(Reading time: 21 - 41 minutes)

“அய்யோ அவன் கொஞ்சம் குழப்பத்தில் இருக்கான் வீரராகவன்.. அதை நினைச்சு நீங்க கோபப்படாதீங்க.. நான் அவன்கிட்ட பேசிக்கிறேன்.. நீங்க நடக்கறதை பாருங்க..”

“உங்க பையன் தெளிவா தான் இருக்கான் வசந்தன்.. நீங்க தான் தெளிவில்லாம நடந்துக்கிறீங்க.. நீங்க சொன்னது போல என் பொண்ணோட நிச்சயம் நடக்க தான் போகுது.. ஆனா மாப்பிள்ளை உங்க மகன் இல்லை.. விபாகரனோட ரிலேஷன் அஜய்..”

“வீரராகவன் என்ன பேசறீங்க.. இப்படியெல்லாம் நீங்க செய்ய கூடாது.. நீங்க என்னை நம்ப வச்சு ஏமாத்தறீங்க..”

“நீங்க தான் அப்படி நடந்துக்கிட்டீங்க வசந்தன்.. உங்க பையன் என்னோட பொண்ணை வேண்டாம்னு சொன்னதுக்கு நான் உங்க மேல கொலைவெறியில் இருந்தேன்.. ஆனா ஏதோ விபாகரன் வந்து பேசி புரிய வச்சதால நீங்க தப்பிச்சீங்க..”

“விபாகரனா?”

“ஆமாம் அஜய்க்கு என் பொண்ணு மேல விருப்பம்.. அன்னைக்கு பார்ட்டியில் நடந்ததை பார்த்ததில் இருந்து சுஜனாவுக்கும் சாத்விக்கை கல்யாணம் செய்றதுல இஷ்டமில்ல.. அதனால் அஜயை கல்யாணம் செஞ்சுக்க அவளுக்கும் விருப்பம்.. அதையெல்லாம் எனக்கு புரிய வச்சது விபாகரன் தான், அந்த நேரம் உங்க மகன் சாத்விக்கும் கூட தான் இருந்தான்.. அப்போ இதுலயே உங்களுக்கு புரியலையா?

இப்போக் கூட உங்களுக்கு இவ்வளவு எடுத்து சொல்றது எதுக்குன்னா என் பொண்ணுக்கும் அஜய்க்கும் நிச்சயதார்த்தம் நடக்கறதை அறிவிக்கும் போது நீங்க எதுவும் பிரச்சனை செய்யக் கூடாதுன்னு தான், புரிஞ்சு நடந்துப்பீங்கன்னு நினைக்கிறேன்..” என்றவர், வசந்தன் அடுத்து சொல்ல வந்ததை கூட கேட்காமல் சென்றுவிட்டார்.

வசந்தனுக்கு அவமானமாகிவிட்டது. இதற்கெல்லாம் தன் மகன் காரணம் என்று ஒருப்பக்கம் அவன் மீது கோபம் என்றால், இதில் விபாகரனின் தலையீடு இருப்பதை நினைத்து இன்னும் அதிக கோபத்தில் இருந்தார்.

அதைப்பற்றி சிந்தித்தப்படி அவர் வந்துக் கொண்டிருந்த போது, விபாகரனே அந்த விழாவிற்கு வரவும், கோபமாக அவன் முன்னே நின்று,

“அன்னைக்கு யாதவி விஷயத்தில் நான் நடந்துக்கிட்டதுக்கு என்னை நீ பழி வாங்கப் பார்க்கிறீயா விபாகரன்.. உன்னோட சொந்தக்காரனுக்கு சுஜனாவை கல்யாணம் செஞ்சு வச்சிட்டா.. சாத்விக் யாதவியை கல்யாணம் செஞ்சுப்பான்னு நினைச்சியா? அது நடக்கவே நடக்காது.. நான் அதை நடக்க விட மாட்டேன்..” என்று கோபமாக சொல்ல,

அவரது பேச்சை கேட்டு சில நொடிகள் சிரித்தவன், “அன்னைக்கு நான் கொஞ்சம் தடுமாறினதால தான் யாதவி உங்க பையனை தேடி வந்தா.. அதில் அவளை தொலைச்சிட்டேன்.. இப்போதும் அதே முட்டாள்தனத்தை நான் செய்வேனா? ஒருபோதும் இல்ல..” என்று சொல்லிவிட்டு அவன் சென்றுவிட்டான்.

“இப்போ என்ன சொல்ல வரான்.. யாதவி சாத்விக்கை கல்யாணம் செஞ்சுக்க முடியாதுன்னு சொல்ல வரானா? இவன் பேசினதே புரியலையே..” என்று வசந்தன் குழம்பினார்.

அதே நேரம் சாத்விக்கும் உள்ளே நுழைய, “நீயே உன்னோட தலையில் மண்ணை வாரிப் போட்டுக்க முடிவு செஞ்சுட்டியா சாத்விக்.. என்கிட்ட சொல்லாம நீயா ஏன் வீரராகவனை பார்த்த.. ஏன் உன்னோட நிச்சயதார்த்தத்தை நிறுத்தின..” என்றுக் கேட்க,

“நான் என்னோட மனசுக்கு நியாயமா பட்டதை தான் செஞ்சேன்ப்பா.. இப்போ தான் நிம்மதியா ஃபீல் பண்றேன்..” என்று சாத்விக்கும் தைரியமாக தன் பதிலை கூறினான்.

