(Reading time: 15 - 29 minutes)

தொடர்கதை - செந்தமிழ் தேன்மொழியாள் - 01 - மது

Senthamizh thenmozhiyaal

நீலம்!!

காணும் இடங்களில் எல்லாம் ஆட்சி செய்து கொண்டிருந்தது நீலவண்ணம். ஆகாயம் எது சமுத்திரம் எது என்று பிரித்தறியா வண்ணம் ஒன்றில் ஒன்று சங்கமம்.

உன்னைக் கட்டித் தழுவாமல் மோட்சம் ஏதடி என்று வளைந்து கடலிடம் யாசிக்கும் தொடுவானம்.

ஆனால் அவளுக்கோ மண் மீது தான் மோகம். எத்தனை முறை அணைத்துக் கொண்டாலும் ஓயாது அவளது அலைக்கரம்.

நிலமோ விடியலே வாழ்வின் ஆதாரம் என்று நித்தம் கொள்ளும் தவம். இவர்தம் காதல் கதைகளை மெல்லக் காதில் சொல்லிச் செல்லும் ஈரக்காற்றும்.

யுகம் யுகமாய் இந்த பஞ்சபூத காவியம் அரங்கேறிக் கொண்டு தான் இருக்கிறது என்றாலும் ஒவ்வொரு தருணமும் ஒரு வித அழகல்லவா.

ந்தக் கொள்ளை அழகை அவளது விழித்திரை படம் பிடித்து நியூரான்கள் வாயிலாக மூளைக்கு அனுப்பிய போதும், அவளது மூளை மடிப்புகளின் ஒவ்வொரு இடுக்கிலும் வேறொரு சிந்தனையே  நிரந்தரமாய் குடிகொண்டிருந்ததால் அந்த அழகை உணர்ந்தாள் இல்லை.

கால் போன போக்கில்  ‘செஷல்ஸ்’ பீச்சின் வெண்மணல் பரப்பினில்  வெண்பஞ்சு பாதங்களைப் புதைத்து தனது சுவடுகளைப் பதித்துச் சென்றாள்.

“அக்கா, நீ இங்கிருக்கிறாயா. வா நமக்கு ஆயத்த பணிகள் இருக்கு. இன்னும் சில மணி நேரங்களில் கொண்டாட்டங்கள் முடிந்ததும் புறப்பட வேண்டும்” ‘ஆதி’ என்று அவள் அழைக்கும் ‘அடீபேயோ ஒமேஹியா ரகடோமலாலா’ என்ற திருநாமம் கொண்டவன்  தூயத்தமிழில் அவளிடம் கூற ஒரு தலைசைப்புடன் அவனைத் தொடர்ந்தாள்.

ஆறு வருடங்களுக்கு முன் அவள் முதன் முதலாய் இதே இடத்தில் தான் அவனை சந்தித்தாள்.

அவனது பெயரைக் கேட்டு அதை சரியான உச்சரிப்பில் சொல்ல முயற்சித்து தோல்வியை ஒப்புக் கொண்டவள் “உன்னை ஆதி என்று தமிழில் அழைக்கிறேன்” என்று அவனுக்குச் செல்லப் பெயரைச் சூட்டினாள்.

அவளுக்கு ஆதி மற்றவருக்கு ஆடீ ஆகிப் போனான்.

“எங்க ஊர்ல ஒரு பாட்டு இருக்கு. ஒமாஹா சியா என்று” அப்பாடலின் வரிகளைப் பாடியவள்,  “நானும் அந்த ஓமாஹா என்றால் என்ன அர்த்தம் என்று நிறையவே யோசித்திருக்கிறேன். உன் பேரைக்  கேட்டு தான் அந்த வார்த்தையை எழுதியிருப்பாங்க போல. அந்தப் பாட்டு கூட நீரின் அடியில் இருந்து தான் ஆரம்பம் ஆகும்” தெளிவான பிரஞ்சில் அவள் அவனிடம் சொல்லவும் சிறு வெட்கத்தோடு புன்னகைத்தான்.

