(Reading time: 14 - 28 minutes)

"அது ஒரு பெரிய கதை. அதைப் பற்றிப் பிறகு சொல்கிறேன்" என்று ரவிவர்மன் ஒரு முற்றுப்புள்ளி வைத்தான்.

எல்லோரும் உண்டு முடித்தார்கள். சுவை நாவையும் உடலையும் ஆக்கிரமித்தது. பார்த்திபன் பெரிதாய் ஓர் ஏப்பம் விட்டான்.

ராஜகுரு, "இப்பொழுது நாம் ரகசிய அறைக்குச் செல்லப்போகிறோம். எல்லோரும் உடன் வாருங்கள்" என்று கூறி முன்னே சென்றார். மற்றவர்கள் அவரைப் பின்தொடர்ந்தனர்.

ரண்மனையின் உட்புற அழகும் பிரம்மாண்டமும் அவர்கள் கண்களை விரியச் செய்தன. தமிழ் பாரம்பரியத்துக்கே உரியதான கலைநயத்தோடு அம்மாளிகையின் உட்புறம் விளங்கிற்று. பளபளக்கும் வெண் தரையில் அவர்களின் கால்கள் நடந்து சென்றன. கண்கள் அழகை ஆராய்ந்தன. மனம் பூரித்துப் பூப்போல் பூத்திருந்தது. பூலோகத்தை விட்டுவிட்டு வானுலகத்திற்கு வந்துவிட்டோமோ என்று கூட அவர்கள் நினைத்தார்கள்.

வீரபுரத்தின் சின்னமான சிங்கத்தின் உருவம் ஓவியங்களாய் வரையப்பட்டு ஆங்காங்கே சிலைகளாகவும் அமைக்கப்பட்டிருந்தன. ஓவியங்களும் சிலைகளும் உயிருள்ள சிங்கங்களைப் போல தத்ரூபமாய் இருந்தன. கண்கள் அபாயகரமாக இருந்தன. அவர்கள் அவற்றைப் பார்க்கும்போது அந்த சிங்கங்களின் விழிகள் அவர்களை நோக்குவது போல் ஒரு மாயையை உண்டாக்கின.

அவ்விடத்தைக் கடந்ததும் ஒரு நீண்ட படியில் இறங்கினார்கள். தாழ்வாரத்தில் ஒரு விசாலமான கூடம் அவர்களை வரவேற்றது. குறைந்தது இரண்டாயிரம் பேர் அமர்வதற்கு ஏற்றாற்போல் பிரம்மாண்டமாய் இருந்தது அக்கூடம். அந்த பெரிய கூடத்தைக் கடந்து ஒரு வளைவில் வளைந்தனர். மர வேலைப்பாடுகளுடைய பெரிய இரட்டைக் கதவு அவர்களை தடுத்து நிறுத்தியது. நிமிர்ந்து பார்த்தாலே மூச்சு முட்டும் அளவிற்கு இருந்தது அக்கதவு. அக்கதவிற்குக் காவலாக வேலைத் தாங்கிய வீரர்கள் நின்றிருந்தனர்.

ராஜகுரு நடந்து வரும்போதே அவர்களைப் பார்த்து சமிக்ஞை செய்தார். அதற்குக் கட்டுப்பட்ட காவலர்கள் கதவைத் திறந்தார்கள். ஓர் அரக்கன் வாயைத் திறப்பது போலிருந்தது அக்காட்சி. அவர்கள் உள்ளே சென்றவுடன் மீண்டும் அக்கதவு சாத்தப்பட்டது.

பிரம்மிப்பு, பட படப்பு, எதிர்பார்ப்பு இவையெல்லாம் சூழ சம்யுக்தன் ராஜகுருவின் பின்னால் சென்றுகொண்டிருந்தான்.

சிறிது தூரத்தில் மன்னர் சிம்மாசனத்தில் வீற்றிருந்தார். அந்த அறையின் விட்டத்தில் நீண்ட தீபங்கள் தொங்கவிடப்பட்டு, ஒளியை வீசிக்கொண்டிருந்தன. மன்னரின் இடப் பக்கமும் வலப் பக்கமும் இருக்கைகள் போடப்பட்டிருந்தன.

