(Reading time: 14 - 28 minutes)

தொடர்கதை - சாம்ராட் சம்யுக்தன் - பாகம் 01 - 15 - சிவாஜிதாசன்

Samrat Samyukthan

அத்தியாயம்  1.15: விருந்தும் பாராட்டும்

ழகிய தடாகத்தில் அல்லி மலர்கள் அசைந்தாடிக் கொண்டிருந்தன. தாமரை மலர்கள் தன் காதலனான கதிரவனைப் பார்த்து வெட்கத்தால் தலை கவிழ்ந்திருந்தன. தடாகத்தின் கரையை சிறு சிறு அலைகள் வந்து வந்து தொட்டுச் சென்றன. அந்த நீரில் சோகமே உருவாக, தாமரை முகம் கொண்ட ஒரு பெண்ணின் பிம்பம் அசைந்தாடியது. நம் கதையின் நாயகி பூங்கொடி தான் அது.

குளத்தில் நீந்திக்கொண்டிருந்த சிறு சிறு மீன்கள், இந்தத் தாமரை மலர் மட்டும் ஏன் கரையில் பூத்திருக்கிறது என்று சந்தேகம் தொனிக்கும் பார்வையோடு அவளையே அதிசயமாகப் பார்த்துக்கொண்டிருந்தன. பூங்கொடியின் கண்களிலிருந்து கண்ணீர் முத்துக்கள் கன்னத்தில் தவழ்ந்து கொண்டிருந்தன. அவளது எண்ணங்கள், தன் காதலன் சம்யுக்தனுக்கு என்ன ஆனதோ என்று தேடி அலைந்துகொண்டிருந்தன. நிலவின் ஒளி பொதிந்திருந்த அம்முகம் அதன் களையை இழந்திருந்தது.

அவள், கவலையின் மடியில் தனியாக சாய்ந்திருந்ததனால், பல கற்பனைகள் அவளைத் தேடி வந்தன. "சம்யுக்தனுக்கு ஏதேனும் நேர்ந்தால் என் கதி? ஐயகோ!"..."ஏய்! பைத்தியக்காரி! ஏன் இப்படி நினைக்கிறாய்?" என்ற ஒரு குரல் அவளின் அடிமனதிலிருந்து எழுந்தது. "பொழுது புலர்ந்தும் ஏன் அவர் இன்னும் வரவில்லை?" என்று மூளையில் ஒரு குரல் ஒலித்தது. அக்கேள்வியால் அடிமனது சொன்ன ஆறுதல் அமுங்கிப்போனது.

இந்த இறைவன் ஏன் என் வாழ்வில் விளையாடுகிறான்? சிரிக்கவும் வைக்கிறான்; அழுகையும் தருகிறான்; இன்பத்தை அளிக்கிறான்; அதற்குப் பரிசாகத் துன்பத்தையும் கொடுக்கிறான்; ஆசையை வளர்க்கவிட்டு அதை அறுவடையும் செய்கிறான்; உள்ளம் கொடுத்து அதில் சுமையை ஏற்றிக் கண்ணீரை வரவழைத்து மாயக்கடலில் தவிக்க விடுகிறான் என்று மனதிற்குள் கடவுளை வசை பாடினாள். யாருமில்லா தைரியத்தில் திடீரென்று கதறி அழத்தொடங்கினாள். தடாகத்தில் உள்ள நீர் அதிகமா, அந்தக் குவளைக் கண்கள் சிந்தும் கண்ணீர் அதிகமா என்று தான் தெரியவில்லை.

அப்பொழுது குதிரையின் காலடி ஓசை கேட்டு, பூங்கொடி தன் அழுகையை ஒரு கணம் நிறுத்தி திரும்பிப் பார்த்தாள். ஓர் அரண்மனை வீரன் தடாகத்தின் அருகே குதிரையை நிறுத்தி, கீழிறங்கி அவளை நோக்கி வந்தான்.

Pencilஹாய் பிரெண்ட், அத்தியாயத்தை படித்து விட்டு, உங்கள் கருத்தை பகிர மறக்காதீர்கள். உங்கள் ஒவ்வொரு கமன்ட்டும் எழுத்தாளருக்கு மிக பெரிய டானிக். உங்கள் கமண்ட்டை பகிர இதை க்ளிக் செய்யுங்கள் down

அந்தக் குறுகிய நேரத்தில் பூங்கொடியின் உள்ளத்தில் ஒரு போரே நடந்துவிட்டது. துக்கச் செய்தியைக் கொண்டுவருகிறாரோ? அப்படியிருக்கக் கூடாது. இருக்கவே கூடாது என்று உள்ளுக்குள் குமுறினாள்.

