(Reading time: 5 - 9 minutes)

தொடர்கதை - காயத்ரி மந்திரத்தை... – 09 - ஜெய்

Gayathri manthirathai

ன்னப்பா டாக்டர் வந்துட்டாரா....”

“இல்லைப்பா சுந்தர் அவர் வர இன்னும் ஒரு மணி நேரம் ஆகும் போல இருக்குது....”

“ஓ அப்போ சதீஷ் ரூம்லதான் இருக்கானா.... அப்போ நீங்களும் அங்கேயே இருக்கலாமேப்பா... ஏன் வாசல்ல வந்து நின்னுட்டு இருக்கீங்க...”

“அவனை காலைல ஆறு மணிக்கே வந்து நர்ஸ் ஏதோ செக் பண்ணனும்.... அப்பறம் ஆபரேஷன்க்கு தயார் பண்ணனும்.... அப்படின்னு கூட்டிட்டு போய்டுச்சு...”

“மதியம் சாப்பிட்டீங்களா.... இல்லைன்னா உங்களுக்கு எதாச்சும் வாங்கிட்டு வரவா....”

“இல்லை தம்பி.... ஒண்ணும் வேணாம்.... புள்ளைக்கு நல்லபடியா அறுவை சிகிச்சை முடிஞ்சு கண்ணு முழிச்சு பார்க்கணும்.... அப்போதான் எனக்கு நிம்மதி....”

“அவன் நல்லாய்டுவான்ப்பா.... நீங்க கவலைப்படாம இருங்க....”

“எப்படி தம்பி கவலைப்படாம இருக்க.... பத்தொம்போது வயசுதான் ஆகுது... அதுக்குள்ளே கிட்னி எடுக்கணும்ன்னு இந்த டாக்டர் சொல்றாரு.... சதீஷ் அன்னைக்கு போன்ல சொன்னத கேட்ட உடனே எனக்கு ஈரக்கொலையே ஆடிப்போச்சு தம்பி.... என் பொஞ்சாதி விஷயத்தை கேட்ட உடனே மயக்கம் போட்டே விழுந்துட்டா... எங்களுக்கு தலைச்சன் புள்ள.... அவன் நல்லா படிச்சு பெரியாளா வரணும்ன்னுதான் மொத்த குடும்பமுமே கஷ்டப்படறோம்... அவனுக்கு எதாச்சும் ஒண்ணுனா நாங்க யாருமே தாங்க மாட்டோம் தம்பி....”

“அது கண்டிப்பா எடுக்கணும்ன்னு டாக்டர் சொல்லலைப்பா.... இன்னைக்கு ஓரளவு செயல்பட்டாக் கூட அப்படியே விட்டுடுவாங்க... நாம நல்லதையே நினைப்போம்.... சரி நான் போய் உங்களுக்கு காபி வாங்கிட்டு அப்படியே எத்தனை மணிக்கு டாக்டர் வருவாருன்னு கேட்டுட்டு வரேன்...”,சதீஷ் கான்டீன் நோக்கி சென்றான்...

அடுத்த இரண்டு மணி நேரத்தில் அறுவை சிகிச்சை நிபுணர் வர சதீஷிற்கு அறுவை சிகிச்சை ஆரம்பமாகியது.... சதீஷின் தந்தையும், சுந்தரும் ஆபேரஷன் தியேட்டர் வாசலில் அனைத்து கடவுள்களையும் வேண்டியபடி காத்திருந்தார்கள்....

ணியின் பெற்றோர் அரசு மருத்துவமனைக்கு சென்று சேருவதற்குள் மணியின் உடம்பு பிரேத பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு உறவினர் வசம் ஒப்படைக்க தயாராக இருந்தது....

மணியின் தந்தையிடம் வந்த காவலதிகாரி பிரேதப்பரிசோதனை அறிக்கையில் கையெழுத்திட்டு அவன் உடலை வாங்கி செல்லுமாறு கூறினார்....

இவர்கள் பேசிக்கொண்டிருக்கும்போதே மணியின் உறவினர்கள், மற்றும் அவன் இருக்கும் இடத்தை சேர்ந்தவர்கள்  அனைவரையும் ஒன்றாக திரட்டி வந்திருந்தான் மணியின் நண்பன்....

Pencilஹாய் பிரெண்ட், அத்தியாயத்தை படித்து விட்டு, உங்கள் கருத்தை பகிர மறக்காதீர்கள். உங்கள் ஒவ்வொரு கமன்ட்டும் எழுத்தாளருக்கு மிக பெரிய டானிக். உங்கள் கமண்ட்டை பகிர இதை க்ளிக் செய்யுங்கள் down

“என்னாச்சு மாமா....”

