(Reading time: 12 - 24 minutes)

திருமணத்திற்கு சென்றுவிட்ட வந்த ஒருவாரத்திலேயே கலையின் நாத்தனார் தன் மகனுக்கு அருள்மொழியை பெண் கேட்டு வந்தார். கலைக்கு அவர்களுடன் தொடர்பு இல்லையென்றாலும் இப்படி விசேஷங்களுக்கு சென்று வரும்போது தன் கணவரின் உடன்பிறந்தவர்களை  பற்றியும் தெரிந்துக் கொண்டு தான் வருவார். அப்படி தெரிந்துக் கொண்டதில் இப்போது யாருக்காக பெண் கேட்டு வந்தார்களோ அந்த பையனைப் பற்றி நல்லதாக எதுவும் கேள்விப்பட்டதில்லை. குடிப்பழக்கம் அதிகமாகி ஒரு சமயம் தகறாரு ஏற்பட்டு அவனை காவல்துறையினர் கைது செய்தது, அதனால் குடிப்பழக்கத்தை மறக்க, அவனை மறுவாழ்வு மையத்தில் சேர்த்தது என்ற தகவலெல்லாம் அறிந்தது தான், அப்படியிருக்க என் பெண்ணை கேட்டு வர என்ன தைரியம் என்று கலைக்கு கோபம் வந்தது.

அருளின் அத்தைக்கு தன் மகனைப்ப பற்றிய விஷயமெல்லாம் கலைக்கு தெரிந்திருக்கும் என்பது தெரியாது. அதிக வசதி இருக்கிறது, எப்படியோ அண்ணன் வீட்டில் தனே அடைக்கலமாக இருக்கிறார். சீர்வரிசையெல்லாம் வேண்டாம் என்று சொன்னால், செலவு மிச்சம் என்பதால் அருளை தன் மகனுக்கு திருமணம் செய்து வைப்பார்கள் என்று நினைத்து வந்தார். நல்ல வசதியான வீட்டிலெல்லாம் மகனைப் பற்றி தெரிந்து வேண்டாம் என்று சொன்னதால் தான் இப்போது அருள் பக்கம் அவரது பார்வை திரும்பியிருக்கிறது.

கலையோ தன் அண்ணனிடம் தெளிவாக இந்த சம்பந்தம் வேண்டாமென்று சொல்லிவிட்டார். அதற்கான காரணங்கள் இருந்தும் இப்போதைக்கு அருள்மொழிக்கு திருமணம் செய்யும் எண்ணமில்லை, அவள் மேற்படிப்பு படிக்கப் போகிறாள் என்று அருளின் அத்தைக்கு பதில் சொல்லியும், மேல் படிப்பு தானே நாங்களே படிக்க வைக்கிறோம், திருமணம் முடித்ததுமே படிக்கலாமே என்று சொல்லிப் பார்த்தார்.

இப்போதைக்கு அப்படி எண்ணமில்லை விட்டுவிடுங்கள் என்று புகழேந்தி திட்டவட்டமாக கூறிவிட்டார்.

எங்கள் வீட்டு பையனை விட அப்படி எப்பேர்ப்பட்ட மாப்பிள்ளை வந்துடுவான்னு நானும் பார்க்கிறேன் என்று அருளின் அத்தை சாபம் போல் கூறிச் சென்றார்.

“இவங்கல்லாம் ஒரு ஆள்னு அவங்க சொல்றதை பெருசா நினைச்சுக்காத கலை.. நம்ம அருளுக்கு நல்ல மாப்பிள்ளையா கிடைப்பான், அவளுக்கு நல்ல வாழ்க்கை அமையும்..” என்று புகழேந்தியும் பூங்கொடியும் கூறினர்.

ஆனால் முத்துப் பாட்டிக்கு அருளின் அத்தை பேசிய  பேச்சை பொறுத்துக் கொள்ள முடியவில்லை, இரண்டு மூன்று முறை அதைப்பற்றி பேசி பேசி அருளின் அத்தையை திட்டி தன் கோபத்தை தீர்த்துக் கொண்டார்.

அருள்மொழிக்கு ஏன் வேறு வரன் தேட வேண்டும், என்னுடைய பேரனே இருக்கிறானே, என்று தனக்குள்ளே சொல்லிக் கொண்டார்.

ஆமாம் அவருக்கு வெகு நாளாகவே உள்ளுக்குள் அப்படி ஒரு ஆசை உண்டு, ஆனால் இதுவரையிலும் வெளியில் சொல்லிக் கொண்டதில்லை, புகழேந்திக்கு பிள்ளைகள் முன் அப்படி பேசினால் பிடிக்காது, எனவே அதை உணர்ந்து அவரும் உள்ளுக்குள்ளேயே அந்த ஆசையை வைத்திருந்தார்.

