றாங்க.. அதனால உன்கூட தான் இப்போதைக்கு கிரிக்கெட் விளையாட முடியுது.  அக்காக்கூட பேசினா நீ கிரிக்கெட்ல சேர்த்துக்க மாட்டேன்னு சொல்ற.. அக்காக்கூட பேசிக்கட்டுமா? அப்பவும் என்னை நீ கிரிக்கெட்ல சேர்த்துப்பல்ல..” என்று கேட்க,

அன்று பேச்சுவாக்கில் புவியை மிரட்டியது மகிக்கு ஞாபகம் இல்லாததால் எப்போது அப்படி சொன்னோம் என்று புரியாமல் முழித்தான்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.