(Reading time: 12 - 24 minutes)

தொடர்கதை - நெஞ்சோடு கலந்திடு உறவாலே!! - 39 - சித்ரா. வெ

Nenchodu kalanthidu uravale

லையரசி புகுந்த வீட்டு உறவினர் இல்லத் திருமணத்திற்கு சென்ற போது, அருள்மொழியின் அத்தைக்கு எப்படி அருளை அவர் மகனுக்கு மணம் முடிக்க பெண் கேட்க தோன்றியதோ, அதேபோல் கலையரசியின் கணவருக்கு தூரத்து உறவான குடும்பமும் அந்த திருமணத்திற்கு வந்திருந்தனர்.

அவர்களுக்கும் அருள்மொழியை பார்த்ததுமே பிடித்துவிட்டது. தங்களின் ஒரே மகனுக்கு அவளை மணம் முடிக்க வேண்டுமென்று நினைத்தனர். மகனுக்கு நல்ல வேலை, ஓரளவுக்கு வசதி வாய்ப்பு எல்லாம் கடவுள் அருளால் அவர்களுக்கு நல்லப்படியாக அமைந்ததால், சீர்வரிசையெல்லாம் அதிகம் எதிர்பார்க்காமல், நல்ல பெண்ணாக தங்கள் மகனுக்கு தேடிக் கொண்டிருந்தவர்களுக்கு, அருள்மொழி தங்கள் மகளுக்கு ஏற்றவளாக இருப்பாள் என்று தோன்றி விட, கலையின் அண்ணன் வீட்டுக்குச் சென்று பெண் கேட்கலாம் என்று தோன்றியது.

ஆனால் அதற்கு முன்னரே அருள்மொழியின் அத்தை பெண் கேட்க போகும் விஷயம் தெரிந்ததும், அவர்கள் அமைதியாகிவிட்டனர். இதில் அந்த சம்பந்தம் கூடி வரவில்லை. கலை வீட்டாருக்கு அந்த சம்பந்தத்தில் விருப்பமில்லை என்பது தெரிந்ததும் திரும்ப தங்கள் மகனுக்கு பெண் கேட்கலாம் என்று முடிவு செய்தவர்கள், உடனே வராமல் சிறிது நாட்களுக்கு பிறகு வரலாம் என்று முடிவெடுத்து இன்று வந்தனர்.

கலை புகுந்த விட்டில் இருந்து இப்படி ஒவ்வொருவராக வந்து பெண் கேட்பது முத்துப் பாட்டிக்கு பிடிக்கவேயில்லை. சிறிது காலம் தள்ளிபோட்டு பிறகு மகி,அருள் திருமணத்தைப் பற்றி பேச்சு எடுக்கலாம் என்று நினைத்திருக்க, இப்படி அவர்கள் வீடு தேடி வந்து பெண் கேட்டது எரிச்சலை தான் கொடுத்தது.

Pencilஹாய் பிரெண்ட், அத்தியாயத்தை படித்து விட்டு, உங்கள் கருத்தை பகிர மறக்காதீர்கள். உங்கள் ஒவ்வொரு கமன்ட்டும் எழுத்தாளருக்கு மிக பெரிய டானிக். உங்கள் கமண்ட்டை பகிர இதை க்ளிக் செய்யுங்கள் down

அவர்களை வேண்டாமென்று நிராகரிக்கவும் காரணங்கள் எதுவும் இல்லை. கலைக்கு  நன்றாக தெரிந்த குடும்பம், அந்த குடும்பத்தையோ இல்லை அருள்மொழிக்காக வந்திருக்கும் வரனையோ குறை சொல்லும்படி இல்லை. நல்ல படிப்பு, வேலை, பார்ப்பதற்கு அழகாகவே இருந்தான். அவர்கள் சீர்வரிசைக்கு அலைபவர்களாகவும் தெரியவில்லை. அதனால் அந்த வரனை வேண்டாம் என்று சொல்ல காரணங்கள் இல்லை.

