(Reading time: 12 - 24 minutes)

வர்கள் பெண் கேட்டு வந்த சமயத்தில் சிறியவர்கள் யாரும் வீட்டில் இல்லை. அமுதன் தான் அவர்களை வெளியில் அழைத்துச் சென்றிருந்தான். எப்போது சென்னை வந்தாலும் வேலை வேலை என்று சொல்லி அதிலேயே மூழ்கிவிடுவான். அதேபோல் சுடரொளியும் வந்ததிலிருந்து எழிலுடன் கோவிலுக்கு மட்டும் தான் சென்றிருக்கிறாள். ஒருமுறை மகி அவர்கள் குழுவோடு தீம் பார்க் சென்றதும் ஒரு கசப்பான அனுபவமாக இருந்தது. அதன்பின் மகியோடு நட்பாகிவிட்டாலும் அவனோடு ரெஸ்ட்டாரண்ட், கல்லூரி என்று தானே சுற்றியிருக்கிறாள். அதனால் அமுதன் இங்கிருக்கும் இந்த கொஞ்ச நாட்கள் எங்கேயாவது வெளியில் சென்று வரலாம் என்று அமுதன், சுடர் இருவரும் முடிவு செய்தனர்.

அதை சொல்லி அனைவரையும் அழைத்த போது அருளை தவிர மற்றவர் செல்ல தயாரானர். அவள் மறுப்பு அமுதனுக்கு தாக்கத்தை ஏற்படுத்தியிருந்தன, முன்பு நான் யாரோ ஒருவன், அப்போது என்னோடு வரவில்லையென்றால் பரவாயில்லை. ஆனால் இப்போது நான் அவர்கள் குடும்பத்திற்கு தெரிந்தவனாக தான் இருக்கிறேன்.. பிறகு வருவதற்கு என்ன? அதுவும் தனியாகவா அழைக்கிறேன், அனைவரோடும் சேர்ந்து செல்ல தானே விரும்புகிறேன். அப்படியிருக்க அவள் வருவதற்கென்ன என்று அவனுக்கு நினைக்கத் தோன்றியது.

அருள் வரவில்லையென்றால் இலக்கியாவும் வர மாட்டேன் என்று சொல்லிக் கொண்டிருந்தாள். பின் மகி தான், “இப்படி எல்லாம் ஒன்னா போய் எவ்வளவு நாள் ஆச்சு.. அதில்லாம அமுதன் வேற வெளிநாட்டுல இருந்து வந்துருக்கான்.. அவனுக்கு நாம தானே சுத்திக் காட்டணும்.. இப்படி வரமாட்டேன்னு சொன்னா என்ன அர்த்தம்.. இந்த விஷயம் கதிர் மாமாவுக்கு தெரிஞ்சா என்ன நினைப்பார்.. சுடர்க்கும் இந்த ஊர் புதுசு தானே, இல்ல அவளே கூட்டிட்டு போயிடுவா” என்று எவ்வளவோ எடுத்துச் சொல்லி அவர்களை சம்மதித்து அழைத்துச் சென்றான்.

ஒவ்வொரு இடத்திற்கு செல்லும் போதும் சுடர் மகியுடனே சுற்றிக் கொண்டிருந்தாள். அது மகிக்கு மகிழ்ச்சியாக இருந்தது என்றால், அதைப்பார்த்து அருள்மொழிக்கு கடுப்பானது. அன்று தீம் பார்க் சென்றிருந்த போது இப்படித்தானே மகி மற்றும் அறிவோடு அவள் சுற்றிக் கொண்டிருந்தாள். இன்று மகி சுடருக்கே முக்கியத்துவம் கொடுப்பதாகவே அருள்மொழிக்கு தோன்றியது. அதில் சுடர் மீது இன்னும் கூட அவளுக்கு கோபம் அதிகமானது என்றுக் கூட சொல்லலாம்,

