(Reading time: 13 - 25 minutes)

“அந்த நேரம் அருள் சீக்கிரம் வீட்டுக்கு வராததால என்ன நடந்துச்சுன்னும் உங்களுக்கு தெரிய வந்திருக்கும்..”

“யாரோ எங்களை ரெசார்ட்ல பார்த்துட்டு தப்பா பேசனதா மகிழ் சொன்னான்.. அதெல்லாம் கேர் செஞ்சுக்காதீங்க ஆன்ட்டி.. அவங்க எந்த காலத்துல இருக்காங்க.. ஒரு பொண்ணும் பையனும் தனியா இருந்தா தப்பா பேசுவாங்களா?

இப்போ பொண்ணுங்க ஆணுக்கு நிகரா எல்லா வேலையும் பார்க்க ஆரம்பிச்சிட்டாங்க.. அதனால எத்தனையோ ஆண்களை அவங்க தனியா சந்திக்க வேண்டியிருக்கும்.. அப்போ ஒவ்வொரு முறையும் அந்த பொண்ணை தப்பா பேசிட்டிருந்தா அவளால முன்னேற முடியுமா? அப்படியே அவங்க பேசினாலும் அதுக்கு நம்ம ரெஸ்பான்ஸ் கொடுக்க கூடாது ஆன்ட்டி..”

“நீங்க சொல்றது சரிதான் தம்பி.. ஆனா ஒரு பொண்ணை வளரவிடாம செய்ய அவளோட நடத்தையை தானே முதலில் பேசறாங்க.. இந்த காலத்துல பொண்ணுங்க ஒருபக்கம் முன்னேறிக்கிட்டு வந்தாலும், இன்னமும் பொண்ணுங்களுக்கு எதிரா அநியாயம் நடக்க தானே செய்யுது..

பொண்ணுங்களுக்கு சம உரிமை கொடுக்கணும்னு பேசற எத்தனையோ ஆண்கள், தங்களோட வீட்ல இருக்க பொண்ணுங்களை அடக்கி வைக்க தான் பார்க்கிறாங்க.. எவ்வளவோ காலம் மாறிட்டாலும் ஆண்கள் வெளிய தப்பு பண்ணிட்டு வந்தா அதை பொண்ணுங்க ஏத்துக்கணும்.. ஆனா நாம கட்டிக்கப் போற பொண்ணு இன்னொரு ஆம்பிளையை சும்மாக்கூட பார்க்கக் கூடாதுங்கிறது தான் நிறைய பேரோட எண்ணமா இருக்கு..

எங்க எல்லோருக்கும் நடந்தது என்னன்னு தெரியும், ஆனா மத்தவங்களுக்கு தெரியாதில்லையா? நாளைக்கு அவளுக்கு கல்யாணம்னு திரும்ப பேச்சு வரும்போது இந்த விஷயம் அருளை பாதிக்கக் கூடாதில்லையா? அதனால நீங்களே அருளை கல்யாணம் செஞ்சுக்கிட்டா நல்லா இருக்கும்..” என்றதும்,

“ஆன்ட்டி..” என்று அமுதன் பதறியப்படி எழுந்திருக்க, அங்கிருந்த அனைவருக்குமே கொஞ்சம் பதட்டமாகிவிட்டது.

“அமுதா கொஞ்சம் உக்காரு..” என்று கதிர் தான் திரும்ப அவனை அமர வைத்தார்.

“என்ன இவனுக்கு இதில் விருப்ப இல்லையா?” என்பது போல் சுடர், இலக்கியா ஏன் அருள் கூட அப்படி நினைத்து அமுதனை பார்த்துக் கொண்டிருந்தார்கள்.

“இப்படி ஒரு விஷயத்திற்காக தான் தன்னை அழைத்திருப்பார்கள் என்று எதிர்பார்க்காத அமுதன் பதட்டத்தை குறைக்க அங்கிருந்த தண்ணீரை எடுத்து பருகினான். பின்,

“ இங்கப்பாருங்க.. இப்படி ஒரு முடிவெடுக்கும் அளவுக்கு அப்படி என்ன நடந்துச்சுன்னு தெரியல.. அருளை அங்க நான் அபிஷியலா தான் கூப்பிட்டிக்கிட்டு போனேன்.. அங்க அருள்க்கு உடம்பு சரியில்லாம போகாம இருந்தா வேலை முடிஞ்சதும் நேரத்துக்கு இங்க வந்திருப்போம்..

