தொடர்கதை - நெஞ்சோடு கலந்திடு உறவாலே!! - 53 - சித்ரா. வெ
மாலை முடிந்து இருள் சூழ ஆரம்பித்த நேரம் குடும்பமாக அந்த ஹோட்டல் வாசலில் வாடகை காரில் இருந்து இறங்கினர். காலையில் அன்னை கொடுத்த பட்டுப்புடவையில், ஒற்றைப் பின்னலில் மல்லிகையை சூடிக் கொண்டு அலங்காரத்தோடு வந்திருந்த அருள், “இப்போ யாரோட பங்க்ஷன்க்கு வந்திருக்கோம் மச்சி..” என்று இலக்கியாவிடம் கேட்டாள்.
“தெரியலையே..” என்று இலக்கியா அதற்கு பதில் கூறினாள்.
தெரிந்தவர்கள் வீட்டு விசேஷம் அதற்கு போக வேண்டும் என்றவர்கள் அனைவருமே விசேஷத்திற்கு தயாராகியிருந்தனர். மகியும் அறிவும் நேராக ரெஸ்ட்டாரண்டில் இருந்து வருகிறார்கள் என்று வேறு சொல்லியிருந்தனர்.
மிகவுமே நெருங்கிய சொந்தம் என்றால் தான் அனைவருமே செல்வார்கள். அப்படி நெருங்கிய சொந்தத்தின் விசேஷம் என்றால் இவளுக்கும் தெரிய வாய்ப்பில்லாமல் போகாது. அப்படியென்றால் யார் வீட்டில் என்ன விசேஷம் என்று புரியாமல் குழப்பத்துடன் வந்தாள்.
அதுவும் பார்ட்டி ஒரு ஹோட்டலில், திறந்தவெளி பகுதியில் என்று இங்கு வந்து பார்த்து தான் புரிந்துக் கொண்டாள். அவர்களின் உறவினர்கள் ஒன்று மண்டபத்தில், இல்லை வீட்டில், இல்லை ஹோட்டல் என்றால் கூட பார்ட்டி ஹாலில் தானே விசேஷத்தை வைப்பார்கள். அதனால் அவளது குழப்பம் இன்னுமே அதிகமாக தான் ஆனது.
அதே கேள்வியை அவள் அன்னை, மாமா, அத்தை, பாட்டி என்று அனைவரிடமும் கேட்டுப் பார்த்தும், இன்னும் கொஞ்ச நேரத்தில் தெரிஞ்சிட போகுது, எதுக்கு அவசரம் என்ற பதில் தான் கிடைத்தது.
ஹாய் பிரெண்ட், அத்தியாயத்தை படித்து விட்டு, உங்கள் கருத்தை பகிர மறக்காதீர்கள். உங்கள் ஒவ்வொரு கமன்ட்டும் எழுத்தாளருக்கு மிக பெரிய டானிக். உங்கள் கமண்ட்டை பகிர இதை க்ளிக் செய்யுங்கள்
அவளே காலையிலிருந்து எரிச்சலில் இருந்தவளுக்கு, எங்கும் வெளியில் கிளம்பி வரவே பிடிக்கவில்லை, ஆனாலும் அனைவரும் சொன்னார்களே என்று வந்தால், இப்படி பேசுகிறார்களே என்று உள்ளுக்குள் கோபம் கொண்டாள்.
இன்று அவளின் பிறந்தநாள், எப்போதும் அதற்கு பெரிதாக அலட்டிக் கொள்வதில்லை, எப்போதும் போல வீட்டில் இனிப்பு செய்வது, வீட்டில் உள்ள அனைவரும் வாழ்த்துவது, இது விடுமுறை காலம் என்பதால் அனேக பிறந்தநாள் இலக்கியா இங்கிருப்பதால் அவளுடனும் வீட்டில் உள்ள பெண்களுடனும் கோவில் செல்வது என்று அனைத்துமே இந்த வருடமும் எந்த குறைவில்லாமல் இனிதே நடந்தேறியது.
