(Reading time: 15 - 29 minutes)

அந்தக் கப்பலில் பணிபுரியும் பெண் என்று அவளது உடை உணர்த்திய போதும் அவளது செய்கையின் காரணம் புரியாமல் அனைவரும் ஒரு வித ஆச்சரியத் திகைப்புடன் பார்த்திருக்க கேப்டன் அவளின் பின்னே விரைந்தார்.

அந்தி வானின் செம்மஞ்சளில் அவளது வதனம் தங்கமாய் ஜொலிக்க, தன்னை நோக்கி வந்து கொண்டிருந்தவளையே விழி விரித்துப் பார்த்துக் கொண்டிருந்தான் சிபி சாலமன்.  

“யாரிவள்!!! கேப்டன் செல்வா சற்றும் பதட்டப்படாமல்  ஒரு மணி நேரத்திற்குள்  திரும்பி விடுவாள் என்று அவ்வளவு உறுதியாக கூறினாரே. இவ்வளவு அகன்ற சமுத்திரத்தில் காற்றும் அலையும் எங்கே அடித்துக் கொண்டு போகும் என்று கூட தெரியாத நிலையில் மீட்புக் குழுவினர் கடலில் விழுந்த மனிதரைக் கண்டுபிடிப்பதே சிரமம். இவளானால் கடலில் கடுகைத் தேடி எடுத்து வந்ததைப் போல அந்த குளிர்பான டின்னை எடுத்துக் கொண்டு வருகிறாள்” பல கேள்விகள் அவன் மனதைக் குடைந்து கொண்டே இருக்க அவளையே பார்த்திருந்தான்.

அவள் வதனத்தில் களைப்பு சுத்தமாக இல்லை. ரௌத்திரம் தான் நிறைந்திருந்தது. அவள் சற்று அருகில் வரவே, அந்தக் கண்களில் அப்பட்டமாய் ஒரு வலி இருந்ததைக் கண்டான்.

சிபியின் அருகில் வந்து நின்றவள், அந்த அழகியின் கையில் குளிர்பான டின்னைத் திணித்து அங்கே இருந்த குப்பைத் தொட்டியில் போடுமாறு சைகை செய்தாள்.

இப்போது அவளது செயலின் காரணம் அங்கிருந்தோருக்குப் புரிய அனைவர் முகத்திலும் அப்படி ஒரு ஆச்சரியம்.

“இதற்காகவா குதித்தாள்” வியப்பின் எல்லைக்கே சென்றனர் பயணிகளும் பணியாளர்களும்.

“ஒஹ் மை காட்” கூச்சலிட்டாள் வினி.

அவள் வினியின் கையில் டின்னை திணித்த வேகத்தில் அந்த டின்னின் நுனி வினியின் ஆடையில் சிக்கி  கிழித்து விட்டிருந்தது. மிகவும் மெலிதாக சில இழைகள் தான் அறுந்து விட்டிருந்தன. ஆனால் அந்த அழகியோ பெரிய ஆர்ப்பாட்டம் செய்தாள்.

“இந்த ட்ரஸ்ஸோட மதிப்பு தெரியுமா உனக்கு. எவ்வளவு பேமஸ் டிசைனரோட ட்ரஸ் என்று தெரியுமா உனக்கு” கோபமாக சீறியவள் அழவே ஆரம்பித்து விட்டாள்.

“இந்த ட்ரஸ் இல்லைனா என்ன. வேறு ட்ரஸ் போட்டு ஷூட் செய்யலாம். நான் இதோட விலையை தந்து விடுகிறேன்” அவளை சமாதானம் செய்ய முற்பட்டான் சிபி.

Pencilஹாய் பிரெண்ட், அத்தியாயத்தை படித்து விட்டு, உங்கள் கருத்தை பகிர மறக்காதீர்கள். உங்கள் ஒவ்வொரு கமன்ட்டும் எழுத்தாளருக்கு மிக பெரிய டானிக். உங்கள் கமண்ட்டை பகிர இதை க்ளிக் செய்யுங்கள் down

“இது என்ன சாதாரண ட்ரஸ்ஸா. இதற்கு நீ விலை கொடுத்து விடுவாயா” அவள் மேலும் புலம்ப ஒரு ஆடைக்காக இவ்வளவு ஆர்ப்பாட்டம் செய்ய வேண்டுமா என்று அங்கிருந்த பயணிகளும் பணியாளர்களும் எண்ணினர்.

