(Reading time: 10 - 20 minutes)

ஒரு ஆண்மகனின் முதல் ஸ்பரிசம், அவளது சரீரத்தையும், மனதினையும் மிக நுட்பமாக பலவீனப்படுத்தியது. விழிகளை அழுந்த மூடிக் கொண்டாள் அவள். பரிச்சயமே இல்லாத ஆணின் நெருக்கத்தை புத்தி உணர்ந்தப் போதும், மனம் அந்த அரவணைப்பை மறுக்கவில்லை. சில நொடிகள் கடந்திருக்கலாம், சூரிய நாராயணனிடமிருந்த இடைவெளி சிறிது சிறிதாக குறைவதை உணர்ந்தவள் சட்டென விலகி நின்றாள். அவள் தேகம் முழுதும் ஒரு நடுக்கம் பரவியது! அவர் முகத்தைக் கூட நோக்க பலமில்லாதவளாய் அங்கிருந்து ஓடினாள் அவள்.

"ச்சே...!" எண்ணிய ஏதோ ஒன்று கரம் சேராததால் ஏற்பட்ட விரக்தி அவர் முகத்தில் தெளிவாக பதிவாகியது.

நாட்கள் மீண்டும் நகர்ந்தன...

அன்று சூரியன் உதிக்காமலே இருந்திருக்கலாம்,அல்லது தர்மா ஆலயம் நோக்கி பயணப்படாமல் இருந்திருக்கலாம்,அல்லது சற்று தாமதமாக பயணப்பட்டிருக்கலாம், அவ்வாறு நிகழ்ந்திருந்தால் எத்துன்பத்திற்கும் விதை விழுந்திருக்காது.

அன்று ஆலயம் நோக்கி தனித்து புறப்பட்டவரை வழிமறித்தது அந்தக் காளை. அனைவரும் விரும்பும் ஒரு கன்னிகை மேல் அதற்கு என்ன சினமோ, அவளைக் கண்ட மாத்திரத்திலே அவளை துரத்தியது அது. அவள் விதி அவளுக்காக உதவ ஒரு கரத்தையும் அன்று நல்கவில்லை.

அச்சத்தில் ஓடியவள் ஒரு கட்டத்தில் முடியாமல் நின்றாள். அவள் உயிர் பறிக்க ஓடி வந்த ரிஷபத்தை தடுத்து நிறுத்தினார் சூரிய நாராயணன்.

"போ இங்கிருந்து!" அவளோ மிரண்டுப் போய் நின்றிருந்தாள்.

"போ!" அவர் மிரட்ட, ஓடிச்சென்று ஔிந்துக் கொண்டாள் தர்மா. எப்போதும் தன்னுடனே வைத்திருக்கும் கையடக்க துப்பாக்கியை எடுத்தவர், காளையை சமாளித்துக் கொண்டு ஒருமுறை சுட, அச்சத்தத்தில் மிரண்டது அது. எதிர் நின்றவரது வயிற்றை அச்சத்தில் காயப்படுத்திவிட்டு ஓடியது.

"ஆ...!" ஆழமாக இல்லாவிடினும், வலித்தரும் காயம் அது, குருதியும் வெளியேறி அவர் சட்டையை நனைக்க ஆரம்பித்தது.

"ஐயோ கடவுளே!" ஓடிவந்தாள் தர்மா.

"இரத்தம் வருதே!" பதறியது அவள் மனம்.

"ஒண்ணுமில்லை சின்ன காயம் தான்!" அவளால் பொறுமை காக்க இயலவில்லை. அருகில் ஏதேனும் மூலிகை இருக்கிறதா என்று தேடினாள் அவள். இயற்கை வளம் கொஞ்சும் மண் ஆதலால், ஆங்காங்கே பல மூலிகைகள் சுயம்புவாய் வளர்ந்திருக்க, அதில் ஒன்னை தேர்வு செய்து கொணர்ந்து அதைப் பிழிந்து காயத்தில் இட்டாள்.

"ஆ...!"வலியால் சற்றே துடித்தார் அவர்.

"கடவுளே!நான் என்னப் பண்ணுவேன். என்னை காப்பாற்ற ஏன் இப்படி பண்ணீங்க?" கண்ணீர் வடித்தாள் அவள்.

"நீயில்லாம நான் மட்டும் உயிரோட இருந்து என்னப் பயன்?" வலியிலும் ஒரு புன்னகையுடன் தன் மனதை அவர் விவரிக்க, சில நொடிகள் சிலையாகிப் போனாள் தர்மா.

"ஐயோ!அண்ணா!" நவீன் குமாரின் விஜயம், இருவரையும் சுய உலகிற்கு அழைத்து வர, மீண்டும் அனைத்தும் பரபரப்பானது.

"என்னங்க ஆச்சு?என்னண்ணா இதுக் கோலம்?" இளவலின் விழிகள் கசிந்தன.

"சின்ன காயம் தான்டா!"

"சின்ன காயமா? டேய்! எங்கேடா இருக்கீங்க? வாங்க..!" அவர் குரல் கொடுக்க, ஓடிவந்தனர் இருவர். 

"காரை ஸ்டார்ட் பண்ண சொல்லு!" தமையனை தாங்கிப் பிடித்து தூக்கினார் நவீன். தர்மாவோ புரியாமல் நின்றிருந்தார். சூரிய நாராயணனின் இளவல் அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுவிட, அனைத்திற்கும் தான் தான் காரணம் என்ற குற்றவுணர்வு பெருகியது கன்னிகையின் இருதயத்துள்!! கண்ணீருடன், அர்ச்சனைத் தட்டைக் கூட எடுக்காமல், தனது இல்லம் நோக்கி ஓடினாள் அவள். கண்ணீருடன்  தனது அறைக்கு வந்து கதவைத் தாழிட்டுக் கொண்டாள். மனதெல்லாம் இரணம்! தன்னுயிர் தந்து என்னுயிர் இரட்சிக்க துணிந்தாரே என்ற எண்ணம் மட்டும் அவளது மென்மையான இதயத்தை வியாபித்து அவளது சிந்திக்கும் திறனை மழுங்கடித்தது. இதயம் அதிகம் வேலை செய்யும் சமயம் அங்கு புத்திக்கு தான் மனிதன் பணி தருவானா என்ன??

எதிலும் ஈடுபாடு இல்லாமல் காலத்தை நகர்த்தினார் தர்மா. மனம் முழுதிலும் வேதனை மட்டுமே குடிக் கொண்டிருந்தது. தனக்காக ஒருவர் தனது இன்னுயிரையும் தர துணிந்தார் என்ற எண்ணம் அவரை வீழ்த்த ஆரம்பிக்க, தன்னை அறியாமல் தன் மனதை அதற்குரியவரிடத்தில் இழக்கத் தொடங்கினார் அவர். வாரம் ஒன்று கடந்திருக்கும். எதேர்ச்சையாக நவீன் குமாரை காணும் சந்தர்ப்பம் உண்டானது தர்மாவிற்கு! அவரைக் கண்ட மாத்திரத்திலே அவர் தமையனை குறித்தே விசாரணை செய்தார் அவர்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.