(Reading time: 14 - 28 minutes)

மன்னர் முதலில் பேச்சைத் துவங்கினார்.

"ராஜகுருவே! நான் இன்று கண்ட மகிழ்ச்சி, என் வாழ்நாளில் இது வரை காணாதது. வீரபுரத்தின் எதிர்காலப் பிள்ளைகள் நம்மை விட புத்திசாலிகள். நம் நாட்டின் எதிர்காலம் அவர்களின் கையில் பிரகாசிக்கும்" என்று அகமகிழ்ந்து கூறினார். 

அவர் கூற்றை ஆமோதிப்பது போல் ராஜகுரு, "ஆம், மன்னா! நீங்கள் சொல்வது முற்றிலும் உண்மை" என்று கூறினார். 

அவர்கள் உரையாடலின் நடுவே ரவிவர்மனும் புகுந்தான்.

"தந்தையே! இனி மேலும் நாம் பொறுமையாக இருப்பது நமக்குத் தான் பேராபத்து. படையைத் திரட்டி நாகவனத்தின் மேல் போர் தொடுக்கலாமே?" என்று வார்த்தைகளில் ஆத்திரத்தைக் கொட்டினான்.

அவன் கூறி முடிப்பதற்குள் மன்னர் இடைமறித்து, "இல்லை ரவிவர்மா, போர் தொடுப்பதை எடுத்தோம் கவிழ்த்தோம் என்று செய்துவிட முடியாது. அது ஆக்கத்தை விட அழிவைத் தான் கொடுக்கும். வேறு வழியே இல்லாத நிலை ஏற்பட்டால் தான் போர் என்ற அஸ்திரத்தை நாம் கையிலெடுக்க வேண்டும்" என்றார்.  

"நீங்கள் சொல்வதைப் பார்த்தால், காலம் முழுவதும் நாம் அமைதியாய் கழிக்க வேண்டும் போலிருக்கிறதே?"

"சூடான ரத்தம் உன் உடம்பில் பாய்கிறது ரவிவர்மா. அது பாயத்தான் துடிக்கும். நான், பதுங்கிப் பாயவேண்டும் என்று கூறுகிறேன். பதுங்குவதால் நாம் கோழைகளாகி விட்டோம் என்று அர்த்தம் கிடையாது. வீரத்தோடு விவேகத்தையும் இணைத்தால் தான் வெற்றி கிட்டும்" என்று குரலில் அதிகாரத்தைக் கொண்டுவந்தார்.

அதற்கு மேல் ரவிவர்மன் பேச்சை வளர்க்க விரும்பவில்லை. அனைவரும் அவனையே கவனித்தது அவனுள் ஒரு கூச்சத்தை உண்டுபண்ணியது.

ராஜகுரு தன் இரு புருவங்களையும் சுருக்கி கண்களைக் கூட இமைக்காமல் சிந்தனையில் ஆழ்ந்திருந்தார்.

அதைக் கவனித்த மன்னர், "என்ன ராஜகுருவே ! ஏதோ யோசனையில் இருக்கிறீர்கள் போல?" என்று கேட்டார்.

"அடுத்து எந்த திசையில் ஆபத்து வரப்போகிறது என்று ஒரு சிறு சிந்தனை. மார்த்தாண்டன் தன் தோல்வியைத் தாங்கிக்கொள்ள முடியாதவன். இப்பொழுதுதான் நாம் மிகவும் எச்சரிக்கையாக இருக்கவேண்டும்."

ராஜகுரு கூறியதைக் கேட்ட மன்னர் சற்று மௌனத்தில் ஆழ்ந்தார். ஒரு சிறு அமைதி அவர்களுக்குள் நுழைந்தது.

எதைப்பற்றியும் கவலைப்படாமல் பார்த்திபன், "பதார்த்தங்கள் இவ்வளவு தானா? இன்னும் இருக்கின்றதா?" என்று கேட்டான்.

அமைதியைக் கிழித்து சிரிப்பொலி அங்கே படர்ந்தது. சம்யுக்தன் பார்த்திபன் தோள்களைத் தட்டினான். சும்மா இரு என்பது போல் கண்களால் ஜாடை காட்டினான்.

பார்த்திபன் சம்யுக்தனுக்கு மட்டும் கேட்குமாறு, "இது போல் வாய்ப்பு மீண்டும் கிட்டுமா கிட்டாதா என்று தெரியவில்லை. காற்றடிக்கும்போதே தூற்றிக்கொள்வது தானே முறை. அதை ஏன் தடுக்கிறாய்?" என்று கேட்டான்.

ரவிவர்மன் சம்யுக்தனிடம், "கனிகளை உண்கிறாயா?" என்று கேட்டான்.

"இல்லை ரவிவர்மா, என் வயிறு நிரம்பி விட்டது."

பார்த்திபன் சம்யுக்தனை முறைத்தான். என்ன என்பது போல் சம்யுக்தன் பார்த்திபனைப் பார்த்தான். "புது சிநேகிதம்" என்று பரிகாசத்தோடு உதடுகளை அசைத்தான்.

சம்யுக்தன் அதற்கு மறுமொழி கூறுவதற்குள், மன்னர் அனைவரையும் பார்த்து, "ராஜகுரு உங்களிடம் ஏதோ கூறவேண்டுமாம். எல்லோரும் உண்டு முடித்த பின்பு ரகசிய அறையில் சந்திப்போம்" என்று கூறி அங்கிருந்து எழுந்து சென்றார்.

மன்னர் சென்றதும் எல்லோரும் ஒருவருக்கொருவர் பார்வைகளைப் பரிமாறிக்கொண்டனர். என்னவாக இருக்கும் என்று மனதிற்குள் கேள்விகளை எழுப்பினர். ராஜகுருவின் பார்வை சம்யுக்தன், பார்த்திபன், பூபதி மூவரையும் மாறி மாறிப் பார்த்தது.

ரவிவர்மன், "அவர்கள் மூவரையும் விழுங்குவது போல் பார்க்கிறீர்களே, ஏன்?" என்று கேட்டான்.

"சம்யுக்தன், பார்த்திபன் இருவரையும் நமக்குத் தெரியும். சிறந்த வீரர்களும் கூட. ஆனால் இவனைப் பார்த்தால் வீரனாகவும் தெரியவில்லை. சாதுரியம் மிக்கவனாகவும் தெரியவில்லை" என்று பூபதியைப் பார்த்துச் சொன்னார்.

பூபதி வாயில் உணவை வைத்துக்கொண்டே பரிதாபமாக ராஜகுருவைப் பார்த்தான். அனைவரின் இதழ்களிலும் புன்முறுவல் தழுவியது.

ராஜகுரு பூபதியைப் பார்த்து, "யாரப்பா நீ?" என்று கேட்டார்.

"இந்நாட்டின் மிகப்பெரிய செல்வந்தர் காளிதாசனின் மகன்"

"இவர்களுடன் எப்படி நீ இணைந்தாய்? பகைவர்களை எப்படிக் கையாண்டாய் என்று விளக்கமுடியுமா?"

பூபதி திரு திரு என்று முழித்தான். 'இவரிடமிருந்து என்னைக் காப்பாற்றுங்கள்' என்று கேட்பது போலிருந்தது அப்பார்வை.

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.