“நீ எதை மனசுல வச்சு இப்படி செய்றேன்னு எனக்கு தெரியும் சாத்விக்.. நீ நினைக்கிறது ஒருபோதும் நடக்காது..” என்றவர்,

“அதான் காரியத்தை கெடுத்துட்டியே.. இனியும் இங்கிருந்து அவமானப்படணுமா? வா நாம கிளம்புவோம்..” என்றுக் கூறினார்.

“இருங்கப்பா.. அஜய், சுஜனா எங்கேஜ்மெண்ட்டை பார்த்துட்டே போகலாம்.. வீரராகவன் சார் தப்பால்லாம் நினைக்க மாட்டார்.. அதுவுமில்லாம அதுக்குப்பிறகும் நீங்க இங்க இருக்க வேண்டியது அவசியம்.. எப்போதும் நீங்க நினைக்கிறதே நடக்காது.. நீங்க நினைக்காததும் நடக்கும்னு தெரிஞ்சிக்க வேண்டாமா? என்று புதிர் போட்டு பேசிவிட்டு அவரை உள்ளே அழைத்து போக, மகன் என்ன செய்ய காத்திருக்கிறானோ என்ற குழப்பத்தோடு அவர் உடன் சென்றார்.

விஜய், அர்ச்சனா எடுத்துக் கொடுத்த நிச்சயதார்த்த மோதிரத்தை கையில் வைத்துக் கொண்டு விழிகள் முழுதும் காதலை ஏந்தி மணமேடையில் அஜயும் சுஜனாவும் நின்றிருந்தனர். இருவரும் மோதிரம் மாற்றிக் கொள்ளவும், அங்கே கைத்தட்டி ஆரவாரம் எழ, விருந்தினர்கள் பார்வையெல்லாம் அஜய், சுஜனாவிடமே இருக்க, யாதவி மட்டும் சாத்விக்கை பார்த்தப்படி நின்றிருந்தாள்.

வழக்கம் போல இந்த நிகழ்விற்கும் வர வேண்டாம் என்று தான் முடிவெடுத்திருந்தாள். ஆனால் அப்படி வராததை சாத்விக் வேறு மாதிரி புரிந்துக் கொள்ளக் கூடாதே, சாத்விக் சுஜனாவை திருமணம் செய்வதில் இவளுக்கு மகிழ்ச்சி தான் என்பதை அவனுக்கு புரிய வைத்துவிடும் எண்ணத்தில் தான் புவனா கொஞ்சம் வற்புறுத்தி கூப்பிட்டதும் வந்தாள்.

இங்கு நிகழ்ச்சிக்கு வந்தபின்பும் கூட சாத்விக், சுஜனா நிச்சயதார்த்தம் நடக்க போவதாக தான் நினைத்தாள். “ஒரு நல்ல வாய்ப்பை நீயே கெடுத்துக்கிட்டியே..” என்று பன்னீர் வந்து குற்றம் சொன்ன போது கூட அவளுக்கு சிரிப்பு தான் வந்தது.

ஐந்து வருடங்களுக்கு முன்பே அப்படி ஒரு தவறை செய்தவள், இனியும் அப்படி செய்ய என்ன இருக்கிறது? என்று நினைத்தாள். இதில் வசந்தன் வேறு அவளை வெறுப்பாக பார்ப்பதும், ரூபினியின் தாய் ராகிணி கோபமாக பார்ப்பதும், அர்ச்சனா முறைத்ததும், மஞ்சுளா அவள் ஒருவள் இங்கு இருக்காதது போல் நடந்துக் கொண்டதும்,

சாத்விக் அடிக்கடி அவளை ஆர்வமாக பார்ப்பதும், விபாகரன் அவள் பக்கமே திரும்பாததும் இதையெல்லாம் வைத்து அங்கு இருக்கும் சூழ்நிலையை அவள் விரும்பவில்லை, இருந்தும் சாத்விக், சுஜனா நிச்சயம் வரை தானே என்று நினைத்து அமைதியாக இருந்தாள். ஆனால் வீரராகவன் மணமகன் மாறிய விஷயத்தை விளக்கமாக கூறிக் கொண்டிருந்த போது, யாதவி அதிர்ந்து தான் போனாள்.

தன் காதால் கேட்டது உண்மை தானா? என்று அவள் குழம்ப, அவர் பேசி முடித்த அடுத்த நிமிடமே சுஜனாவும் அஜயும் மேடை ஏறியதை பார்த்ததும் தான் நடப்பதை அவளால் புரிந்துக் கொள்ள முடிந்தது. அந்த நிகழ்வை சாத்விக்கும் ரசித்துப் பார்த்தப்படி நின்றதை தான் அவளும் பார்த்துக் கொண்டிருந்தாள்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.