(Reading time: 10 - 19 minutes)

இன்டர்நெட் , கூகிள் இரண்டும் இன்றைக்குக் கையில் வைத்து எதை வேண்டுமானாலும் கேட்டுப் பெறலாம் என்ற நிலையில் இருக்கும் போது நாம் செய்வது , செய்து கொண்டு இருப்பது எதுவும் வியப்பு இல்லை.

முறையான போக்கு வரத்து வசதி கூட இல்லாத அந்தக் காலத்தில்  இத்தனைப் பெரிய கோட்டைகள் அதிலும் இத்தனை நுணக்கங்களுடன் உருவாக்கி இருந்தார்கள் என்றால் அவர்களின் அறிவை நாம் சாதரணமாக எடை போட முடியுமா? எத்தனை அழகான தகவல் பரிமாற்றங்கள் இருந்து இருக்கின்றன. ஒவ்வொரு கல்லிலும் சிறு சிறு நுணுக்கங்கள். இப்படி இருக்க வேண்டும் என்ற சிந்தனை உடையவர்கள் இருந்தார்கள் என்றால், அதை உள்வாங்கி இத்தனை அழகாக வடிவமைத்தவரும் சாதரணமானவராக இருந்து இருப்பாரா என்ன?

இப்படி யோசனையோடு மாணவர்கள் அந்த அரண்மனையைச் சுற்றிப் பார்த்தனர். பிறகு லஞ்ச் சென்றனர்.

மீண்டும் வேறு சில கோட்டைகள் , ஹவேலிக்கள் எல்லாம் பார்த்து விட்டு, நான்கு மணி அளவில் கரணி மாதா கோவிலுக்குச் சென்றனர்.

அங்கே இறங்கியவுடன் மாணவர்கள் அனைவரும் அந்தக் கோவில் போர்டு பார்த்து அலறி மீண்டும் வண்டியில் ஏறினர்.

எல்லோரையும் பார்த்து சிரித்த ப்ரித்வி,

“என்ன ஆச்சு? “ என்றுக் கேட்டான்.

“பாஸ். எங்க மேலே என்ன கோபம் இருந்தாலும் பேசித் தீர்த்துக்கோங்க. இல்லியா] ரெண்டு அடி கூட அடிச்சுக்கோங்க. அதுக்காக இப்படி எலிக் கோவிலுக்கு எல்லாமா கூட்டிட்டு வருவீங்க?” என்று ஒருவன் கேட்க, மற்றவர்கள் அதை ஆமோதித்தனர்.

“ஹ.. ஹ. கய்ஸ் நீங்க நினைக்கிற மாதிரி இது எலிக் கோவில் எல்லாம் இல்லை. இது துர்கா தேவிக் கோவில் தான். அவருக்குப் பெயர் கரணி மாதா. அவரின் மகன் கபில சரவோர் என்னும் இடத்தில் தண்ணீர் அருந்தும்போது தவறி விழுந்து, இறந்து விட்டார். கரணி தேவி யமனிடம் தன் மகனின் உயிரைத் தருமாறு கெஞ்சிக் கேட்க, முதலில் மறுத்த யமன், பின் அவரின் தவறி விழுந்த மகன் மட்டுமல்லாது அவரின் மற்ற மகன்களுக்கும் உயிர் கொடுத்து அவர்களை எலிகளாக மாற்றினார். தன் அன்னையைச் சுற்றி அந்த எலிகள் இருப்பதால் இது எலிக் கோவில் என்கிறார்கள்” என்று கூறவும்,

“பாஸ் , இது எல்லாம் நம்பற மாதிரியா இருக்கு?” என்றனர்.

