(Reading time: 21 - 41 minutes)

வ எதுக்காக போனான்னு தான் சொன்னாளே..”

“எப்போ சொன்னா நாம அசிங்கப்பட்டதுக்கு பிறகு தானே, பக்கத்து வீட்டு ஆளுங்கக்கிட்டல்லாம் உன்னோட பொண்ணா நல்லா வளர்க்கலன்னு நான் சொல்லிக்கிட்டு இருந்தேன்.. இப்போ அவங்கல்லாம் என்னை எந்த மாதிரி அண்ணி பார்ப்பாங்க.. உன்னோட பொண்ணை முதலில் சரியா வளர்த்திருக்கியான்னு என்னை பார்த்து கேக்க மாட்டாங்களா?”

“அப்படி மத்தவங்க பேசற அளவுக்கு என்ன நடந்துச்சு.. நம்ம அருள் அப்படிப்பட்ட பொண்ணா.. அவ என்ன கண்ட ஆம்பிளைங்க கூட சுத்தறவளா? அமுதன் நமக்கு தெரிஞ்ச பையன் தானே.. மகி, அறிவு மாதிரி தானே அவனும், அதில்லாம அருளுக்கு அவனை முன்னாடியே வேற தெரியும்.. அதனால ஒன்னும் தப்பில்லன்னு போயிருப்பா.. அதுவும் ஊர் சுத்தவா? வேலை விஷயமா தானே,  இதை பெருசா பேசற..”

“மகி, அறிவு போல அந்த பையனும்னு எப்படி சொல்வீங்க.. தெரிஞ்ச பையனா இருந்தா அவன் கூப்பிட்டா எங்க வேணும்னாலும் போயிடலாமா? அதுவும் ஆரம்பத்திலேயே நான் அந்த பையன்கிட்ட இருந்து கொஞ்சம் தள்ளியே இருன்னு சொல்லியும் அவ இப்படி செஞ்சா என்ன அர்த்தம்? தெரிஞ்ச பையன்னு மட்டும் தான் அவனோட போனாளா? இல்ல அதுக்கும் மேலேயா?” என்ற அவரது பேச்சில் அருள் அப்படியே கலங்கிப் போனாள். கண்களில் கண்ணீர் வந்துவிட்டது அவளுக்கு,

“கலை ஏதோ கோபத்துல பேசறேன்னு அமைதியா இருந்தா.. என்னல்லாம் பேசற.. நீ பெத்த பொண்ணை நீயே தப்பா பேசலாமா?” என்று புகழேந்தி அதட்டினார்.

“அவளுக்கு கிறுக்கு தாண்டா பிடிச்சிருக்கு.. நேத்து அந்த சம்பந்தம் கூடி வரல.. அந்த கோபத்தை தான் அவ இப்படியெல்லாம் காமிக்கிறா..” என்று பாட்டியும் பேசினார்.

“அம்மா ஏதாச்சும் உளறாத.. என்னைக்கும் யாரும் எதுவும் தப்பா பேசிடக் கூடாதுங்கிறதுல நான் கவனமா இருப்பேன்னு உனக்கு தெரியாதா? எனக்கு பிறந்த வீடு தான் நிரந்தரம்னு ஆயிடுச்சு.. அப்பா இல்லாத பொண்ணு அதான் இப்படி இருக்குன்னு என்னோட பொண்ணுங்களை யாரும் சொல்லிடக் கூடாது..

தங்கச்சியும் தங்கச்சி பொண்ணுங்களும் பாரமா ஆயிட்டாங்க போல, அதான் அவங்களை கண்டுக்காம விட்டுட்டாருன்னு யாரும் என்னோட அண்ணனை குறை சொல்லிடக் கூடாது.. அதை தான் நான் எப்போதும் நினைப்பேன்..”

“ஊர்ல பேசறதல்லாம் நாம பெருசா நினைச்சா அப்புறம் நாம வாழவே முடியாது கலை..  அதுக்காக பார்த்து நம்ம சந்தோஷத்தை  இழக்கக் கூடாது ம்மா..”

“இது சாதாரணமா எடுத்துக்குற விஷயமில்ல ண்ணா.. இது இவளோட வாழ்க்கை சம்பந்தப்பட்டது. என்னோட நாத்தனார் நேத்து மாப்பிள்ளை வீட்ல சொன்னதோட விடமாட்டா.. சொந்தங்காரங்க, தெரிஞ்சவங்கன்னு எல்லோர்க்கிட்டேயும் இந்த விஷயத்தை சொல்லியிருப்பா..

