(Reading time: 21 - 41 minutes)

“வீரராகவன் சார் எனக்கு ஆரம்பத்தில் இருந்தே இந்த திருமணத்தில் சம்மதிமில்லை.. இதெல்லாம் என்னோட அப்பாவின் முடிவு தான், என்கிட்ட கேட்காமலேயே விஷயத்தை ப்ரஸ்க்கு சொன்னதால நான் அமைதியா இருக்க வேண்டியதா போச்சு..” என்று சாத்விக் பதில் கூறவும், அதை வீரராகவனால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை.

மகளின் மகிழ்ச்சியை விட இந்த நிச்சயதார்த்தம் நிற்பது தனக்கு வந்த கௌரவ குறைச்சலாக நினைத்தார். “உங்க அப்பா வந்து பொண்ணு கேட்பாரு.. நீ வந்து வேண்டாம்னு சொல்லுவியா? இந்த நிச்சயதார்த்தம் இப்போ நின்னு போனா எனக்கு எத்தனை அவமானம் தெரியுமா? இதுக்கு உங்களை நான் சும்மா விட்ருவேன்னு நினைக்கிறீங்களா? நான் நினைச்சா நீ இந்த சினிமா ஃபீல்டில் இருக்கவே முடியாதப்படி செஞ்சுடுவேன்..” என்று மிரட்ட,

அங்கிருந்த மதுரிமா “என்ன இவர் இப்படி பேசுகிறார்..” என்பது போல் பார்த்தாள். தன் மீதும் தவறு இருப்பதால் சாத்விக்கும் அமைதியாகவே நின்றான். தந்தை ஒத்துக் கொள்ள மாட்டாரோ என்று சுஜனா தவிப்பாக பார்க்க, தன்னால் இன்னும் விபாகரனையும் இவர் அவமானப்படுத்திவிடுவாரோ என்பது போல் அஜயும் தவிப்போடு நின்றிருந்தான்.

“இங்கப் பாருங்க ராகவன் சார்.. நீங்க இப்படி மிரட்டி சாத்விக்கோட உங்க பொண்ணுக்கு கல்யாணத்தை நடத்தி வச்சா அது அவங்களுக்கு சந்தோஷத்தை கொடுக்குமா? இந்த நிச்சயதார்த்தம் நிக்கறதை உங்க கௌரவ குறைச்சலா பார்க்காதீங்க.. அதே இடத்தில் உங்க பொண்ணுக்கும் அஜய்க்கும் நிச்சயதார்த்தம் நடத்தப் போறதா எல்லோருக்கும் சொல்லுங்க..

நிச்சயதார்த்தம் நின்னா தான் ஏன் நின்னுச்சுன்னு கேள்வி வரும்.. ஆளாளுக்கு ஒன்னொன்னு பேசுவாங்க.. அதுவே பொண்ணு விருப்பம்னு நீங்க சொன்னீங்கன்னா, உங்க பொண்ணோட ஆசையை நிறைவேத்தின உங்களை எல்லோரும் பெருமையா தான் பேசுவாங்க..

உங்களுக்கு அஜயை நல்லா தெரியும், நம்ம பார்டனர்ஷிப் விஷயமா என்கிட்ட பேசினதை விட, பாலா அஜய்க்கிட்ட தான் நீங்க நிறைய பேசியிருக்கீங்க.. அதுலயே உங்களுக்கு அஜயோட திறமை தெரியும்.. அப்படியும் உங்களுக்கு அஜய் என்கிட்ட வேலை செய்ற ஒரு பர்சனா தெரிஞ்சா, இப்போ சொல்றேன் கேட்டுக்கோங்க.. அஜயும் என்னோட கம்பெனியில் ஒரு போர்ட் ஆஃப் டைரக்டரா ஆக ஏற்பாடு செய்றேன்.. இந்த கம்பெனியோட ஒரு ஷேர் அஜய்க்கும் போவது போல செய்றேன்..” என்று விபாகரன் சொல்ல,

“சார்..” என்று அஜய் ஏதோ சொல்ல வர, வேண்டாம் என்பது போல் அவனை கைகாட்டி நிறுத்தியவன்,

“நீங்க ஒரு திறமையான தொழிலதிபர்.. உங்களுக்கு ஒரே ஒரு பொண்ணு தான், உங்களுக்கு வர மருமகன் ஒரு நடிகனா இருக்கறதை விட, உங்களை போல வியாபரம் செய்வதில் திறமையானவனா இருந்தா அது உங்களுக்கும் நல்லது தானே, ஏன் என்னோட ப்ரண்ட் பாலா, உங்க ப்ரண்டோட மருமகன், அவனையே எடுத்துக்கோங்க.. இப்போ உங்க ப்ரண்ட் முடியாம இருக்கப்போ எல்லாமே பார்த்துக்கிறது அவன் தானே,

உங்களை போல உங்க ப்ரண்ட்டும் தன்னை விட அந்தஸ்துல குறைந்தவன்னு பாலாவை நினைத்திருந்தால் இப்போ எல்லா பொறுப்பையும் மருமகன்கிட்ட கொடுத்திட்டு நிம்மதியா இருப்பாரா? இதெல்லாம் நல்லா யோசிச்சு பாருங்க..” என்று சொல்லி முடித்தான்.