இப்போது அதை வெளியில் சொல்வதற்கான நேரமும் வந்துவிட்டதாக தான் பாட்டி நினைத்தார். நாளையே வேறு ஒரு நல்ல வரன் வந்தால், அதை பேசி முடிக்க தான் அனைவரும் நினைப்பர், அதுமட்டுமல்ல சுடரொளி அடிக்கடி வீட்டுக்கு வருவதும், மகியோடு பழகுவதும் அவருக்கு சரியாக படவில்லை, அதனால் விரைவில் இதைப்பற்றி பேச வேண்டும் என்று முடிவு செய்தார்.

முதலில் தன் மகள் மற்றும் மருமகளிடம் விஷயத்தை கூறி அவர்கள் விருப்பத்தை தெரிந்துக் கொண்டு மகனிடம் பேசலாம் என்று முடிவெடுத்தார். காலையில் அவரவர் வேலையாக கிளம்பி போனதும் இவர்கள் மூவர் மட்டும் தானே வீட்டில் இருப்பர், அதனால் இருவரிடம் கோவிலுக்கு போகலாம் என்று சொல்லி அங்கு வைத்து இந்த விஷயத்தை பேசலாம் என்று முடிவு செய்தார்.

அதன்படி அன்று மூவரும் கிளம்ப தயாரான போது, எழிலரசியும் சுடரொளியும் வீட்டுக்கு வந்தார்கள். எழிலரசிக்கு விஷயம் தெரிவதில் எந்த பிரச்சனையும் இல்லை, ஆனால் சுடரொளிக்கு விஷயம் தெரிவதில் பாட்டிக்கு விருப்பமில்லை, அவளை அவர் வேற்று ஆளாக தான் நினைத்தார். ஆனால் அவளை தனியாக வீட்டில் விட்டுவிட்டு வர முடியாத காரணத்தால் அவளையும் கோவிலுக்கு அழைத்துச் சென்றனர்.

கோவிலில் தரிசனம் முடிந்ததும் சிறிது நேரம் உட்கார்ந்துவிட்டு போகலாம் என்று சொல்லிய பாட்டி, சுடரை கூப்பிட்டு,

“பக்கத்துல கோவில் குளம் இருக்குல்ல, அதுல மீன் இருக்கும் அதுக்கு பொறி வாங்கி போட்டுட்டு வா..” என்றார்.

“குளத்தில் மீன் இருக்கா, உண்மையாவா பாட்டி..” என்றப்படி உற்சாகமானவள், கிளம்பத் தயாரானாள்.

“சுடர் நீ தனியா போக வேண்டாம்.. இரு நானும் வரேன்..” என்று எழிலரசி சொன்னதும்,

“அவ என்ன சின்ன குழந்தையா.. அவ மட்டும் போயிட்டு வரட்டும், நாம இங்க தானே இருக்கோம்..” என்ற பாட்டி, அவளை மட்டும் போகச் சொன்னார்.

“பரவாயில்ல சித்தி.. எனக்கொன்னும் பிரச்சனையில்லை நான் தனியா போய் போட்டுட்டு வரேன்..” என்று சுடரொளி சொல்லவும்,

“பார்த்து கடைசி படிக்கட்டு வரை போகாத வழுக்கும், அப்புறம் பொறி வாங்க இந்தா காசு..” என்று எழில் கொடுக்க,

“என்கிட்ட இருக்கு சித்தி..” என்று சொல்லிவிட்டு சென்றாள். அதைப்பார்த்து பாட்டிக்கு தன் மகளை நினைத்து கோபம் வந்தது.

எழிலுக்கோ இதுவரை இங்கு வந்து இத்தனை நாட்களில் சுடர் சிறிது நாட்களாக தான் சித்தி என்று கூப்பிடுகிறாள், அதற்கு முன் இரண்டு வாக்கியங்கள் சேர்ந்தாற் போல் கூட பேசாமல் அமைதியாகவே இருப்பாள். அதனால் சுடரிடம் இப்போது வந்த மாற்றம் குறித்து எழில் மகிழ்ச்சியடைந்தாள்.

“சுடரை கூட இருக்க வேணாம்னு அனுப்பிச்சிட்டீங்க, அப்படி என்ன அத்தை முக்கியமான விஷயம்..” என்று பூங்கொடி சரியாக கண்டுபிடித்து கேட்டார்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.