ஆனால் சுடர் அருகில் இருப்பதால் மகி மற்றவரை மறந்துவிட்டான் என்று இல்லை, இலக்கியா உடன் இருந்தால் அருள் மற்ற யாரையும் அதிகம் எதிர்பார்க்கமாட்டாள். இலக்கியா  இல்லையென்றால் தான் அவளுக்கு எதற்கும் மகி மற்று அறிவழகனின் உதவி தேவை, அதனால் இலக்கியா தான் அருள்மொழியோடு இருக்கிறாளே என்று அவன் சுடரோடு சுற்றிக் கொண்டிருந்தான். அமுதன் இருக்கும்போதும் அவனை விட்டுவிட்டு சுடர் தன்னருகிலேயே இருக்கும்போது அவனுக்கு அந்த வாய்ப்பை எப்படி தவறவிட மனம் வரும்?

அன்று அனைவரும் ஷாப்பிங்க் வந்திருந்தனர். இன்னும் சில நாட்களில் அமுதன் லண்டனுக்குச் சென்றுவிடுவான் என்பதால், சுடரொளிக்கு மட்டுமல்லாமல், உடன் வந்த மகி, புவி, தமிழ் அனைவருக்கும் பரிசுப் பொருட்கள் வாங்கிக் கொடுத்தான். தன் தந்தையை நினைத்து தயங்கிய இலக்கியாவை கூட,

“அறிவு, மகி போல என்னையும் உன்னோட அண்ணனா நினைச்சு வாங்கிக்கோ..” என்று சொல்லி வாங்க வைத்தான்.

ஆனால் அருள் மட்டும், “எனக்கு எதுக்கு நீங்க வாங்கிக் கொடுக்கணும்? எது வேண்டுமானாலும் வாங்கிக் கொடுக்க எங்க மாமா இருக்கார்.. எனக்கு இப்போதைக்கு எதுவும் தேவைப்படல.. அதனால எதுவும் எனக்கு வேண்டாம்..” என்று பிடிவாதமாக கூறினாள்.

மற்றவர் எத்தனை எடுத்துச் சொல்லியும் அவள் அதே பிடிவாதத்தில் நின்றாள். அருள்மொழியின் இந்த குணம் அமுதனுக்கு கோபத்தை தான் வரவழைத்தது. இன்னும் கூட யாரோ போல் அவள் ஒதுக்கம் காட்டுவது எரிச்சலை தந்தது. அதனால்  அவளை பரிசுப் பொருட்களை வாங்கச் சொல்லி அவன் கட்டாயப்படுத்தவில்லை.

ஆனால் மகிக்கு தான் மனசு கேக்காமல், எல்லோரும் வாங்கும் போது நீ மட்டும் எதுவும் வாங்கிக்கலன்னா எப்படி அருள்? சரி அமுதன் வாங்கிக் கொடுத்தா தானே வேண்டாம்.. நான் வாங்கிக் கொடுக்கிறேன் வாங்கிக்கோ..” என்றுக் கூறினான். பின் அவளும் சரி என்று வாங்கிக் கொண்டாள்.

ஷாப்பிங் முடித்ததும் அனைவரும் சுடர் வீட்டுக்கு செல்வதென முன்பே முடிவு செய்திருந்தனர். தமிழ், புவிக்கு இப்போது பள்ளி விடுமுறைக் காலம் என்றாலும், கோடை கால வகுப்புகளுக்கு அவர்கள் செல்வதால், அவர்களை வீட்டில் விட வேண்டும்,

இலக்கியா வந்ததிலிருந்து இன்னும் வீட்டிற்கு வரவில்லை என்று எழில் குறைப்பட்டுக் கொண்டாள். அதனால் தமிழ், புவியோடு அருள்மொழியும் இலக்கியாவும் உடன் செல்வதாக முடிவெடுத்தனர். சுடரும் அவர்களோடு தான் செல்ல வேண்டும், அதனால் தனியாக அவர்களை அனுப்பி வைக்க வேண்டாமென்று மகியும் அவர்களோடு செல்ல இருந்தான்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.