(Reading time: 13 - 26 minutes)

இத்தகைய சிறப்புகளைக் கொண்ட மதுரையின் பாளையகாரர்களில் ஒருவர் சேதிராயன். அனைத்துப் பாளயங்களிலும் சற்றே பிரசித்தி பெற்றவராய் திகழ்ந்தார். வளமையிலும் படைகளின் வீரத்திலும் மிகச் சிறந்து விளங்கியதே அதன் காரணம். நாயக்க அரசர்களுக்கே முக்கியமானவரில் ஒருவராய் திகழ்ந்தார். இவையனைத்தையும் கடந்த அவரின் மற்றுமொரு அரிய பொக்கிஷம் அவரின் ஒரே மகள்.

சேதிராயன் - கங்காம்மாவின் ஒரே வாரிசு சிவகங்காவதி. பெயரைப் போன்றே மிகவும் வீத்தியாசமானவள்.சின்னஞ்சிறு வயது முதலே அத்தனை கலைகளையும் கற்பதில் ஆர்வம் மிகுந்தவளாய் இருந்தாள்.ஆய கலைகள் அறுபத்தி நான்கில் அநேகத்தையும் கற்றுத் தேர்ந்தாள்.அறிவிற்கும் வீரத்திற்கும் மேலான அவளின் அழகு மற்ற அத்துனை பாளையத்திலும் பிரசித்தி பெற்றிருந்தது.

பதினாறு வயது பருவ மடந்தையவளை தன்னவளாக்கும் முயற்சியில் பல பாளயத்துகாரர்களும் முயன்று தோல்வியை தழுவியிருந்தனர்.நாயக்கர்களின் அரச இளவரசர்கள் கூட அவளை ஆசை நாயகியாக்கி கொள்ள முனைந்திருந்தனர்.

ஆனால் யாருக்கும் அஞ்சா பெண்ணவள் அத்துனை ஆண்மகனையும் வாள் யுத்தத்திற்கு அழைத்து அதில் வெற்றி பெறுபவனை திருமணம் புரிவதாய் கூறினாள்.

முதலில் பெண்ணென குறை மதிப்பிட்டவர்கள் யுத்தத்திற்கு தயாராக அவளின் வாள் வீச்சின் முன் தலை தாழ்ந்து செல்லும் நிலையே ஏற்பட்டது.ஏராளமான நிறைகளிருந்தாலும் சிவகங்காவதியின் வீரத்தால் தோல்வியுற்றவர்கள் சற்று மனக்கசப்போடு அவர்களை பழிதீர்க்கும் காலத்திற்காக காத்திருந்தனர்.

இப்படியான புகழ்ச்சிகளை தலை மீது கீரீடமாய் சூடியிருப்பவள் தன் தோழியோடு அந்தபுரத்தில் கண்கட்டு விளையாடிக் கொண்டிருந்தாள்.

“கங்கா எங்கே இருக்கிறாய்?எனக்குத் தலையெல்லாம் சுற்றுகிறது.சற்றே இரக்கம் காட்ட கூடாதா?”

“எத்தனை முறை உனக்கு விளக்கி விட்டேன்.என் பெயர் சிவகங்காவதி.அப்படி மட்டுமே என்னை அழைக்க வேண்டும்.ஏதோ நீதான் பெயரை வைத்ததை போல் உன் விருப்பத்திற்கு அழைக்காதே”,என்றவள் அங்கிருந்த அரச நாற்காலியில் அமர்ந்தாள்.

“சரி சரி இளவரசியாரே தெரியாமல் அழைத்துவிட்டேன்.அதற்கு ஏன் இத்தனை கோபம்.நான் தங்களின் ப்ரியத்திற்குரிய தமக்கையல்லவா?”

“அடி போடி என்னை நன்றாக ஏய்க்க கற்றுக் கொண்டிருக்கிறாய் திருடி.எனக்கும் உன்னை விட்டால் நட்பென்று யார் இருக்கிறார்.ஆனால் ஏனோ என் பெயரை சுருக்கினால் மட்டும் கோபம் எல்லை மீறி விடுகிறது.”

