(Reading time: 15 - 29 minutes)

கப்பல் சீரான வேகத்தில் ப்ராசலின் தீவை நோக்கிப் பயணித்துக் கொண்டிருக்க திடீரென அங்கே ஏற்பட்ட சலசலப்பு  அவளின் செவிகளில் எதிரொலிக்க இமைகளைப் பிரித்தாள்.

“அவர் தான் க்ரூஸ் ஓனர் சிபி சாலமன்” அங்கிருந்த பணியாளர்கள் பேசிக் கொண்டது அவளுக்கும் தெளிவாகக் கேட்டது.

அடர் நீல ஜீன்ஸும் ஆகாய நீலத்தில் டிஷர்ட்டும் அணிந்திருந்தவன் பார்வைக்கு மிடுக்காய் கம்பீரத்துடனே இருந்தான் என்ற போதும் அவளது பார்வை அவனருகில் இருந்த அந்த அழகி மீதே படிந்திருந்தது. இல்லை இல்லை அவள் அணிந்திருந்த ஆடை மீது தான் அவளது கவனம் இருந்தது.

பச்சையும் நீலமுமாய் கடலின் வண்ணத்தில் அலைஅலையாய் அவள் தேகத்தில் மிதந்த அந்த ஆடையின் அழகு அவளை வெகுவாய் ஈர்த்தது.

விளம்பரப் பட ஷூட்டிங்கா இல்லை ஏதேனும் போட்டோஷூட்டா என்று அவளுக்குத் தெரியவில்லை.. ஆனால் அவள் நினைத்தது போலவே ஷாட் சரியாக வரவில்லை என்று அவள் நின்று கொண்டிருந்த திசை நோக்கி  காமெராவின் லென்ஸை திருப்பினான் காமெராமேன்.

“வினி அந்தப் பக்கமாக இப்படி முகப்பைப் பார்த்து நில்” அந்த நெடியவன் சொல்ல அந்த அழகியோ ஒரு சிணுங்கலுடன் தனது உயரமான ஹீல்ஸை அழுத்தமாய் பதித்துக் கொண்டே எதிர்திசை நோக்கி வந்தாள்.

அங்கே குளிர்பானங்களை பயணிகளுக்குக் கொடுத்துக் கொண்டிருந்த கப்பல் பணியாளரை அழைத்து ஒரு குளிர்பான டின்னை எடுத்து இரண்டு முறை வாயில் கவிழ்த்துக் கொண்ட அந்த அழகி, நொடிக்கும் குறைவான நேரத்தில் அந்த டின்னை கடலில் வீசி எறிந்தாள்.

அந்த அழகியையே பார்த்துக் கொண்டிருந்தவள் யாரும் எதிர்ப்பாரா தருணத்தில் கம்பியின் மேல் சட்டென ஏறி நுனிக்காலால் எம்பி ஒரு டால்பினைப் போல டைவ் அடித்து விட்டிருந்தாள்.

அங்கிருந்த அனைவரும் ஒரு திகைப்புடன் ஓடி வந்து எட்டி பார்க்க நீருக்குள் மூழ்கி கப்பலின் தடத்தில் இருந்து பக்கவாட்டிற்கு நீந்திச் சென்று பின் மறைந்து போனாள்.

யாரேனும் கப்பலில் இருந்து நீரில் விழுந்து விட்டால் “ஆஸ்கார்” (OSCAR) என்ற குறியீட்டை மூன்று முறை அறிவிப்பர். கூடவே நபர் விழுந்தது கப்பலின் இடது புறமா வலது புறமா என்பதை “போர்ட்” (PORT) என்றும் ஸ்டார்போர்டு (STARBOARD)என்றும் குறிப்பிடுவர்.

அவள் கப்பல் சென்று கொண்டிருந்த திசைக்கு வலது புறத்தில் இருந்து குதித்து விட்டிருந்தாள்.

உடனேயே கப்பலில் மூன்று முறை ஆஸ்கார் ஸ்டார்போர்டு  குறியீடு அறிவிக்கப்பட்டது.

ஆதி விரைவாக அவர்களின் ப்ரத்யேக படகான கடல்புறாவை  இறக்கினான்.

“கேப்டன் அக்காவைப் பற்றிய கவலை வேண்டாம். அவளுடைய டைவிங் சூட்டை தான் அணிந்திருக்கிறாள். நான் போய் கூட்டிக் கொண்டு வருகிறேன்” எனவும் கேப்டன் சம்மதம் தெரிவித்தார்.

அவள் கடலில் குதித்து விட்டாள் என்று அறிந்ததுமே தன் கையில் இருந்த கடிகாரத்தின் விசையை அழுத்தி விட்டிருந்தான் ஆதி.

அவள் கடலில் எந்த திசையில் எவ்வளவு தூரத்தில் இருக்கிறாள் என்று அக்கடிகாரத்தில் துல்லியமாக தெரிந்ததது.

மணிக்கு 25 knots அதாவது ஒரு மணி நேரத்திற்கு 46 கிலோமீட்டர் என்ற வேகத்தில் சென்று கொண்டிருந்தாள் சமுத்திர முத்து.

ஆஸ்கார் அறிவிக்கப்பட்டதுமே கப்பலைத் திருப்பி  நபர் விழுந்த இடம் நோக்கிச் செலுத்துவது தான் வழக்கம். மீட்புக் குழுவினர் கடலில் விழுந்த நபரை மீட்டுக் கொண்டு வரும் வரை கப்பல் அவ்விடத்திலேயே நங்கூரமிட்டிருக்கும். இதனால் ஏற்படும் கால தாமதம் தவிர்க்க முடியாததே.

ஆனால் கேப்டன் செல்வா தலைமை பொறியாளரிடம் கப்பலின் வேகத்தை மெல்லக் குறைத்து இருக்கும் இடத்திலேயே நிறுத்தி விடும் படி உத்தரவிட்டார்.

“கேப்டன் இது விதிமுறைகள் அல்லவே” பொறியாளர் கூற தாம் பொறுபேற்றுக் கொள்வதாக செல்வா கூறினார்.

விழுந்ததும் சாதாரண நபர் அல்லவே. அவள் ஆயிற்றே.

மாலைச் சூரியன் கடலின் மடியில் தஞ்சம் புகுந்து விட்ட அந்தி நேரத்தில் கப்பலை நோக்கி கடல் புறா  வேகமாக வந்து கொண்டிருந்தாள்.

கேப்டனின் உத்தரவின் பேரில் அவர்கள் கப்பலுக்குள் ஏறி வர ஏணியை இறக்கினர்.

ஒரு கையால் அந்தக் குளிர்பான டின்னைப் பிடித்தபடி இன்னொரு கையால் ஏணியைப் பற்றி கிடுகிடுவென ஏறி கீழ்த்தளத்தில் லாவகமாக குதித்தவள் விறுவிறுவென முகப்பை நோக்கிச் சென்றாள்.

அவள் டைவிங் சூட் அணிந்திருந்த போதும் தலையுறை அணியாததால் இடையைத் தாண்டி நீண்டிருந்த அவள் கூந்தலில் இருந்து  நீர் சொட்டிக் கொண்டிருந்தது.

நேராக அந்த அழகியின் முன் வந்து நின்றவள், அவளது கையை அழுத்தமாய்  பற்றி தரதரவென எதிர்திசை நோக்கி இழுத்துச் சென்றாள்.  

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.