“மேடம், அது தெரியாம நடந்திருச்சு” கேப்டன் செல்வா மன்னிப்புக் கேட்டார்.

“எனக்கு அதெல்லாம் தெரியாது. இதே டிசைனரோட ட்ரஸ்ஸை எனக்கு தருவித்துக் கொடுக்கணும். முடியுமா” சவால் விட்டாள் வினி.

“அவ்வளவு தானே. செய்துட்டா போச்சு. எந்த டிசைனர் என்று சொல். நாளைக்கே தருவித்து விடுகிறேன்” சிபி அவளிடம் தன்மையாகக் கேட்டான்.

இவ்வளவு பரபரப்பான சூழலிலும் அவள் கோபம் மறந்து அந்த ஆடையையே உற்று நோக்கிக் கொண்டிருந்தாள்.

“என் ஆடையை கிழித்து விட்டு ஒரு வார்த்தைக் கூட பேசாமல் கல் போல நிற்பதைப் பார்” அருகில் நின்று கொண்டிருந்தவளை  நிந்தித்த வினி அவளது ஆடையை வடிவமைத்தவரின் பெயரைச் சொல்லவும் சிபி உட்பட அங்கிருந்த பெரும்பாலானோர்  அவளின் ஆதங்கத்திலும் சிறிது நியாயம் இருந்ததை உணர்ந்தனர்.

“ஒரு வருஷமா அவங்க ஆடைகள் பேஷன்  மார்கெட்டில் வரவில்லை. அவங்க ஆடை வடிவமைப்பதையே விட்டு விட்டார்கள் என்று கேள்விப்பட்டேனே” பாரீஸில் பெரிய ஆடை நிறுவனம் ஒன்றின் உரிமையாளரான பயணி ஒருவர் அருகில் இருந்தவரிடம் கூறிக் கொண்டிருந்தார்.

என்ன முயன்றாலும் தன்னால் அந்த டிசைனரின் ஆடையை தருவித்துக் கொடுக்க முடியாது என்ற நிராசை சிபியின் விழிகளில் படிய, டிசைனரின் பெயரைக் கேட்ட அவளின் கண்கள் பளிச்சிட்டன.

அவள் விழிகளின் ஒளியில் அந்த அழகியின் ஆடைக்குள் ஒளிந்து கொண்டிருந்த தங்க மீன் மின்னிட ஒற்றை விரலை நீட்டி  மிகுந்த அன்போடு தங்க சரிகையால் எம்ப்ராய்டரி செய்யப்பட்ட அந்த மீன் சின்னத்தை வருடிக் கொடுத்தாள்.

அந்த அழகி உட்பட அங்கிருந்த அனைவரும் அவளின் செயலைக் கண்டு திகைத்து நிற்க பன்னிரண்டு மாதங்களுக்குப் பின் தேன் சிந்தும் குறிஞ்சி மலராக புன்னகையை மொழிந்தன தேன்மொழியின் இதழ்கள்.

தோழமைகளே! சிறு வயது முதலே கடல் மீது எனக்கு கொள்ளைக் காதல். அந்த காதலின் வெளிப்பாடே செந்தமிழ் தேன்மொழியாள் எனும் இக்கதை. இது ஒரு கற்பனைக் கதை என்ற போதிலும் இதிலே இடம்பெறும் நாடுகள், அங்குள்ள சிறப்புகள், கடல் மற்றும் கப்பல் சம்பந்தமான குறிப்புகள் அனைத்திலும் அதிக கவனம் செலுத்தி சரியான தகவலை பதிவு செய்யவே முயற்சி மேற்கொள்கிறேன். அதில் ஏதேனும் தவறுகள் இருந்தால் தாங்கள் அதை சுட்டிக் காட்டினால் எனக்குப் பேருதவியாக இருக்கும். உங்களது கருத்துக்களை ஆவலுடன் எதிர்நோக்கி இருக்கிறேன். நன்றி

 

தொடரும்

Episode # 02

Go to Senthamizh thenmozhiyaal story main page

{kunena_discuss:1218}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.