“அவர்கள் சொல்கின்ற வரலாறு பற்றி நமக்குத் தெரியாது. ஆனால் இங்கே கிட்டத்தட்ட இருபத்தைந்தாயிரம் எலிகள் இருப்பதாகச் சொல்கிறார்கள். அதிலும் குறிப்பாக வெள்ளெலிகள் இருப்பதால் அதைப் பற்றி ஆராயிச்சி எல்லாம் செய்து கொண்டு இருக்கிறாகள். நாமும் அதைப் பார்த்து விட்டு வரலாம்”

“பாஸ் எலி கடிக்காதா?” என்று ஒரு மாணவன் வினவ, இன்னொருவனோ

“எலி கடிச்சா எத்தனை ஊசி போடுவாங்க?” என்று கேட்டான்.

அவனுக்குப் பதிலாக “எப்படியும் ஒரு பத்து ஊசியாவது போடுவாங்க அந்த எலிக்கு” என்று இன்னொருவன் பதில் கொடுக்க, மாணவர்கள் சிரிக்க ஆரம்பித்தனர்.

ப்ரித்வியும் சிரித்தபடி “பிரெண்ட்ஸ், அந்த எலி எல்லாம் நம்மள ஒன்னும் பண்ணாது. அங்கே டிவோட்டீஸ் கொடுக்கிற ஸ்வீட்ஸ், பழம், பால் எல்லாம் சாப்பிட்டு ஓரமா போயிடும்” என்று கூறினான்.

ஓரளவிற்கு பயம் தெளிந்தாலும், ஒருவரை ஒருவர் பிடித்தபடி தான் கோவிலுக்குள் சென்றனர் மாணவர்கள். அங்கேயும் சுற்றிப் பார்த்து விட்டு, அப்படியே வெளியேறி விட்டனர். ஒரு சில வீரர்கள் மட்டும் இனிப்புகள் வாங்கி எலி இருக்குமிடத்தில் போட, அவைகள் அதைச் சாப்பிட வேகமாக ஓடி வருவதைப் பார்த்து இவர்கள் வேகமாக ஓடி ஒளிந்தார்கள். இதைப் பார்த்து மற்றவர்கள் சிரித்தனர்.

இதை எல்லாம் வேடிக்கைப் பார்த்த ப்ரித்வி, நம் கரப்பான் பூச்சி வீராங்கனை என்ன செய்கிறாள் என்று பார்க்க, வீராங்கனையோ அந்த துர்கா தேவியையே இமைக்காமல் பார்த்துக் கொண்டு இருந்தாள்.

அவள் இமை திறந்து இருந்தாலும், கண்களில் காணும் காட்சி ஆனது

“தாயே பவானி. இந்தப் போரில் ராஜபுத்திரர்கள் வெற்றி பெற வேண்டும். என் நாயகன் மஹாரானாவிற்குப் பக்க பலமாக இருந்து வீர சாகசங்கள் புரிய வேண்டும். போரில் வெற்றி பெற்ற பின் வரும் தசரா நாளில் உனக்கு சிறப்பு ஆராதனை செய்கிறேன் தாயே. “  என்ற வேண்டுதலும்,

“என் வாழ்வு நிர்மூலமாகி விட்டதே தாயே. ராணாவின் கனவான சித்தூர் ராஜ்ஜியம் பெற்ற பின்பே நானும் என் கணவரும் எங்கள் வாழ்க்கையைத் தொடங்கலாம் என்று திட்டமிட்டோமே. இன்று அனைத்தும் பொய்யாகிப் போனதே. மீண்டும் ஒரு ஜென்மம் இருந்தால் எங்கள் இருவருக்கான வாழ்க்கை நல்ல படியாக அமைய அருள் புரி தாயே.” என்றபடி , தேவியின் சன்னதி முன் மூட்டப் பட்டு இருந்த நெருப்பில் ஒரு பெண் இறங்குவதும் கிருத்திகாவின் கண்ணில் ஓடியது.

அதைக் கண்ணில் காணும்போது அவளின் கண்கள் கண்ணீர் வடிக்க, உள்ளமோ மிகவும் பாரமாக இருந்தது. இது எதுவுமே கிருத்திகா அறியவில்லை.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.