(Reading time: 12 - 24 minutes)

“என்ன அழகிருந்து என்ன ?!அவளின் விதி இங்கு வந்து நம் சிறையில் அல்லல் படவேண்டும் என்றல்லவா தீர்மானிக்கப் பட்டிருக்கிறது.”

“நீ சொல்வதும் சரிதான்.நம் மன்னர் பொதுவாய் பெண்களை பெரிதும் மதிப்பவர் ஆயிற்றே.அவரே இத்துனை இரக்கமில்லாமல் நடந்து கொள்கிறார் என்றால் அவளின் விதியைத் தான் நொந்து கொள்ள வேண்டும்.”

“போதும் போதும் உங்களின் பச்சாதாபம்.அவளுக்கு வேண்டியவற்றை கவனிக்கத் தான் உங்களை அழைத்ததே இப்படி வம்பு வளர்த்து பொழுதைப் போக்குவதற்க்கு அல்ல புரிந்ததா?”

“மன்னித்து விடுங்கள் பாட்டி.நாங்கள் இவளை கவனித்துக் கொள்கிறோம்.தாங்கள் சென்று உறங்குங்கள்.தேவைப்படும் நேரம் உங்களை எழுப்புகிறோம்.”

அதன்பின் வெகுநேரமாகியும் உடல்நிலையில் எந்த மாற்றமும் இல்லாமல் இருக்க சமீராவை எழுப்பி தேவையான மருந்தைக் கொடுக்கச் செய்தனர்.பொழுது விடியும் நேரம் உஷ்ணம் சற்றே மட்டுப் பட்டிருக்க நினைவு திரும்பியவளாய் சற்றே கண் விழித்தாள்.சமீரா அவளருகில் வந்து தலையை வருடியவாறே,

“இனி ஆபத்து ஒன்றுமில்லை. எதைப் பற்றியும் சிந்தியாது உறங்கு மகளே.மனதிற்கும் உடலுக்கும் இப்போது அதீத ஓய்வு தேவை புரிந்ததா?எதையும் நினைக்காமல் ஓய்வு கொள்.”

என்று கூற மருந்தின் வீரியத்தால் அவளின் கண்கள் அதுவாய் நித்திரையைத் தழுவ விழியோரமாய் கண்ணீர் கசிந்தது. காலைநேரத் தொழுகையை முடித்தவனாய் நஸீம் பாட்டியின் அறையிலிருக்கும் அவளைக் காண வந்தான்.

“இப்போது பயப்படுவதற்கு ஒன்றுமில்லை நஸீம்.நினைவு திரும்பி விட்டது.உடலின் உஷ்ணமும் குறைந்திருக்கிறது.கவலைக்கிடத்தை தாண்டிவிட்டாள்.”

“நல்லது..அல்லாஹ்விற்கு நன்றிகள்.இப்போது தான் மனம் நிம்மதியடைந்திருக்கிறது.அவள் நம் கைதிதான் எனினும் அவளுக்காக நான் அளித்த தண்டனைகள் சற்று அதிகமே.அதுமட்டுமல்லாமல் உயிர் பிரியும் அளவிற்கு அவள் எந்த தவறும் செய்யவில்லை.ஒரு வேளை அவளுக்கு ஏதேனும் நேர்ந்திருந்தால் அல்லாஹ் எனை மன்னித்திருக்கவே மாட்டார் நிச்சயமாய்.”

“உன் நல்ல மனதுக்கு அப்படி எதுவும் நேராது நஸீம்.இன்று ஒரு நாள் இவள் என் பார்வையிலேயே இருக்கட்டும் உனக்கொன்றும் ஆட்சேபனை இல்லையே?”

“இல்லை பாட்டி தங்களின் அறிவுரைப் படியே நடக்கட்டும்.அரசவைக்கு நேரமாகிறது நான் வருகிறேன்”,என்றவன் ஒருமுறை சிவகங்காவதியின் புறம் திரும்பிப் பார்த்துவிட்டு ஆழ்மூச்செடுத்து நகர்ந்தான்.