மந்திரி தேவராஜன் தன் மகன் சம்யுக்தனை ஆவலோடு எதிர்பார்த்துக் காத்திருந்தார். ராஜகுருவும் சம்யுக்தனும் அங்கு வந்ததும் கண்ணில் தேக்கி வைத்திருந்த பாசக் கண்ணீரை சம்யுக்தனை ஆரத் தழுவி வெளியேற்றினார்.

"குழந்தாய்! உன்னைப் பெற்றதே நான் செய்த பெரும் பாக்கியம். மன்னர் நீ செய்த வீரச் செயல்களை எல்லாம் கூறியதும் நான் அடைந்த பூரிப்பு அளவிடமுடியாதது" என்று கண்ணீர் மல்கக் கூறினார்.

ராஜகுரு அவர்களைப் பிரிக்கும் வண்ணம் சற்று தொண்டையைக் கனைத்தார். தேவராஜன் தன் இருக்கைக்குச் சென்று சாய்ந்து கொண்டார். ராஜகுரு மன்னரின் இடப் பக்கம் இருந்த முதன்மை இருக்கையில் சென்று அமர்ந்து கொண்டார்.

சம்யுக்தன் எல்லோரையும் வெறுமைப் பார்வை பார்த்தான். திடீரென்று அவனது கண்களில் ஆச்சர்யக்குறி முளைத்தது. அதற்குக் காரணம், மன்னரின் சிம்மாசனத்தின் பின்னே ஒரு பெண் நின்று கொண்டிருந்தார். மகாலட்சுமி கடாட்சம் பொருந்திய அம் முகம் சம்யுக்தனுக்கு ஏற்கனவே பரிட்சயமானது போலிருந்தது. ராஜவம்சத்துப் பெண்களுக்கு உரிய அலங்காரம் அவரிடம் காணப்பட்டது.

"யாரிந்தப் பெண்மணி?" இது தான் சம்யுக்தனின் மனதை அரித்துக்கொண்டிருந்தது.

ரவிவர்மன் அப்பெண்ணின் அருகில் சென்றான். அவர் அவனுடைய காதில் ஏதோ கூறினார். ரவிவர்மன் அவர் சொல்வதைச் சிரம் தாழ்த்திக் கேட்டுக்கொண்டிருந்தான். ரவிவர்மனிடம் பேசும்போது அவருடைய கருவிழிகள் இரு முறை சம்யுக்தனைக் கவனித்தன.

"ஏன் அவர் என்னைப் பார்க்கிறார்? ரவிவர்மனிடம் என்ன கூறுகிறார்? ரவிவர்மன் தன் நெஞ்சில் கையை வைத்து, தான் பார்த்துக்கொள்கிறேன் என்பது போல் சைகை செய்கிறானே?" இதைப் பற்றி சம்யுக்தன் சிந்தித்துக்கொண்டிருந்தபோது, மன்னர் அரியணையிலிருந்து எழுந்தார்.

"சம்யுக்தா! நான் உன்னைச் சிறுபிள்ளை என்று எண்ணியிருந்தேன். ஆனால் நீ பகைவர்களைக் கையாண்ட விதத்தைப் பார்த்து பிரம்மித்தேன். நீ பிறக்கும்போதே சுடரொளியாய்ப் பிறந்திருக்கிறாய். இத்தனை வருடங்களாக எங்களால் கண்டு பிடிக்க முடியாததை நீ எளிதில் கண்டுபிடித்துவிட்டாய். வீரமும் சாதுரியமும் உனக்குப் பரிசாய் இறைவன் அளித்திருக்கிறான். அவற்றை நீயும் நல்வழியில் பயன்படுத்துகிறாய்" என்று மகிழ்ச்சியோடு கூறினார்.

மன்னர் கூறியது சம்யுக்தனின் உள்ளத்தில் உவகையை உண்டாக்கியது.

"மிக்க நன்றி, மன்னா! நான் மட்டும் இதைத் தனியாகச் செய்யவில்லை. என் நண்பன் பார்த்திபன் இல்லாவிடில் இதனைச் செய்திருக்கமுடியாது" என்று தன் வெற்றியில் தன் நண்பனையும் சேர்த்துக்கொண்டான்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.