அவனுக்குப் பன்னிரண்டு வயது தான் ஆகிறது என்று அறிந்து ஆச்சரியம் கொண்டாள். அவனது உயரமும் உடலின் பலமும் இருபது வயது வாலிபனை ஒத்து இருந்த போதும் அவன் முகத்தில் இன்னும் சிறுபிள்ளைத்தனம் குடியிருந்ததைக் கண்டாள்.

ஏனோ அவனைப் பார்த்ததும் இவளுக்கு மிகவும் பிடித்துப் போனது.

மடகாஸ்கரை சேர்ந்த ஆதி மிகவும் ஏழ்மைக் குடும்பத்தைச் சேர்ந்தவன். அவனின் ஒரே சொந்தமான பாட்டியை  மடகாஸ்காரிலேயே விட்டுவிட்டு சிறு வயதிலேயே அந்த “சில்வர் லைனிங்” ரிசார்ட்டில் வேலைக்குச் சேர்ந்திருந்தான்.

வருடம் ஒரு முறை அவன் ஊரில் நடக்கும் திருவிழாவிற்குச் செல்லும் போது பாட்டியை பார்த்து வருவதோடு சரி. மற்றபடி கடல் தான் அவனது தாய்மடி.

தான் இங்கே இருக்கும் வரை தனக்கு உதவியாக ஆதி இருக்கட்டும் என்று ரிசார்ட்டின் மேனஜரிடம் அவள் சொல்ல அன்றிலிருந்து அவளை நிழல் போலவே தொடர்ந்திருந்தான்.

அந்த ஒரே ஒரு நாள் மட்டும் விதி சதி செய்ததோ. ஒரு வேளை அன்று அவன்  உடனிருந்திருந்தால் இன்றைக்கு இந்த நிலைமையில் அவளைக் காண வேண்டி இருந்திருக்காதோ.

அப்படி ஆகியிருக்காதோ என்று இப்போது நினைத்துப் பயனேதும் இல்லையே. டைம் மெஷினில் சென்று கடந்த காலத்தில் நடந்த நிகழ்வுகளை மாற்றவா முடியும்.

Pencilஹாய் பிரெண்ட், அத்தியாயத்தை படித்து விட்டு, உங்கள் கருத்தை பகிர மறக்காதீர்கள். உங்கள் ஒவ்வொரு கமன்ட்டும் எழுத்தாளருக்கு மிக பெரிய டானிக். உங்கள் கமண்ட்டை பகிர இதை க்ளிக் செய்யுங்கள் down

செஷல்ஸ் நாட்டின் மாஹி தீவின் பியருக்கு ( கப்பல் துறை ) அவர்கள் இருவரும் வந்து சேர்ந்தனர்.

அங்கே மலர் அலங்காரங்களுடன் தனது முதல் பயணத்திற்கு ஆயத்தமாக இருந்தாள் சமுத்திர முத்து (ocean pearl) எனப் பெயர் சூட்டப்பட்ட அந்த உல்லாச மிதவை.

ஐம்பது பயணிகளுடன் தனது முதல் பயணமாக செஷல்ஸின் மாஹி தீவிலிருந்து மடகாஸ்கர் வழியாக மொரிஷியஸுக்குப்  பதினைந்து நாட்களில் பயணிக்கவிருந்தாள்.

டைட்டானிக் போல் பிரம்மாண்டமான கப்பலாக இல்லாமல்  சிறிய கப்பல் அமைப்பில் இருந்தாலும் சகல நவீன வசதிகளையும் கொண்டிருந்தாள் சமுத்திர முத்து.

க்ரூ (கப்பலில் பணிபுரியும் குழுவினர்) அனைவரும் தங்கள் உடைமைகளோடு கப்பலில் பிரவேசம் செய்து கொண்டிருந்தனர்.

தங்களுக்கென ஒதுக்கப்பட்ட அறைகளில் தங்கள் உடைமைகளை பாதுகாப்பாய் வைத்துவிட்டு தங்கள் பணிகளை கவனிக்கச் சென்றனர்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.