“எல்லாம் முடிஞ்சு போச்சுடா தம்பி... மொத்தமா கூறு போட்டுட்டாங்க... இப்போ அந்த கூறு போட்ட உடம்பை கொண்டு போக சொல்றாங்க....”

“சார் அந்த அறிக்கைல என்ன சார் எழுதி இருக்கு.....”

“என்ன தம்பி புதுசா கேக்கறீங்க... மணி ஷாக் அடிச்சுத்தானே செத்தான்... அதைத்தான் எழுதி இருக்காங்க....”

“சார் அவன் இப்படி தற்கொலைலாம் பண்ணிக்கற ஆள் இல்லை சார்.... எங்களுக்கு சந்தேகமா இருக்கு... தப்பே பண்ணாத ஒருத்தன் எதுக்காக தற்கொலை பண்ணிக்கணும்.... நாங்க இந்த ரிப்போர்ட் நம்ப மாட்டோம்.... எங்க மாமா கையெழுத்து போட மாட்டாரு....”

மணியின் நண்பன் அதிகாரியுடன் வாதிட, அவனின் சொந்தங்களும் அதையே ஆமோதித்து கத்த ஆரம்பித்தார்கள்....

காவலதிகாரி தன் மேலதிகாரியை அழைத்து கூற அவர் உடனே அங்கு வருவதாக கூறி அடுத்த அரை மணியில் வந்து சேர்ந்தார்....

“என்ன தம்பி இங்க பிரச்சனை பண்ணிட்டு இருக்கீங்க....”

“சார் மணியோட மரணத்துல எங்களுக்கு சந்தேகம் இருக்கு சார்.... அதனால இந்த அறிக்கையை நாங்க நம்ப மாட்டோம்.....”

“அவன் வயரை கடிச்சு தற்கொலை பண்ணிக்கிட்டான் தம்பி.... இதுல சந்தேகப்பட எந்த விஷயமும் இல்லை... தேவை இல்லாம பேசிட்டு இருக்காதீங்க....”

“சரி சார்.... அப்படி சந்தேகப்பட எதுவும் இல்லை இல்லையா... அப்போ நாங்க சொல்ற மருத்துவமனைல பிரேதப்பரிசோதனை பண்ணலாம்... அந்த அறிக்கையும் இதே மாதிரி வந்தா அதும் பிறகு எந்த தடங்கலும் பண்ணாம மணியோட உடம்பை எடுத்துட்டு போறோம்....”

“யோவ் போனா போகட்டுமேன்னு மரியாதை கொடுத்து பேசினா ரொம்பத்தான் துள்ளுற.... பிரேதப்பரிசோதனை அப்படினாலே அது அரசாங்க மருத்துவமனைலதான் நடக்கும்... நீ என்ன பெரிய அப்பாட்டக்கரா.... நீ சொல்ற இடத்துல வந்து பண்ண.... மூடிட்டு கம்முன்னு போய் ஓரமா உக்காரு....”, மணியின் நண்பனிடம் காய்ந்த இன்ஸ்பெக்டர் அவனின் தந்தையை கோவமாக நோக்கி....

“என்னா பெரியவரே... சின்ன பசங்களை பேசவிட்டு பிரச்சனை பண்ணுறீங்களா.... அத்தனை பேரையும் ஒட்டு மொத்தமா உள்ள தூக்கி வச்சுடுவேன்.... ஒழுங்கா காட்டுற இடத்துல கையெழுத்து போட்டுட்டு பொணத்தை தூக்கிட்டு போங்க....”

காவல்துறையின் மனிதாபமில்லா பேச்சு அங்கிருந்த மணியின் சொந்தங்களை ஆத்திரம் கொள்ள செய்ததது.... அவர்கள் அனைவரும் மணியின் உடம்பை வாங்க முடியாது... காவல்துறையினர் மீது நம்பிக்கையில்லாததால் உடனடியாக மறு பிரேதப்பரிசோதனை நடைபெற வேண்டும் என்று மருத்துவமனையின் முன்பாக போராட்டத்தில் ஈடுபட ஆரம்பித்தார்கள்.....

பொது மக்களில் சிலர் காவல் துறையினருக்கும் மணியின் சொந்தங்களுக்கும் இடையில் நடந்த வாக்குவாதத்தை பதிவு செய்து அதை பொது வெளியில் வாட்ஸ்அப்பிலும், முகநூல் புத்தகத்திலும் பதிவேற்ற ஆரம்பித்தார்கள்....

இவர்களின் போராட்டத்தை கேள்விப்பட்டு ஏகப்பட்ட செய்தி சேனல்களும் அங்கு வந்து குழும ஆரம்பித்தது.....  

தொடரும்

Episode # 08

Episode # 10

Go to Gayathri manthirathai story main page

{kunena_discuss:1216} 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.