(Reading time: 21 - 41 minutes)

முதன் எடுத்து வந்திருந்த காரிலேயே நால்வரும் வீட்டிற்கு வந்தனர். கிளம்பும் போதே கலை அத்தையின் முகம் சரியில்லாததால் அமுதனை வீட்டுக்கு அழைக்கலாமா? என்பது மகியின் எண்ணமாக இருந்தது.

அதனால் வீட்டு வாசலில் இறக்கிவிட்டதும், “சரி அமுதன் இப்பவே லேட் நைட் ஆயிடுச்சு, அதனால நீ கிளம்பு.. எதுவா இருந்தாலும் காலையில் பேசிக்கலாம்..” என்று அவனை அனுப்பிவிட்டு மூவரும் வீட்டுக்குள் நுழைய அனைவருமே இன்னும் விழித்தப்படி இருந்தனர்.

ரெசார்ட்டை சென்று அடைந்ததுமே, “அருள் நல்லா தான் இருக்கா, அவ தூங்கி எழுந்ததும் கூட்டிட்டு வரோம்.. நீங்கல்லாம் சாப்பிட்டு படுங்க, நாங்க வந்து காலிங்பெல் அடிக்கிறோம்..” என்று மகி சொல்லி இருந்தான் தான்,

ஆனால் யாருக்கும் மனம் கேட்காமல் உறங்காமல் விழித்திருந்தனர். அங்கே வீட்டில் சுடரும் அவளின் தம்பிகளும் தனியாக இருப்பார்கள் என்பதால், எழில் கதிரவனை மட்டும் வீட்டுக்கு அனுப்பி வைத்தாள்.

அவரை தவிர மற்றவர்கள் இவர்களுக்காக காத்திருக்க, அருளை பார்த்ததும் பாட்டி, பூங்கொடி, எழில், இலக்கியா நால்வரும் அவளின் நலத்தை விசாரித்தனர். வலியின் அவஸ்தை இல்லையென்றாலும் பார்ப்பதற்கு சோர்வாக தெரிந்தாள்.

“அருள் போகும் போது எங்கப் போறோம்னு தெளிவா சொல்லிட்டு போக மாட்டீயாம்மா.. இப்போ பாரு தேவையில்லாத சங்கடம், பிரச்சனை.. நீ அமுதன் தம்பிக் கூட போகப் போறேன்னு சொன்னா, நாங்க வேண்டாம்னா சொல்லப் போறோம்..

சாதாரண நாளா இருந்தாக் கூட பரவாயில்லை.. இப்படி பொண்ணு பார்க்க வரும்போது பொறுப்பில்லாம் இருக்கலாமா? அதனால என்னல்லாம் சங்கடத்தை சந்திக்க வேண்டியிருந்துச்சு தெரியுமா?” என்று புகழேந்தி கேட்கவும்,

“வரும்போது மகியும் அறிவும் எல்லாம் சொன்னாங்க மாமா.. ரொம்ப சாரி.. நான் கரெக்டான நேரத்துக்கு வந்துடலாம்னு தான் இருந்தேன்.. ஆனா இப்படி ஆகும்னு எதிர்பார்க்கல..” என்று தன் நிலையை கூற,

“விடுங்க.. எல்லாம் நன்மைக்கேன்னு எடுத்துக்கணும், இந்த சம்பந்தம் தட்டி போனதும் அப்படித்தான், போன்ல வந்த விஷயத்தைக் கேட்டு தப்பா நினைக்கலாமா? உண்மையிலேயே நடந்தது என்னன்னு ஆராய வேண்டாமா? கல்யாணம் விஷயம் பேச ஆரம்பிக்கிறதுக்கு முன்னயே இப்படி அவங்களை பத்தி தெரிஞ்சுக்கிட்டது நல்லதுக்கு தான்..” என்று பூங்கொடி கூறினார்.

கூடவே எழிலும், “அண்ணி சொல்றதும் சரி தான் ண்ணா..” என்று ஒத்து பேசினாள்.

கலை மட்டும் அமைதியாக இருக்க, அவர் கோபமாக இருப்பதை அருள்  புரிந்துக் கொண்டு, அவர் அருகில் சென்று, “அம்மா..” என்று அழைக்க, அவரோ பாளார் என்று அவள் கன்னத்தில் அறைந்தார்.