மாலை நேரத்திற்குப் பின் சற்றே புத்துணர்வடைந்தவளாய் எழுந்து அமர்ந்தவள் அப்போது தான் தான் இருக்கும் இடத்தை நன்றாக கவனித்தாள்.முகலாயர்களின் அழகிய கட்டமைப்பே முதலில் அவள் கருத்தில் பதிந்தது

சுற்றும் முற்றும் பார்த்தவள் யாரை அழைப்பதெனத் தெரியாமல் விழித்திருக்க பணிப்பெண் ஒருத்தி அந்நேரம் அங்கு வந்தாள்.

“எழுந்து வீட்டீர்களா?இப்போது எப்படி இருக்கிறீர்கள்?”

“இப்போது சற்று தெம்பாக உணர்கிறேன்.இருந்தும் ஒருவித சோர்வு இருப்பதைப் போன்றே தோன்றுகிறது”

“ம்ம் நிச்சயம் அப்படி தான் இருக்கும்.நேற்று தாங்கள் இருந்தநிலை கிட்டதட்ட வாழ்வா சாவா போராட்டம் தான்.அதையும் தாண்டி அந்த எமனிடமே வெற்றிப் பெற்று வந்திருக்கிறீர்கள்.”

“ஆனாலும் நான் எப்படி இங்கு?”

“பாட்டி அவர்கள் தான் உங்களுக்கு வைத்தியம் பார்ப்பதற்கு ஏதுவாய் உசூரின் அனுமதிப் பெற்று  உங்களை இங்கு அழைத்து வந்தார்கள்.”

“ஓ!!”

“உங்களின் பார்வைக்கான அர்த்தம் புரிகிறது.ஷேகின் ஷா மற்ற அரசர் போல் அல்ல.மிகவும் நல்லவர்.”

“ம்ம் தெரியும்.”

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

பத்மினியின் "உன்னை விட மாட்டேன் என்னுயிரே..." - காதல் கலந்த தொடர்கதை...

படிக்கத் தவறாதீர்கள்..

“என்ன தெரியுமா!!!??? எப்படி உங்களைப் பொறுத்தவரை அவர் நிச்சயம் கெட்டவர் தானே?”

“இருக்கலாம்.நல்லதும் கெட்டதும் அவரவர் கண் வழியே ஆனால் ஒருவரின் இயல்பு என்பது இது இரண்டிலுமே அடங்கிவிடாது.அதை வைத்து தான் கூறுகிறேன் உங்கள் அரசர் நல்லவர் என்று”

அவளுக்கு பதிலேதும் கூறத் தோன்றாமல் அதிசயித்து நின்றாள் அந்தப் பெண்.அதன் பின் சமீராவிடம் தன் மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்தவள் மீண்டும் சிறைக்கே திரும்பி விடுவதாய் கூறினாள்.

அவரோ, தான் நஸீமிடம் பேசிவிட்டதாகவும் இன்று ஒருநாள் முழு ஓய்வு தேவை என்றும் அவளை சமாதானப்படுத்தி ஓய்வெடுக்க வைத்தார்.சமீரா சென்று படுத்த சிறிது நேரத்தில் தூங்கியும் போனார். ஆனால் சிவகங்காவதிக்கோ பகல் வேளையில் நன்றாக உறங்கியிருந்ததால் இப்போது உறக்கம் வர மறுத்தது.

நேரம் நடுநிசியை கடந்திருந்த வேளை அங்கிருந்த அமைதிக்குச் சற்றும் பொருந்தமல் ஒருவித சத்தம் அவளின் செவியை தழுவியது.சட்டென பார்வையைக் கூர்மையாக்கியவள் அக்கம் பக்கத்தில் நோட்டமிட்டபடி படுக்கையை விட்டு சற்று தடுமாற்றத்தோடு எழுந்து நின்றாள்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.