(Reading time: 11 - 21 minutes)

வைரஸ் கிருமி ஏற்படுத்தும் இந்தக் காய்ச்சலில் வீரியம் அதிகம் உள்ள கிருமி சுவாசத்தில் கலந்து நுரையீரலை செயழிலக்கச் செய்து உயிரை மாய்த்து விடும் கொடிய தன்மை கொண்டிருந்தது.

வள்ளி செவிலியராகப் பணிபுரிந்த மருத்துவமனையிலும் காய்ச்சலில் பாதிக்கப்பட்டோர் நிறைய பேர் அனுமதிக்கப்பட்டிருந்தனர்.

இரவு பகல் என்று தொடர்ந்து பணியாற்றி சேவை புரிந்த வள்ளி துரதிஷ்டவசமாக அக்கிருமியால் பாதிக்கப்பட்டார்.

ஆரம்பத்தில் காய்ச்சல், சோர்வு போன்ற அறிகுறிகள் தென்பட அதை அலட்சியம் செய்து தனது பணியை விடாமல் ஆற்றிக் கொண்டிருந்தவரின் உடல் நலம் மிகவும் மோசமாக அவருக்கு வீரியம் நிறைந்த கிருமி தாக்கியிருந்தது கண்டறியப்பட்டது.

தகவல் அறிந்த இளங்கோ உடனேயே அவரை நகரின் சிறந்த மருத்துவமனையில் அனுமதித்து தீவிர சிகிச்சை கிடைக்க ஏற்பாடு செய்திருந்தான்.

ஆனால் வள்ளியின் நிலை மிகவும் கவலைக்கிடமாக இருப்பதை தெரிவித்த மருத்துவர்கள்  செயற்கை சுவாசக் கருவிகளைப் பொருத்தி அவருக்கு சிகிச்சை அளித்து வந்தனர்.

இனி அவர் மீண்டு வரும் சாத்தியங்கள் மிகக் குறைவு என்று மருத்துவர்கள் கூறிவிட வானதியை தானே சென்று அழைத்து வந்திருந்தான் இளங்கோ.

தொற்று ஏற்படாமல் இருக்க உரிய வகையில் முகமூடி அணித்து அந்த தீவிர சிகிச்சைப் பிரிவிற்குள் அவளை அழைத்துச் சென்றான் இளங்கோ.

மகளை அடையாளம் கண்டு கொண்ட வள்ளியின் விழிகளில் மரண பயம் துளியும் இல்லை. மாறாக மகளின் எதிர்காலம் குறித்த அச்சம் தான் நிறைந்திருந்தது.

வானதியை தலைமை மருத்துவரிடமும் அழைத்துச் சென்று அவரது உடல் நிலை குறித்த தகவல்களை அறியச் செய்த இளங்கோ அவளின் கரம் பற்றி அங்கிருந்த நாற்காலியில் அமரச் செய்தான்.

“இப்போ இந்த இடத்தில் இப்படி ஒரு நிலையில் நான் உன்கிட்ட இதைக் கேட்க நேரிடும்ன்னு கனவிலும் நினைத்துப் பார்க்கலை. ஆனால் இந்த தருணத்தின் அவசியம் உன்கிட்ட இப்போ கேட்க வேண்டிய கட்டாயத்தை ஏற்படுத்தி இருக்கு” இளங்கோ புதிர் போட புரியாமல் விழித்தாள் வானதி.

“என்னைக் கல்யாணம் செய்துக்கோ. இங்கே இப்போ வள்ளி அத்தை முன்னாடி” திடீரென அவன் சொல்லிவிட திகைப்பை தவிர வேறு எதையும் உணர முடியாத நிலை அவளுக்கு.

“உன் படிப்பு முடிஞ்சதும் இதைப் பத்தி உன் கிட்ட பேசி வீட்டிலும் சொல்லனும்னு நினைச்சிருந்தேன். ஆனால் இப்போ கொஞ்ச நேரம் முன்னாடி வள்ளி அத்தை கண்ணில் தெரிந்த அந்த தவிப்பு உன்னைப் பற்றிய கவலை இப்போவே இதை சொல்ல வச்சிடுச்சு”

அவன் தொடர்ந்து சொல்லிக் கொண்டே போக அப்படியே அவனது தோளில் சாய்ந்து கொண்டாள்.

அவள் எதையும் உணரும் நிலையில் இல்லை எனும் போதும் அவன் எதைச் செய்தாலும் அவளது நன்மையை முன்னிறுத்தியே இருக்கும் என்ற நம்பிக்கை மனதில் தோன்ற அவனிடம் சம்மதம் சொன்னாள்.

அடுத்த ஒரு மணி நேரத்தில் எல்லாம் இளங்கோ தனது எண்ணத்தைக் குடும்பத்தினரிடம் தெரிவித்து அவர்களின் சம்மதம் பெற்று வள்ளியிடம் சென்று அவரிடம் சம்மதம் கேட்டான்.

இன்னும் கொஞ்சம் உணர்வுகள் ஒட்டிக் கொண்டிருந்த நிலையில் இமைகள் மூடி தனது சம்மதத்தை தெரிவித்த வள்ளியின் விழிகளில் நிம்மதி நிறைந்திருந்தது.

“தாத்தா எங்கே போறோம்” ஒன்பது வயது தேன்மொழியிடம் தாத்தா பக்குவமாக எடுத்துச் சொன்னார்.

குழந்தைகள் தீவிர சிகிச்சைப் பிரிவிற்குள் அனுமதி இல்லை என்பதால் பார்வையாளர் பகுதியிலேயே தேன்மொழியை திருமாங்கல்யத்தை எடுத்துக் கொடுக்கச் சொல்லி பாதுகாப்பு உடை அணிந்து அந்த அவசர சிகிச்சைப் பிரிவின் அறையிலேயே கயல்விழி முத்துக்குமரன் மற்றும் வள்ளியின் ஆசியுடன் வானதியை தனது சதியாக ஏற்றுக் கொண்டிருந்தான் இளங்கோ.

“பாப்பா நாத்தனார் முடிச்சை போட்டு விடு” பிரியமான பெரிய அண்ணன் கூற அந்தச் சடங்கை செய்த தேன்மொழி வானதியைக் கட்டிக் கொண்டாள்.

மகளின் வாழ்வு பற்றிய கவலை நீங்கிவிட ஆழ்ந்த உறக்கத்தில் அமிழ்ந்து விட்டிருந்தார் வள்ளி.

ஒரு மகனின் ஸ்தானத்தில் இருந்து அனைத்து கடமைகளையும் பூர்த்தி செய்திருந்தான் இளங்கோ.

பத்து வயதில் இருந்து ஒரே குடும்பமாக பாசத்தோடு பழகி வந்ததால் வானதிக்கு எதுவும் வித்தியாசமாகத் தெரியவில்லை கழுத்தில் தொங்கிக் கொண்டிருந்த மாங்கல்யத்தைத் தவிர.

படிப்பை முடிக்க வேண்டும் என்று இளங்கோ வற்புறுத்தி அவளை மீண்டும் பூனேவிற்கு அனுப்பினான்.

அவர்கள் குடியிருந்த வீட்டினை உரிமையாளரிடம் இருந்து விலைக்கு வாங்கி புதியதாக வீடு கட்ட ஏற்பாடு செய்தார் முத்துக்குமரன்.

கயல்விழி அடுத்தடுத்த படங்களுக்கும் ஆடை வடிமைக்க வானதியிடம் அது குறித்து விவாதித்துக் கொள்வார்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.