(Reading time: 13 - 26 minutes)

தொடர்கதை - நெஞ்சோடு கலந்திடு உறவாலே!! - 50 - சித்ரா. வெ

Nenchodu kalanthidu uravale

ருள்மொழி கொஞ்சம் சங்கடத்தோடு தன் அன்னை முன் நின்றிருந்தாள். ஆனந்தி பெண் கேட்டதும் புகழேந்தி என்ன பதில் சொல்ல என்று தயங்க, அதற்குள் மனதில் ஒரு முடிவு எடுத்துக் கொண்ட கலையரசி,

“அண்ணா எனக்கு கொஞ்சம் அருள்க்கிட்ட தனியா பேச வேண்டியிருக்கு.. அப்புறம் ஒரு முடிவு செய்வோம்..” என்று சொல்ல,

“கண்டிப்பா எல்லாம் கலந்து பேசி முடிவு சொல்லுங்க.. இதுல எந்த கட்டாயமும் கிடையாது.. ஆனா நல்ல முடிவா சொன்னீங்கன்னா ரொம்ப சந்தோஷப்படுவேன்..” என்று ஆனந்தியும் கூறினார்.

கலை புகழேந்தியின் பதிலுக்கு எதிர்பார்த்திருக்க, அவர் ஒரு சிறு தலையசைவில் சம்மதம் சொன்னதும், அருளை அவர் ஒரு அறைக்கு அழைத்துச் சென்றார்.

கலையரசியிடம் வந்த மாற்றம் அருள்மொழிக்கு சரியாக தெரியாததால், ஆனந்தி அமுதனின் அன்னை என்று தெரிந்தும் அவர்கள் வீட்டிற்கு அவரிடம் சொல்லாமல் சென்றதற்கு அன்னை கோபம் கொல்வாரோ என்று கொஞ்சம் பயந்தப்படியே நின்றவள்,

“சாரிம்மா.. முதலில் அவங்க அமுதன் அம்மான்னு தெரியாம தான் உதவி செஞ்சேன்.. அப்புறம் அவங்க அமுதன் அம்மான்னு தெரிஞ்சாலும் அவங்களோட ஹெல்த்தை மனசுல வச்சு தான் அவங்க கூப்பிட்டதால போனேன்.. இன்னொரு முறை கூப்பிட்டா போகக் கூடாதுன்னு தான் மனசுல நினைச்சிட்டு இருந்தேன்ம்மா..” என்று படபடப்புடன் அவள் நிலையை கலையரசிக்கு விளக்கினாள்.

“உண்மை தான், அன்னைக்கு அந்த தம்பி பேசினப்போ அதை கேட்டு நிறைய கோபம் வந்துச்சு.. ஆனா இன்னைக்கு இவங்க பேசினதுல பதிலுக்கு கோபமா பேச முடியல.. அவங்களோட உடல்நிலையையும் யோசிச்சு பார்க்க வேண்டியதா தான் இருக்கு.. சரி சொல்லு அவங்க இப்போ கேக்கற விஷயத்துல உனக்கு சம்மதமா?” என்று கேட்க அருள் தன் அன்னையை கொஞ்சம் அதிர்ச்சியோடு பார்த்தாள்.

அவள் பதில் சொல்வதற்குள் திரும்ப அவரே பேசினார். “நேத்து தான் உன்னோட கல்யாணத்துல திரும்ப அவசரப்படக் கூடாதுன்னு முடிவு செஞ்சு வச்சிருந்தேன்.. ஆனா இன்னைக்கு அந்தம்மா வந்து பொண்ணு கேக்கறாங்க.. அவங்க உடல்நிலையை மனசுல வச்சு ஒரேடியா வேண்டாம்னு மறுக்க முடியல.. ஆனா அதேசமயம் அந்த தம்பி பேசினது செஞ்சதெல்லாம் மனசுல வச்சு வேண்டாம்னு சொல்லிடலாம்னு தோனுது..

Pencilஹாய் பிரெண்ட், அத்தியாயத்தை படித்து விட்டு, உங்கள் கருத்தை பகிர மறக்காதீர்கள். உங்கள் ஒவ்வொரு கமன்ட்டும் எழுத்தாளருக்கு மிக பெரிய டானிக். உங்கள் கமண்ட்டை பகிர இதை க்ளிக் செய்யுங்கள் down

ஆனா ஒன்னு சொல்றேன் அருள், உன்னோட கல்யாண விஷயத்தை கொஞ்சம் ஆற போட நினைச்சாலும், அப்போதும் உங்க அத்தையால ஏதும் பிரச்சனை வரும்னு பயமாகவே இருக்கு.. அதுவே இந்த பையனே உன்னை கல்யாணம் செஞ்சுக்கிட்டா அப்படி ஒரு பிரச்சனையும் இருக்காதுல்ல..