“ம்ம் உன்னவரின் நிலை மிகவும் கவலைகிடம் தான் போலும்.ஒரு பெயருக்கே இப்படியா!!”,என்று கூறி அவளிடம் அகப்படாமல் ஓட ஆரம்பித்திருந்த மணிமேகலை அவளின் ஒரே தோழி.

சிவகங்காவதியை விட மூன்று வயது பெரியவள்.படைத் தளபதியாரின் மகள்.ஏனோ சிறு வயது முதலே அவளைத் தவிர யாருடனும் பழக விருப்பமற்று போய்விட்டது சிவகங்காவதிக்கு.

அவள் கூறியது போல் அவள் பெயரை யாராக இருப்பினும் முழுவதுமாகவே அழைக்க வேண்டும்.அது அவளின் பெற்றோர் என்றாலும் சரி.

அவளது தாய் அவ்வப்போது குறைப்பட்டு கொள்வார்,”என்ன கண்ணம்மா பெற்றவர்கள் கூட ஆசையாய் எங்களுக்கு பிடித்தது மாதிரி அழைக்க கூடாதா?”

“ம்ம் உங்களுக்கு பிடித்துதானே இந்த பெயரை எனக்கு நாமகரணம் செய்தீர்கள்.அப்படியிருக்க இப்போது எதற்காக மாற்ற வேண்டும்.இதோ பாருங்கள் தாயே என் பெயரின் முதற்பாதி என் அப்பன் ஈசனுடையது மறுபாதி அவரின் விருப்பமான கங்கையை குறிக்கிறது.

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

பத்மினியின் "உன்னை விட மாட்டேன் என்னுயிரே..." - காதல் கலந்த தொடர்கதை...

படிக்கத் தவறாதீர்கள்..

அப்படியிருக்க முதல்பாதி விடுபட்டால் நான் வருந்துவேன் மறுபாதி விடுபட்டால் என் ஈசன் வருந்துவான்.அதற்காகத்தான் அப்படி அழைக்காதீர்கள் என்கிறேன்.அதுமட்டுமல்லாது “சிவகங்காவதி”,எனும்போதே எத்துணை கம்பீரமாய் இருக்கிறது.அதை எதற்காக தவிர்ப்பானேன்”,என்று விளக்கம் அளித்து நகர்வாள்.

கூறியவை அனைத்தும் உண்மைதான் எனினும் இவையனைத்தையும் தாண்டிய முக்கிய காரணம் ஈசனின் மீதான தீரா காதலே. அழகு அறிவு தைரியமனைத்தையும் தாண்டி சிவனே அவளுடைய அனைத்துமாய் இருந்தார் என்றே கூற வேண்டும்.

ஒவ்வொரு நாளின் தொடக்கமும் முடிவும் சிவனன்றி வேறில்லை அவளுக்கு.காலையில் ஒரு மணி நேரப் பொழுது சிவனுக்கும் அவளுக்குமானது.பாடல்களாலும் இறை துதியாலும் பூஜித்து மகிழ்வாள்.

பல நாட்கள் ஒன்றுமே தோன்றாமல் ஈசனின் விக்ரகத்தை கண் நிறைத்து பார்த்தவாறு அமைதியாய் அமர்ந்திருப்பாள்.அப்படியான நாட்களில் நிச்சயம் அவள் மன தேடலுக்கான எதோ ஒரு விடையை ஈசனிடமிருந்து பெற்றுக் கொள்வாள்.

நன்மை தீமை என எதுவாயிருப்பினும் அன்றைய நாளின் தொடக்கத்திலேயே அவள் மனம் அறிந்துவிட்டிருக்கும்.பல நேரங்களில் அவளின் தந்தைக்கே அவள் பக்தியின் மீது ஒருவித மெய்சிலிர்ப்பு ஏற்படும்.அவள் மனதிற்கு சரியென படவில்லை எனில் எந்த ஒரு காரியத்தையும் தொடங்க மாட்டார்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.