ஆனாலும் மனதில் ஒரு குறை, “உன்னை ரொம்ப மிஸ் பண்ணுவேன் ஹனி.. ஸ்வீட் ட்ரீம்ஸ் என்று சொல்லிவிட்டு கையில் முத்தமெல்லாம் கொடுத்துவிட்டுச் சென்றவன், அதன்பின் அவளிடம் எதுவும் பேசவுமில்லை, காலையிலிருந்து வாழ்த்தும் கூறவில்லை,
சரி அவனுக்கு இன்று அவளது பிறந்தநாள் என்று தெரியாது போல என்று நினைக்கவும் முடியாமல், காலையிலேயே ஆனந்தியும் அலைபேசியில் அவரது வாழ்த்துக்களை தெரிவித்திருந்தார். அப்படியிருக்க இன்னுமா அவனுக்கு தெரியாமல் இருக்கும் என்று நினைத்தவளுக்கு கோபம் தான் வந்தது.
அன்று ஏதோ குழப்பத்தில் கொஞ்சம் கடுமையாக பேசிவிட்டால் தான், ஆனால் அதன்பின் இதுவரையிலும் பேசாதவன், வாழ்த்தும் தெரிவிக்காததது மனதிற்கு சுணக்கமாகவே இருந்தது. அவனிடம் கடுமையாக பேசிவிட்டு, அவன் வாழ்த்து சொல்ல வேண்டும் என்று நினைக்கிறாள். இதுவரையில் அவள் என்ன எதிர்பார்க்கிறாள் என்பது அவளுக்கே புரியாத நிலை தான்,
விழா நடைபெறும் இடத்திற்கு வந்தால், அவர்களுக்கு முன்பே கதிர், எழில், தமிழ், ஆனந்தி, மலர் மற்றும் மணி அவர்களின் கணவன்மார்கள் என்று அனைவருமே வந்திருந்தனர்.
தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -
ஸ்ரீயின் "சிவகங்காவதி..." - காதல் கலந்த சரித்திரக் தொடர்கதை...
படிக்கத் தவறாதீர்கள்..
அவர்களையெல்லாம் வியப்பாக பார்த்தப்படி அவர்கள் அருகில் இவள் குடும்பத்துடன் செல்லவும், “என்ன இவ்வளவு லேட்டாவா வருவீங்க..” என்று ஆளாளுக்கு கேட்டவர்கள்,
“ஹே பர்த்டே பேபி.. ஹாப்பி பர்த்டே என்று காலையில் அலைபேசியில் வாழ்த்து சொன்னது இல்லாமல் இப்போதும் கூறினார்கள்.
அனைவரையும் இந்த பிறந்தநாளில் நேரில் பார்த்ததில் அருள் மிகவுமே மகிழ்ச்சியாக இருந்தாள். விசேஷம் என்று சொன்னார்கள் ஆனால் இவர்கள் குடும்பத்தாரை தவிர அங்கு யாருமே இல்லை, ஆனால் அந்த இடத்தில் பலூன், மின்கம்பங்கள் போல் வரிசையாக நிற்க வைத்து சர விளக்குகளால் இணைக்கப்பட்டு என்று அங்கிருந்த அலங்காரங்களை பார்ப்பதற்கு பிறந்தநாள் விழா போல் தெரியவும், ஏதோ அவளுக்கு புரிந்தது போல் இருந்த சமயம் அந்த இடமே இருளில் மூழ்கியது.
“என்ன இருட்டாகிவிட்டது..” என்று நினைத்த நேரம் அங்கு நட்டு வைக்கப்படிருந்த கம்பங்களில் ஹாப்பி பர்த்டே ஸ்வீட் ஹார்ட், ஹாப்பி பர்த்டே ஹனி, ஹாப்பி பர்த்டே மை லவ், ஹாப்பி பர்த்டே மை ப்யூட்டி, பிறந்தநாள் வாழ்த்துகள் கண்மணி, பிறந்தநாள் வாழ்த்துகள் சகி என்ற வார்த்தைகள் ஒவ்வொன்றாக மிளிர்ந்தது. அதைப் பார்த்து அருள் உறைந்து போனவளாய் நின்றிருக்க,
திரும்பவும் அந்த இடம் முழுக்க வெளிச்சமாக, க்ரீம் வண்ண சட்டைப் பேண்டும் கருப்பு வணண கோர்ட்டும் அணிந்து கையில் கேக்குடன் அமுதன் வந்துக் கொண்டிருந்தான். அவனை அப்படியே அவள் பார்த்தப்படி நின்றிருக்க, அவள் அருகில் வந்தவன், “பிறந்தநாள் வாழ்த்துகள் மொழி..” என்று அவளைப் பார்த்து சொல்லவும், அனைவரின் கைத்தட்டல் ஓசையில் அவள் இந்த நினைவுலகத்திற்கு வந்தாள்.