இருந்தாலும் அருள்மொழிக்கு இவ்வளவு விரைவாக திருமணம் செய்ய வேண்டுமா? என்பது தான் புகழேந்திக்கு யோசனையாக இருந்தது. மலர்க்கொடி மற்றும் மணிமொழிக்கு படித்து முடித்து ஒருவருடம் வீட்டில் இருக்க, பிறகு தான் வரன் தேட ஆரம்பித்து திருமணம் முடிய அடுத்த வருடம் ஆனது. அருள்மொழிக்கோ மேலே படிக்க வேண்டும், வேலைக்கு செல்ல வேண்டும் என்ற எண்ணமெல்லாம் இருக்கிறது என்பது புகழேந்திக்கு புரிந்து இருந்ததால், இப்போதே அவளுக்கு திருமணம் முடிக்க அவர் தயங்கினார்.

ஆனாலும் தன் தங்கையின் எண்ணம் என்பதும் தெரிந்துக் கொள்ள வேண்டுமல்லவா? அதனால் கலையிடமும் அவர் விருப்பத்தைக் கேட்டார்.

கலையை பொறுத்த வரை அருள் படிப்பு முடிந்ததுமே அவளது திருமணம் பற்றிய கவலை ஆரம்பித்துவிட்டது. இதில் தன் அன்னை சொன்னது போல் மகிக்கும் அருள்மொழிக்கும் திருமணம் நடந்தால் நன்றாக இருக்கும் என்று அவர் நினைத்திருக்க, திருமணம் வேண்டாம் என்று புகழேந்தி சொன்ன காரணம் கூட பிறகு சரியென்று தான் அவருக்கு தோன்றியது. இருந்தாலும் விரைவில் அருள்மொழிக்கு திருமணம் முடித்து விட வேண்டும் என்று அவர் மனதிற்குள் நினைத்துக் கொண்டு தான் இருந்தார்.

இதில் இவர்கள் பெண் கேட்டு வரவும் அந்த குடும்பத்தை பற்றி கலை நன்கு அறிந்ததால், தன் பெண்ணை கொடுக்கலாம் என்று அவருக்கு தோன்றியது. மணிமொழிக்கு நல்ல வாழ்க்கை அமைந்தது போல், அருள்மொழிக்கும் நல்ல வாழ்க்கை அமைந்துவிட வேண்டும் எனற கவலை அவருக்கு இருந்தது. தன் அண்ணன் விட்டு விட மாட்டார் என்பதில் அவருக்கு நம்பிக்கை தான், ஆனால் என்ன இருந்தாலும் ஒருவகையில் இவர்கள் மூவரும் அவர்களுக்கு சுமை தானே, இப்போது இந்த வரனை விட்டுவிட்டால், பிறகு அருள் மேல் படிப்பு முடித்ததும் இதே போல் வரன் அமையுமா? இந்த காலக்கட்டத்தில் சீர்வரிசைகள் அதிகம் செய்து திருமணம் முடிப்பது என்பது எவ்வளவு பெரிய விஷயம்? குடும்பத்தின் நிலையை அவர் உணர்ந்து இருப்பவர் தானே, ஒரு திருமணம் நடத்த எவ்வளவு செலவாகும், இவர்கள் சீர்வரிசை அதிகம் எதிர்பார்க்கததால் திருமண செலவு குறையவும் வாய்ப்புள்ளது. அதனால் தேடி வந்த வரனை விட்டுவிட அவருக்கு மனம் வரவில்லை.

புகழேந்தி கேட்டதற்கு தான் நினைத்ததை அப்படியே அவர் சொல்லவில்லை. “நல்ல குடும்பம், பையன் கூட நல்ல மாதிரி தான், எனக்கு நல்லா தெரியும் ண்ணா.. அதனால நம்ம இந்த சம்பந்தத்தை விட்டு விட வேண்டாம்னு தான் தோனுது.. இருந்தாலும் நீங்க என்ன நினைக்கிறீங்களோ அது எனக்கும் சம்மதம் தான் அண்ணா..” என்று கூறினார்.

கலைக்கு இந்த சம்பந்தத்தில் விருப்பம் இருக்கிறது என்பது புகழேந்திக்கு நன்றாகவே புரிந்தது. இருந்தாலும் அருள்மொழியின் விருப்பத்தையும் அறிய வேண்டும். அதனால் வீட்டில் அனைவரிடமும் கலந்து ஆலோசித்துவிட்டு சொல்வதாக கூறினார். அவர்களும் நல்ல பதிலுக்காக காத்திருப்பதாக சொல்லிவிட்டுச் சென்றனர்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.