கலையின் இச்செயலை யாரும் எதிர்பார்க்கவில்லை, அனைவரும் அதில் அதிர்ச்சியாக, பாட்டி தான் அவர் அமர்ந்திருந்த இடத்தில் இருந்து எழுந்து வந்து,

“ஏ அறிவிருக்கா டீ உனக்கு, ஏற்கனவே புள்ள உடம்பு சரியில்லாம இருக்கு.. இப்படி போட்டு அடிக்கிற.. எதுவா இருந்தாலும் வார்த்தையில பேசு..” என்று அதட்டினார்.

“இவ செஞ்சிருக்க காரியத்துக்கு அடிக்காம என்ன செய்வாங்க..” என்று கலை திருப்பி பேச,

“அதுக்கு வயசுக்கு வந்த புள்ளையை அடிப்பீயா?..” என்று அவரை பார்த்து கேட்ட முத்து பாட்டி,

“இங்கப்பாருங்க இப்பவே ரொம்ப நேரம் ஆயிடுச்சு, எதுவா இருந்தாலும் நாளைக்கு பேசலாம் போய் படுங்க..” என்று அனைவரையும் பார்த்து கூற, அனைவரும் அதை ஆமோதித்தப்படி அவரவர் அறைக்குச் செல்ல,

“அருள் இன்னைக்கு நீ என்கூட படுத்துக்கோ, இல்ல இவ உன்னை தூங்க விடாம திட்டிட்டே இருப்பா.. விட்டா திரும்ப அடிச்சாலும் அடிப்பா..” என்று கலையை பார்த்துக் கொண்டே சொல்லிவிட்டு, அருளை அவர் அறைக்கு அழைத்துச் சென்றார்.

மறுநாள் காலையில் பூங்கொடி, கலையை தவிர, மற்றவர்கள் கொஞ்சம் தாமதமாக தான் எழுந்தனர். பூங்கொடியும் கலையும் சமயலறையில் வேலையாக இருந்தனர். புகழேந்தி கல்லூரிக்கு கிளம்பிக் கொண்டிருக்க, இரவு அறிவு அவன் அறைக்குச் செல்லாமல் இங்கேயே தங்கிவிட, அவனும் மகியும் டீ குடித்துக் கொண்டிருந்தனர். இலக்கியாவும் பாட்டியும் கூட அங்கேயே தான் இருந்தனர்.

அங்கே வீட்டில் பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்ப வேண்டுமென்று எழில் காலையிலேயே கிளம்பியிருந்தாள்.

தன் அன்னையின் கோபத்தை நினைத்து அருள்மொழிக்கு இரவில் சரியாக உறக்கம் வரவில்லை. பின் விடியற்காலையில் தான் நன்றாக உறங்க ஆரம்பித்து பின் எழுந்தவள், குளித்துவிட்டு வெளியே வந்தாள். பின் நேராக தன் அன்னையிடம் தான் முதலில் சென்றாள்.

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

பத்மினியின் "உன்னை விட மாட்டேன் என்னுயிரே..." - காதல் கலந்த தொடர்கதை...

படிக்கத் தவறாதீர்கள்..

கலையின் அருகில் சென்று “அம்மா..” என்று அவள் அழைத்ததும்,

“அவளை என்கிட்ட பேச வேண்டாம்னு சொல்லுங்க அண்ணி..” என்று கலை கோபமாக பூங்கொடியை பார்த்து கூறினார்.

“காலையிலேயே ஆரம்பிச்சிட்டா..” என்று பாட்டி அமர்ந்திருந்த இடத்தில் இருந்தப்படியே கூறினார்.

“கலை.. அருள் தப்பே செய்யலன்னு நாங்க சொல்ல வரல.. ஆனா அது மன்னிக்க கூடிய தப்பு தான், நேத்து அவ எந்த நிலையில் இருந்தான்னு சொல்லியும், இப்படி கோபப்பட்றது நல்லா இல்ல..”

“எது மன்னிக்க கூடிய தப்பு அண்ணி.. ஒரு கல்யாண ஆகாத பையன் கூட, ஊரை விட்டு தள்ளி இருக்கிற ஹோட்டல்க்கு வீட்ல சொல்லாம போயிருக்கான்னா, அது தப்பில்லையா?”

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.