ஒரு தேவைன்னு தான் இன்னும் கொஞ்ச நேரம் அங்க இருக்க வேண்டியதா போச்சு.. ஆனா அது தெரியாம யாரோ தப்பா பேசினாங்கன்னு நீங்க எங்களுக்குள்ள ஏதோ நடந்தது போல கல்யாணம் செஞ்சுக்கணும்னு சொல்றது தப்பு ஆன்ட்டி.. அதை நானும் ஏத்துக்கிட்டா அப்போ ஏதோ தப்பு இருக்குன்னு நானும் அருளும் அதை ஏத்துக்கிட்டதா ஆயிடும்.. அதனால என்னால இந்த கல்யாணத்தை ஏத்துக்க முடியாது..” என்று திட்டவட்டமாக கூறினான்.

“இப்படி சொன்னா எப்படிப்பா.. உனக்கு வேணும்னா இது சாதாரண விஷயமா இருக்கலாம்.. ஆனா இது எங்க பொண்ணோட வாழ்க்கை பிரச்சனை.. நீங்க இருக்க நாட்டுல இதெல்லாம் சாதாரணமா இருக்கலாம்.. ஆனா இங்க இன்னும் கூட பொண்ணுங்களுக்கு  சில கட்டுப்பாடுகள் இருக்கு.. அதை மீறினா அது அவங்க வாழ்க்கையை பாதிக்கும்.. 

இப்போ என்னோட பொண்ணு அந்த நிலைமைல தான் இருக்கா.. அவ வாழக்கை இப்போ உங்களால கேள்விக்குறியா இருக்கு.. அதை நீங்க தான் சரி செஞ்சுக் கொடுக்கணும்..” என்று கலை கொஞ்சம் கோபமாகவே பேசினார்.

“நடந்தது பெரிய விஷயமேயில்லை.. யாரோ ஒருத்தர் அருளை தப்பா பேசினதை வச்சு பொண்ணு பார்க்க வந்தவங்க சந்தேகப்பட்டு போனதால, அருள் வாழ்க்கை கேள்விக்குறியாச்சுன்னு சொல்றது முட்டாள்தனமா இருக்கு.. இதை ஒரு காரணமா காட்டி எங்களை கல்யாணம் செஞ்சுக்க சொல்றதை என்னால ஒத்துக்க முடியாது.. நான் என்ன அருளே இதுக்கு எப்படி ஒத்துப்பா..” என்றவன்,

அருளைப் பார்த்து, “என்ன அருள் இவங்க சொல்ற முட்டாள்தனமான காரணத்தை நீயுமா ஒத்துக்கிற.. அவங்க சொன்னாங்கன்னு இந்த கல்யாணத்துக்கு சம்மதிக்கிறியா என்ன?” என்றுக் கேட்டான்.

அவன் அப்படிக் கேட்டதும், அவள் என்ன கூறுவாள்? ஏற்கனவே மனதில் உறுத்திக் கொண்டிருந்த விஷயமல்லவா அது? அதனால் பதில் பேச முடியாமல் அவள் திணற,

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

பிரேமாவின் சுப்பையாவின் "உன்னில் தொலைந்தவன் நானடி..." - காதல் கலந்த தொடர்கதை...

படிக்கத் தவறாதீர்கள்..

இதோடு அவனுக்கு விருப்பமில்லை என்று விட்டிருந்தால் கூட பரவாயில்லை, இப்படி ஒரு திருமணம் வேண்டாம் என்று அமுதன் சொன்னது அருள்மொழிக்கு நியாயமாகவே பட்டிருக்கும், ஆனால் அடுத்து கலையோ சும்மாயிருக்காமல்,

“அவ என்ன பதில் சொல்லணும்.. ஏற்கனவே என்னோட பேச்சை மீறி அவ நடந்துக்கிட்டதுக்கு அவளுக்கு கெட்ட பேர் வந்தது தான் மிச்சம்.. சும்மா நியாயம் பேசாம இப்போ என் பொண்ணோட வாழ்க்கைக்கு நல்ல பதிலா சொல்லுங்க..” என்று பேச,

“அய்யோ அண்ணி கொஞ்சம் சும்மா இருங்க..” என்று அவரை அடக்கிய கதிர்,

“இங்கப்பாரு அமுதா.. நடந்ததெல்லாம் விடு, இதுக்காக தான் அருளை கல்யாணம் செய்ய சொல்றாங்க அப்படிங்கிறதை மறந்திடு.. சாதாரணமா அருள்க்கு மாப்பிள்ளையா உன்னை பார்க்கிறாங்கன்னு நினைச்சு யோசியேன்.. அப்போ அருளை கல்யாணம் செஞ்சுக்க சொன்னா நீ செய்ய மாட்டீயா?” என்று அவனிடம் கேட்க,

“அப்பவும் முடியாது அங்கிள்..” என்று அமுதன் திட்டவட்டமாக கூற, அருள் அதிர்ச்சியாக அவனை பார்த்தாள்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.