(Reading time: 15 - 29 minutes)

அவளுக்கு சகல வசதிகளுடன் கூடிய தனி அறையை ஒதுக்கி இருந்தார் கப்பலின் கேப்டன் செல்வா.

“பெயரளவில் தான் நீங்கள் கப்பலின் ஊழியர். மற்றபடி நீங்கள் எங்கள் விருந்தினர்” மொரிசியஸ் நாட்டைச் சேர்ந்த தமிழரான கேப்டன் செல்வா கூற அவள் ஆதியை நோக்கினாள்.

“கேப்டன், இங்கே உங்களைத் தவிர அக்காவை வேறு யாருக்கும் தெரிய வாய்ப்பில்லை. நீங்கள் எக்காரணம் கொண்டும் அக்காவின் அடையாளத்தை வெளியிட வேண்டாம்” ஆதி சொல்லவும் அவனது அழகுத் தமிழை ரசித்தவாறே சம்மதம் தெரிவித்தார்.

ந்தியப் பெருங்கடலின் மேற்குத் திசைத் தீவுகள் பெரும்பாலும் பிரெஞ்சு நாட்டின் ஆதிக்கத்தில் இருந்தவை.  

ஆங்கிலேயக் காலனியாக இருந்த போது மொரிஷியஸ் தீவுகளுக்கு இந்தியர்கள் குறிப்பாக தமிழர்கள் பெருமளவில் வேலை செய்ய அழைத்து வரப்பட்டனர்.

நாளடைவில் அவர்கள் அங்கேயே குடியேறிவிட அருகாமையில் உள்ள ரீயுனியன், ரோடிக்ரூஸ், மடகாஸ்கர், செஷல்ஸ் போன்ற தீவுகளிலும் இந்திய வம்சாவளியினர் அதிகம் வசித்து வந்தனர்.

அந்தந்த தீவுகளின் பூர்வ குடிகளின் மொழியோடு, தமிழும் பிற இந்திய மொழிகளும், ஆங்கிலமும் பேசப்பட்டாலும் இன்றளவும் அந்த தீவுக் கூட்டங்களில் பிரெஞ்சு மொழி தான் பெரும்பான்மை மக்களால் பேசப்படும் பொது மொழியாக இருந்து வருகிறது.

மடகாஸ்கரின்  பூர்வ மொழியான மலகஸி, செஷல்ஸ் நாட்டின் பூர்வகுடி மொழியான சீசெல்வா மற்றும் பிரஞ்சு மொழியில் சரளமாக பேச மட்டுமே தெரிந்த ஆதிக்கு  செம்மொழியாம் தமிழ் மொழியில் எழுதப் படிக்கவும் பேசவும் கற்றுக் கொடுத்திருந்தாள்.

“யாமறிந்த மொழிகளிலே தமிழ் மொழி போல் இனிதாவதெங்கும் காணோம்” என்று ஆதி சொல்லும் போது பூரித்துப் போவாள் அவள்.

அந்த ஐந்து ஆண்டுகளில் தான் எத்தனை நிகழ்வுகள். எத்தனை எத்தனை இனிய நினைவுகள்.

ஆனால் அத்தனை இனிமையான நினைவுகளையும் மறக்ககடிக்கச் செய்யும் அந்த நாள் தானே அவள் சிந்தனையை இப்போது முழுமையாக ஆக்கிரமித்துக் கொண்டிருக்கிறது.

இதோ இந்தப் பயணமும் கூட தொலைத்த இடத்தில் மீண்டும் அவளின்  பொக்கிஷம் கிடைத்து விடாதா என்ற நப்பாசையை நோக்கித் தானே.

ப்பலின் முன் முகப்பில் நின்று கொண்டு பரந்து விரிந்த கடலையே எத்தனை நேரம் பார்த்துக் கொண்டிருந்தாளோ.

பயணிகள் அனைவரும் வந்து சேர கப்பல் கிளம்புவதற்கான ஒலி சப்தமிட்டது. பயணிகளுக்கு பாதுகாப்பு விதிமுறைகளை கப்பலின் கேப்டன் எடுத்துரைத்தார்.

ஆபத்து சூழ்நிலையில் உயிர் கவசம் அணிவது எப்படி, உயிர் காக்கும் படகுகளை எப்படி  இயக்குவது அனைத்தும் தெரிவிக்கப்பட்டன.

துறைமுகத்தைக் கடந்து ‘சமுத்திர முத்து’ கடலின் மடியில் ஒய்யாரமாய் மிதந்து கொண்டிருந்தாள்.

நானும் உடன் வருகிறேன் என்று கூடவே ஓடி வந்த உப்புக் காற்று ஓய்வெடுக்கச் சென்று விட்டாளா என்ன. பேரலைகள் இன்றி அமைதியாகக் காணப்பட்ட அந்த நீலப் பரப்பை சமுத்திர முத்து கிழித்துக் கொண்டு முன்னேறிக் கொண்டிருந்தாள்.

சற்றே கிழக்கு நோக்கி கப்பல் பயணிக்க மாலைச் சூரியனின் மஞ்சள் கதிர்களில் தங்கமாய் மின்னிக் கொண்டிருந்தாள் கடல் ராணி.

கடலின் அழகைக் காண அவ்விடம் பயணிகள் மெல்ல வரத் தொடங்கியிருந்தனர்.

“இந்த ஆங்கிள் நல்லா இருக்கு. இங்கு வைத்து ஒரு ஷாட் எடுத்திடலாம்” ஆங்கிலத்தில் ஒலித்தக் குரலில் சிந்தனை களைந்தாள் அவள்.

ஆறடிக்கும் அதிக உயரத்தில் செக்கச் சிவந்த நிறத்தில் ஒல்லியான தேகத்துடன் இருந்தவன் அடுத்தடுத்து ஆணைகளைப் பிறப்பிக்க ஒரு பெரியக் காமெராவுடன் வந்தான் அவனைப் போலவே இன்னொருவன்.

அந்தக் காமெராவைப் பார்த்ததுமே அவள் முதுகுத் தண்டில் சிலீரென மின்சாரம் பாய்ந்தது.

இங்கிருந்து சென்று விடு என்று அறிவு வலியுறுத்த சற்றே நகர்ந்தவளை மனம் இழுத்துப் பிடித்து நிறுத்தியது.

கண்ணில் படர்ந்த மெல்லிய நீர்ப்படலத்தை அகற்றும் பொருட்டு சுற்றும் முற்றும் அவள் தனது கண்மணிகளை சுழற்ற, ஆங்காங்கே கையில் குளிர்பானங்களோடு சாய்வு நாற்காலிகளில் அமர்ந்து கடலின் அழகையும் அங்கே நடைபெறவிருந்த ஷூட்டிங்கையும் வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்த பயணிகள் தென்பட்டனர்.

“வினி எங்கே இருக்கிறாள். சூரியன் மறைவதற்குள் ஷாட் எடுக்க வேண்டும்” முதலாமவன் பரபரப்பானான்.

“இந்த ஆங்கிளில் பட்டப் பகலில் கூட ஒழுங்கா ஷாட் எடுக்க முடியாது” அவள் மூளையில் இந்த எண்ணம் உதிக்க கண்களை இறுக மூடினாள்.

கனமான ஓர் நீர்த்துளி அவளது இமைச்சிறையில் இருந்து தப்பித்து விட அவளது கன்னத்தை அது முத்தமிடும் முன் சட்டென விரலால் சுண்டி விட்டிருந்தாள்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.