இந்த சம்பந்தம் போனா போகுது.. ஆனா நாளைக்கு வேற ஒரு சம்பந்தம் வந்து அப்பவும் இதை அவங்ககிட்ட சொல்ல மாட்டான்னு என்ன நிச்சயம்? நாளைக்கு நல்லது கெட்டதுன்னு உறவுக்காரங்க வீட்ல நான் எப்படி தலை காட்ட முடியும்? எல்லாம் இதைப்பத்தி கேக்காம இருப்பாங்களா?

நாளைக்கு இவளுக்கு ஒரு நல்லதுன்னா அவங்களை அழைக்காம இருக்க முடியுமா? அப்படியே அவங்களை ஒதுக்கிட்டு இவளுக்கு கல்யாணம் பண்ணாலும், வயித்தெறிச்சலில் இவளைப் பத்தி தப்பா சொல்லாம இருப்பாங்களா?”

“இதுதான் உன்னோட பிரச்சனையா கலை.. இதுக்கா இப்படி கவலைப்பட்டுக்கிட்டு இருக்க.. நம்ம அருள்க்கு திரும்ப வெளியில் மாப்பிள்ளை பார்த்தா தானே பிரச்சனை.. நான் முன்ன சொன்னது போல மகிக்கும் அருள்க்கும் கல்யாணம் செஞ்சு வச்சா என்ன?” என்ற பாட்டி,

“ஏண்டா புகழ், முன்ன தான் இந்த பேச்சை எடுக்க வேண்டாம்னு சொன்ன.. இப்போ இப்படி ஒரு சங்கடமான சூழ்நிலையில நம்ம மகி, அருள்க்கு கல்யாணம் செஞ்சு வைக்க மாட்டியா?” என்று புகழேந்தியைப் பார்த்து கேட்டார்.

இது என்ன இப்படி ஒரு பேச்சு.. அதுவும் முன்னமே வேறு இந்த பேச்சை பேசினார்களா? என்று மகியும் அருளும் பாட்டியை அதிர்ச்சியோடு பார்த்தனர்.

பாட்டி கேட்டதற்கு புகழேந்தி பதில் சொல்வதற்கு முன்பே, “இல்லம்மா இது சரி வராது.. முதலிலேயே வேண்டாம்னு முடிவெடுத்த பேச்சு இது.. இப்போ திரும்ப இதை ஆரம்பிக்க வேண்டாம்..” என்று கலை தான் பதில் கூறினார்.

“ஏன் வேண்டாம்..” பாட்டி கேட்க,

“இல்லம்மா.. இவ்வளவு நடந்ததுக்குப் பிறகு இந்த கல்யாணப் பேச்சை ஆரம்பிச்சா.. உண்மையிலேயே தப்பு நடந்திருக்கு, அதை பூசி மொழுக தான் முறைப்பையனோட கல்யாணம்னு பேச்சு வரும்..” என்றார் கலை,

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

சித்ராவின் "சுஷ்ருதா..." - வித்தியாசமான காதல் தொடர்கதை...

படிக்கத் தவறாதீர்கள்..

“அப்போ என்ன தான் டீ செய்ய சொல்ற..” என்று அவர் திருப்பிக் கேட்க,

“கொஞ்சம் அருள் கல்யாண விஷயத்தை ஆறப் போட்றது தான் இப்போதைக்கு நல்லது அத்தை..” என்று பூங்கொடி கூறினார்.

“இல்ல அண்ணி.. அருள் கல்யாணம் உடனே நடக்கணும்.. அதுவும் யாரோட தப்பா பேச்சு வந்துச்சோ.. அந்த பையனோட தான் நடக்கணும்..” என்று கலை தீர்மானமாக கூறினார்.

“கலை என்ன பேசற, இப்போ இத மட்டும் எல்லோரும் தப்பா பேச மட்டாங்களா? தப்பு நடந்ததால தான் அவசரமா கல்யாணம் செஞ்சு வச்சிட்டாங்கன்னு சொல்ல மாட்டாங்களா?”

“அது ரெண்டுப்பேரும் விரும்பினாங்க.. அதனால கல்யாணம் முடிவுப் பண்ணிட்டோம்னு சொல்லிடலாம்..” என்று கலை சொன்ன போது யாருக்கும் என்ன பதில் சொல்வதென்றே புரியவில்லை. புரியாமல் தெரியாமல் பேசினால் சொல்லி புரிய வைக்கலாம், ஆனால் தெரிந்தே பேசினால் என்னவென்று சொல்வது? ஆனாலும் பாட்டியால் பதில் பேசாமல் இருக்க முடியவில்லை. 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.