(Reading time: 21 - 41 minutes)

தொடர்கதை - மையலில் மனம் சாய்ந்த வேளை.. - 23 - சித்ரா. வெ

Maiyalil manam saaintha velai 

ன்று நிச்சயத்தார்த்தம் நடைபெறும் நாள். வசந்தனின் மேற்பார்வையில் அதற்கான ஏற்பாடுகள் நடந்துக் கொண்டிருந்தது. வீரராகவன் கல்யாணத்தை விமர்சையாக நடத்துவதாக கூறியிருந்ததால், நிச்சயத்தார்த்தம் மாப்பிள்ளை வீட்டில் என்பதால் தானே முன்னின்று வசந்தன் அதை கவனித்துக் கொண்டிருந்தார்.

மகன் யாதவியை நேருக்கு நேர் கண்டுவிட்ட நிலையில், எத்தனை விரைவில் சுஜனாவுடன் திருமணத்தை முடிக்கிறோமோ அது நல்லது என்ற தவிப்பு அவருக்கு இருந்தது. நிச்சயதார்த்தம் முடிந்துவிட்டால் கூட போதும் மகன் அதன்பின் யாதவியை திருமணம் செய்ய எந்த நடவடிக்கையும் எடுக்க மாட்டான் என்ற நம்பிக்கையுடன் அவர் இருந்தார். அந்த நாளும் வந்துவிடவே மனதில் எழுந்த உற்சாகத்தோடு அனைவரையும் வேலை வாங்கிக் கொண்டு இருந்தார்.

பன்னீரும் கூட அங்கு தான் இருந்தார். வசந்தன் எத்தனை அளவு உற்சாகமாக இருந்தாரோ, பன்னீர் அந்த அளவுக்கு கடுப்புடன் வசந்தன் சொன்ன வேலைகளை செய்துக் கொண்டிருந்தார்.

அன்று பார்ட்டியில் யாதவியிடம் சாத்விக் நடந்துக் கொண்ட முறையை பார்த்து பன்னீருக்கு புதிதாக ஒரு நம்பிக்கை பிறந்தது. மனைவி, மகள் தான் ஏமாற்றிவிட்டார்கள். சாத்விக்கை வைத்து இனியாவது சொகுசாக வாழலாம் என்று நினைத்திருந்தார். சாத்விக்கும் அதற்கு சில முயற்சிகள் எடுக்க, அவரது நம்பிக்கை அதிகமானது. மகள் அதை புரிந்துக் கொள்ளவில்லையென்றாலும் சாத்விக் விட்டுவிட மாட்டான் என்று நினைத்தார்.

ஆனால் இந்த நிச்சயதார்த்த விழா ஏற்பாட்டை பார்த்தால், அதெல்லாம் நடக்காது போலயே, மூன்று வேளை சாப்பாட்டுக்காகவாவது இப்படி ஓரிடத்தில் வேலை பார்த்து தான் ஆக வேண்டும் போலிருக்கிறதே, என்று நினைத்து வருத்தம் இருந்ததே தவிர, மகள் மீது உண்மையான பாசமோ அக்கறையோ இல்லை.

அப்படி இருந்திருந்தால், சாத்விக்கை மகளுக்கு எப்படி தெரிந்திருக்கும் என்று யோசித்து பார்த்திருப்பார். அன்று சாத்விக்கின் பண்ணை வீட்டிற்கு அவர் தான் யாதவியை அழைத்துச் சென்றார். ஆனால் அவள் சாத்விக்கோடு பேசுவதை கவனித்திருக்கவில்லை,

அடுத்து மகள் வாழ்க்கையில் என்ன நடந்தது என்று எதுவுமே தெரியாது. எல்லாம் அடுத்தவர் வாய்மொழியில் கேட்டு தான் தெரிந்துக் கொண்டார். மகள் ஒருவனோடு ஓடி போய்விட்டாள் என்று பார்ப்பவர்களிடம் சொல்லிக் கொண்டு இருப்பார். ஆனால் அது யாரோடு என்பது கூட தெரியாத நிலையில், இன்று தன் சுகபோக வாழ்விற்காக மகள் சாத்விக்கை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று ஆசைப்பட்டு, அது நடக்கவில்லையென்ற கடுப்பில் இருக்கிறார்.