ஆனந்தி பார்க்கவும் பழகவும் நல்லவங்களா தெரியறாங்க.. அவங்களுக்கு உன்னை பிடிச்சிருக்கு.. உனக்கும் அவங்களை பிடிச்சிருக்கு.. அவங்க பையனும் சம்மதம் சொல்லிட்டதா தான் சொல்றாங்க.. அவங்க சொல்றது போல வெளிநாட்டுல வளர்ந்த பிள்ளைக்கு இங்க இருக்க கட்டுப்பாடு கலாச்சாரம்ல்லாம் என்ன தெரியும் சொல்லு.. வேணும்னே உன்னை கூட்டிட்டு போயிருந்தாலும் கண்டிப்பா தப்பான நினைப்போட உன்னை அந்த தம்பி கூட்டிட்டு போயிருக்காது.. பொறுமையா யோசிச்சு பார்த்தா இப்படி மனசுக்குள்ள நிறைய விஷயம் வந்து போகுது.. ஆனா என்னோட அவசர புத்தியால நான் தான் எல்லாத்தையும் கெடுத்துக்கிட்டேன்..

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

ஸ்ரீயின் "சிவகங்காவதி..." - காதல் கலந்த சரித்திரக் தொடர்கதை...

படிக்கத் தவறாதீர்கள்..

இதுக்காக மட்டும் இந்த கல்யாணம் நடக்கட்டும்னு நான் சொல்ல வரல..  மகிக்காகவும் தான் சொல்றேன்.. உன்னோட கல்யாணம் நடந்தா தான் மகியை உங்க மாமா வீட்ல சேர்ப்பேன்னு சொல்லிட்டாரு.. மகியும் உனக்கு நல்லப்படியா கல்யாணம் நடந்தா அவனோட வாழ்க்கையை ஆரம்பிப்பேன்னு சொல்லியிருக்கான்.. இப்படியே காலம் ஓடிப் போயிடப் போறதில்ல.. நாளைக்கே மாமா மனசு மாறலாம்.. இல்ல மகி மனசு மாறி அவனோட வாழ்க்கையை ஆரம்பிக்கலாம்..

ஆனா எந்த ஒரு மாற்றமும் வராம வாழ்க்கை இப்படியே போச்சுன்னா இன்னைக்கு நம்ம மேல உள்ள அக்கறைல இப்படி ஒரு முடிவு எடுத்தவங்க, உன்னோட கல்யாணம் தள்ளிப் போயிக்கிட்டே இருந்தா, அப்புறம் பொறுமை பறந்து போயி எப்போ உன்னோட கல்யாணம் நடக்கும்னு காத்திருக்க ஆரம்பிச்சிடுவாங்க.. இப்படித்தான்  நடக்கும்னு நான் சொல்ல வரல.. ஆனா காலம் மனுஷங்களை எப்படி வேணாலும் மாத்தும்..

உங்க மாமா, அத்தை ரொம்ப தங்கமானவங்க தான், ஆனா அவங்க பிள்ளையா இல்லை நீயான்னு வர்றப்போ யாருக்கு முக்கியத்துவம் கொடுப்பாங்க.. இப்போ உனக்காக தான் பார்க்கிறாங்க.. ஆனா பிள்ளை பாசம்னு ஒன்னு இருக்குல்ல.. அதை மனசுக்குள்ள மறைச்சு தானே வச்சிருப்பாங்க.. நாம மகியை வீட்டுக்கு கூட்டிக்கிட்டு வர தான் சொல்றோம், ஆனா உன்னை நினைச்சு தயங்குறாங்க.. அவங்களை நாம மேல தவிக்க விடலாமா? உன்னோட அத்தையோ மாமாவோ சொல்லலைன்னாலும் நாம அப்படி நினைக்க கூடாதுன்னாலும் நாம இந்த வீட்ல அடைக்கலம் தேடி வந்தவங்க என்பது தான் உண்மை அருள்.. அதை நாம் எப்போதும் மனசுல வச்சு தான் நடந்துக்கணும்.. நம்மால இந்த குடும்பத்துல பிரிவு வந்ததா இருக்கக் கூடாது..

எனக்கு தான் அறிவுக் கெட்டு போய் அன்னைக்கு மாமா மகியை வெளிய அனுப்பும்போது கல்லு போல் உட்கார்ந்திருட்டேன்.. ஆனா இப்போ அதை சரி செய்யும் கடமை நமக்கிருக்கு ம்மா.. அது உன்னோட கல்யாணம் நடப்பதில் தான் இருக்கு.. இது தான் என்னோட மனசுக்கு சரின்னு தோனுது..  ஆனா உன்னை இதுக்கு நான் கட்டாயப்படுத்த மாட்டேன்.. உன்னோட மனசுல என்னை நினைக்கிறியோ அதை நீ சொல்லலாம்.. நல்லா யோசிச்சு சொல்லு, இப்போ உடனே பதில் சொல்ல முடியலன்னாலும் 2, 3 நாள் அவகாசம் எடுத்துக்கோ, சரியா? இப்போ நான் வெளிய போறேன்.. நீ என்ன சொல்லப் போறேன்னு கொஞ்சம் நிதானாமா யோசிச்சு அப்புறம் வந்து சொல்லு..” என்றவர்,

வெளியே வந்து, “என்ன இருந்தாலும் அருள் தான் இதுக்கு முடிவு சொல்லணும்.. அவளோட விருப்பம் எதுவோ அதை நீங்க மனசார ஏத்துக்கணும்..” என்று ஆனந்தியிடம் கூறினார்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.