விபாகரன் சொல்வதும் வீரராகவனுக்கு சரியாக தான் பட்டது. உடனே மகள் முகத்தை பார்த்தார். அவர் ஒத்துக் கொள்ள வேண்டுமே என்ற தவிப்பு அவளது முகத்தில் தெரிந்தது.

முதலில் இந்த நிச்சயதார்த்தம் நிற்பதை கௌரவ குறைச்சலாக நினைத்தாலும், மகள் மீது பாசமில்லாதவர் அல்ல, முன்பெல்லாம் துறுதுறுவென இருந்தவள், சில வருடங்களாகவே எதையோ இழந்தது போல் நடமாடிக் கொண்டிருந்ததை கவனித்தவர் தானே, ஒருவேளை அது அஜய்க்காக தானோ?

திருமணம் செய்து வைத்தால் மகள் மீண்டும் பழையப்படி ஆகலாம் என்று நினைத்து தானே அவளது திருமணத்தை உடனே முடித்திட நினைத்தார். ஆனால் அதுவே மீண்டும் மகளுக்கு கெடுதலாக அமைந்து அவள் இன்னும் மோசமானால் என்ன ஆவது என்பதாக யோசித்தவர்,

“சரி இதுக்கு நான் ஒத்துக்கிறேன்.. எனக்கும் என் பொண்ணோட வாழ்க்கையில் அக்கறை இருக்கு.. அவ சந்தோஷம் தான் எனக்கு முக்கியம்.. அவளுக்காக தானே நான் இத்தனை தூரம் கஷ்டப்பட்டு சம்பாதிக்கிறது..” என்றவர்,

மகளை பார்த்து, “உனக்கு சந்தோஷம் தானே ம்மா..” என்றுக் கேட்டார்.

ஓடிவந்து அவரை அணைத்துக் கொண்ட சுஜனா, “ரொம்ப தேங்க்ஸ் ப்பா..” என்றாள். அவள் கண்களில் மகிழ்ச்சியில் கண்ணீர் எட்டிப் பார்த்தது.

“ரொம்ப தேங்க்ஸ் சார்..” என்று அஜயும் அவரை பார்த்து கூறினான்.

“சார் இல்ல மாமான்னு சொல்லு அஜய்..” என்றவர், விபாகரனை பார்த்து,

“என் மகளோட கல்யாணத்தை ரொம்ப சிறப்பா செய்யணும்னு எனக்கு ஆசை.. அதுக்கு நீங்க தடை சொல்லக் கூடாது.. கல்யாண செலவெல்லாம் முழுக்க என்னோடது தான்..” என்று கூறினார்.

அஜய் விபாகரனை தயக்கத்தோடு பார்க்க, “இது அப்பாவா அவரோட ஆசை அஜய்.. அதை நாம மறுக்கக் கூடாது..” என்றவன்,

“உங்க விருப்பப்படியே பண்ணுங்க சார்..” என்று வீரராகவனிடமும் கூறினான்.

“சாரி சாத்விக் கொஞ்சம் கோபமா பேசிட்டேன்..” என்று அவனிடம் மன்னிப்பு கேட்ட வீரராகவன்,

“நிச்சயத்தார்த்தத்துக்கான ஏற்பாட்டையெல்லாம் அங்க வசந்தன் செஞ்சுக்கிட்டு இருக்காரு.. அவர்க்கிட்ட விஷயத்தை சொல்லணுமே..” என்றார்.

“அப்பாக்கிட்ட இப்போ எதுவும் சொல்ல வேண்டாம் சார்.. அங்க போய் நடக்கப் போறதை சொல்லிக்கலாம்.. ஏற்பாடெல்லாம் அங்க நடக்கறது நடக்கட்டும்.. அஜய் என்னோட தம்பி போல தான்.. அதுக்கு நாங்க ஏற்பாடு செஞ்சதா இருக்கக் கூடாதா?” என்று சாத்விக் கூறினான்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.