இந்த இரண்டு தந்தைகளும் ஒவ்வொரு மனநிலையில் இருக்க, அங்கே விபாகரன் சொன்ன செய்தியை கேட்டு வீரராகவன் அதிர்ச்சியில் அமர்ந்திருந்தார்.

நிச்சயதார்த்தம் நடைபெறும் நாளன்று விபாகரன் வீரராகவனிடம் பேசினால் தான் போட்ட திட்டங்கள் நல்லப்படியாக நிறைவேறும் என்பது சாத்விக்கின் எண்ணம், அதன்படி அஜய் விபாகரனை அழைத்து வந்திருந்தான். ஏற்கனவே மதுரிமா, சாத்விக் இருவரும் அங்கு தான் இருந்தார்கள். சுஜனாவும் இருந்தாள்.

“உங்க மகளும் அஜயும் ஒருத்தரையொருத்தர் விரும்புறாங்க.. அவங்க ரெண்டுப்பேருக்கும் கல்யாணம் செஞ்சு வச்சிடுங்க ராகவன் சார்..” என்று விபாகரன் கூற, முதலில் அதிர்ச்சியானாலும், பின் கொஞ்சம் கோபம் எட்டிப் பார்த்து,

“என்ன விளையாட்றீங்களா? இன்னிக்கு நிச்சயதார்த்தம்னு எல்லோருக்கும் சொல்லி, அதுக்கான ஏற்பாடு நடந்துக்கிட்டு இருக்கு.. இப்போ வந்து இப்படி சொல்றீங்க?” என்றுக் கேட்டார்.

“இப்போ சொல்லலைன்னா தப்பா ஆயிடும் சார்.. உங்க மகளுக்கு பிடிச்ச வாழ்க்கையை ஏற்படுத்திக் கொடுக்கிறது தான் நல்லது..”

“என்னோட மகளுக்கு எது நல்லதுன்னு எனக்கு தெரியும்.. அதை நீங்க சொல்ல வேண்டாம் விபாகரன்..”

“நல்லது எதுன்னு தெரியும்னு சொல்றீங்க.. உங்க மகளை யாருக்கு கல்யாணம் செய்ய நினைச்சீங்களோ அந்த மாப்பிள்ளை சாத்விக்கே இந்த விஷயம் பேசும் போது நம்மக் கூட இருக்கறதுலேயே தெரியலையா? அவருக்கும் நான் சொன்ன விஷயத்தில் சம்மதம் என்று..” சொல்லி சாத்விக்கை பார்க்க,

“என்ன சாத்விக் இதெல்லாம்.. கொஞ்ச நேரத்துக்கு முன்ன கூட ஏற்பாடெல்லாம் ஜோரா நடக்குதுன்னு வசந்தன் சொன்னாரு.. ஆனா நீங்க விபாகரன் சொன்ன விஷயத்திற்கு அமைதியா நிக்கறீங்க..” என்றுக் கேட்ட வீரராகவன்,

“அன்னைக்கு பார்ட்டில ஒரு வேலைக்கார பொண்ணுக்காக உருகி நின்னப்பவே சந்தேகம் வந்துச்சு.. ஆனா வசந்தன் தான் ஏதேதோ சொல்லி சமாளிச்சாரு.. இப்போ அந்த பொண்ணுக்காக என்னோட பொண்ணை வேண்டாம்னு சொல்றீங்களா?” என்று கோபமாக சாத்விக்கை பார்த்து கேட்ட போது,

யாதவியை வேலைக்காரப் பெண் என்று சொன்னதில் விபாகரன் கோபமடைந்தான். ஆனாலும் அஜய்க்காக தன் கோபத்தை அடக்கிக் கொண்டவன், இனி யாதவியை வேலைக்காரி என்று சொல்லும் இதுபோன்ற பேச்சுக்களை வளர விடக் கூடாதென்று மனதில் உறுதிக் கொண்டான்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.