அரண்மனை வீரன் அவளருகில் சென்று தன் இடுப்பில் செருகியிருந்த ஓலையை எடுத்து அவளிடம் நீட்டினான். கலங்கிய கண்களுடனும் நடுங்கும் கைகளோடும் அந்த ஓலையைப் பூங்கொடி பெற்றுக்கொண்டாள். தனக்கிட்ட பணியை செவ்வனவே முடித்து அவ்வீரன் தன் குதிரையில் ஏறிப் பறந்தான்.

அவன் போவதை சிறிது நேரம் வெறித்த பூங்கொடி ஓலையைப் பிரித்துப் படித்தாள். படிக்கப் படிக்க வாடியிருந்த அவளது முகம் மலர்ந்தது; சந்தோஷ அலை அவளை அணைத்தது. தன் செவ்விதழைத் திறந்து முத்துப்பற்கள் தெரிய புன்னகைத்தாள். நிலவின் ஒளி மீண்டும் அவள் முகத்தில் தஞ்சம் புகுந்தது. சிறிது நேரம் ஆனந்த அருவியில் நீராடிய பூங்கொடி, மீண்டும் தன் கையிலிருந்த ஓலையைப் படித்தாள்.

"பூங்கொடி, உனக்கு எப்படி நன்றி சொல்வதென்றே தெரியவில்லை. பகைவர்களை வேரோடு அழித்ததில் பெரும் பங்கு உன்னையே சாரும். கஷ்ட காலங்களில் உன்னைவிட பெரிய துணை எனக்கு வேறில்லை. நான் அரண்மனையில் இருக்கிறேன். நேரில் வந்து முழு விபரமும் கூறுகிறேன்".

சொல்லமுடியா சந்தோசத்தில் அவள் திக்குமுக்காடினாள். ஓலையைத் தன் நெஞ்சோடு அணைத்துக்கொண்டாள். உலகமே அவள் மகிழ்ச்சியில் பங்கு கொண்டது போல் ஓர் உணர்வு அவளை ஆட்கொண்டது.

ரண்மனை புதுப்பொலிவுடன் காணப்பட்டது. பகைவர்கள் செய்த குற்றம் உறுதியானதால் அவர்களுக்குத் தகுந்த தண்டனை அளித்து சிறையில் அடைக்கப்பட்டார்கள். வீரசாகசம் புரிந்த சம்யுக்தனுக்கும் அவனுடைய நண்பர்களுக்கும் விருந்து கொடுக்க அரண்மனையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

அறுசுவை உணவு வகைகளும் முக்கனிகளும் இனிப்புப் பதார்த்தங்களும் உணவு மேசையில் அடுக்கி வைக்கப்பட்டிருந்தன. அதைச் சுற்றி நாற்காலிகளில் மன்னர், ராஜகுரு, இளவரசன், சம்யுக்தன், பார்த்திபன், பூபதி ஆகியோர் அமர்ந்து உணவை புசித்துக்கொண்டிருந்தனர்.

இளவரசன் அவ்வப்போது சம்யுக்தனைக் கண்களால் ஆராய்ந்து கொண்டிருந்தான். ராஜகுருவின் முகமோ வெறுப்பைப் பூசியிருந்தது. மன்னரின் நெஞ்சம் முழுவதும் மகிழ்ச்சியில் நிறைந்திருந்ததால், அவருக்கு உணவில் ஈடுபாடு இல்லாமல் இருந்தார். பார்த்திபனோ இதுவரை உணவையே பார்த்திராதது போல் கட்டுப்பாடற்று உண்டு கொண்டிருந்தான். அவ்வப்போது தன் கண்களை எல்லோர் மீதும் ஓடவிட்டு தன்னை யாராவது கவனிக்கிறார்களா என்று நோட்டமிட்டான். எல்லோரைவிடவும் மகிழ்ச்சியில் மிதந்தது பூபதி தான். தானும் ஒரு வீரனாகி விட்டோம் என்ற பெருமை அவனை அணைத்திருந்தது. யாரும் பேசவில்லை; ஆனால் ஒவ்வொரு கண்களும் மற்றவர்களை மாறி மாறிப் பார்த்துக்கொண்டிருந்தன.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.