(Reading time: 9 - 17 minutes)

தொடர்கதை - தாரிகை - 33 - மதி நிலா

series1/thaarigai

வருடம் : 2009..

நிஷார்த்திக்காவின் சிரித்திடும் விழிகள் விட்டத்தை வெறித்தபடியும்.. புன்னகையை சுமந்திடும் இதழ்கள் இரத்தம் சுமந்தபடியும் இருக்க.. தாளமுடியவில்லை தாரிகைக்கு..!!

விபத்தென்று செய்திகிடைத்ததும் அடித்துப்பிடித்து மொழியுடன் வந்து சேர்ந்தவளுக்கு நிஷாவைக் கண்டதும் உலகமே அசையாமல் நின்றுவிட்டதுபோல்..!!

இதயத்திற்குள் பிறரின் சொற்களையும் செய்கைகளையும் இட்டுச் செல்லாதவள் கட்டுக்களுடன் சாய்ந்துகிடப்பது அத்தனை காயத்தை ஏற்படுத்தியிருந்தது தாரிகைக்கு..!! தங்கையின் நிலையறிந்து கோபமும் ஆத்திரமும் கூடவே ஒரு துளி கண்ணீரும்..!!

“நி..ஷா..”, குழந்தையின் விரல்களைத் தடவுவதுபோல் தங்கையின் விரல்களைப் பிடித்தபடி தாரிகை அவளை அழைத்திட.. மனிதர்களின் முகம் காணப் பிடிப்பில்லாததாய் அலைப்பாய்ந்தது நிஷாவின் விழிகள்..!!

மரித்தே போனது தாரிகையின் மனது..!! எதிலோ எங்கேயோ தோற்றுவிட்டதுபோல் குற்றவுணர்வு வேறு..!!

“உன்னை முன்னேற்றப் பாதைக்கு இட்டுச்சென்றவளை பாதியில் கைவிட்டுவிட்டாய்..”, மனது குத்திக்கிழிக்க.. அப்படியொரு ஆத்திரம் தன் மீதே..!!

“நான் உன்னை விட்டுட்டுப் போயிருக்கக் கூடாது நிஷா.. என்னை மன்னிச்சிடு..”, மனது சத்தமிட்டத்தை வெளியிட்டால் அவள் தாரிகை அல்லவே..!! தன்னுள்ளேயே புதைத்துக்கொண்டாள் தன்னுணர்வை..!! அன்று மதியம் மொழியிடமிருந்து பரிசாய் பெற்றுக்கொண்ட அறிவுரைகள் எல்லாம் காற்றில் துகல்களாய்..!!

உணர்வுக்குயலில் சிறிது நேரம் மனது போராடத்தான் செய்தது..!!

காலங்கள் கற்றுக்கொடுத்த பாடமோ என்னவோ சட்டென கடுமை எனும் முகைப்பூச்சைத் தானாகவே தாரிகையின் முகம் ஏற்றுக்கொள்ள, “நிஷா..”, என்றழைத்திருந்தாள் மிகவும் அழுத்தமாக.. அதில் நீ என்னைப் பார்க்க வேண்டும் என்ற கட்டளை வலுவாக..!!

அதற்குக் கட்டுப்பட்டார்போல் பட்டென உயர்ந்தன நிஷாவின் விழிகள் சொல்லங்க என்பதாய்..!!

நிஷாவின் அச்செயலில் தானாகவே மனமானது லேசாக கனிந்திட, “எங்க்கூட நீயும் வந்திரு..”, வார்த்தைகளை உதிரவிட்டிருந்தாள் தாரிகை..!! என்னவோ இனி நிஷாவை தனியாக விடக்கூடாதென்று எண்ணம் தோன்றிட.. மனதில் பட்டத்தை ஒருவரிடமும் விவாதிக்காமல் தீர்மானித்திருந்தாள் அவள்..!!

“இவ்வளவு நாள் இல்லாத அக்கறை இப்ப மட்டும் எதுக்காம்..??”, குழந்தையின் மனதில் கோபம்தான்..!! ஆனால் தனது அன்னை(அக்கா)வின் அன்பெனும் புதையலுக்கு முன் அகராதியில் மற்ற அனைத்தும் புறம்தானே..!!

உடலில் பட்ட காயங்களும் மனதில் வேயப்பட்ட இரணங்களும் கரைந்துபோவதாய் பிரம்மை ஏற்பட, “போலாம்க்கா..”, என்றிருந்தாள் நிஷா தாரிகையைப் போலவே யோசிக்காமல்..!!

“இந்த ஒரு வருஷம் பாப்பா இங்கேயே படிக்கட்டும் தாரு.. அதுக்கு அப்புறம் என்ன பண்றதுன்னு முடிவு பண்ணிக்கலாம்..”, அதுவரை இடையிடாமலிருந்த வெற்றி தடையிட..!! வழமையாய் தோன்றிடும் கோபம் தாரிகைக்குள்..!!

“இன்னும் என்ன மாமா முடிவு பண்றது..?? இவ இருக்க நிலமையைப் பார்த்துமா நீங்க இப்படி சொல்றீங்க..?? ஸ்கூல்ல இப்படி நடந்திருச்சு.. ஆக்ஷன் எடுங்கன்னு கேட்டா ஒரு ரெஸ்பான்ஸும் இல்லை.. எப்படி அவங்களை நம்பி இவளை அங்க விட்டுவெக்கறது.. காலாண்டுகூட இன்னும் வரலை மாமா.. இப்போ ஸ்கூல் மாத்துறதுக்கு பெருசா கஷ்டம் இருக்காது.. நான் பார்த்துக்குவேன் இவளை..”, இனி என்னால் இவளைவிட்டு இருக்கவே முடியாது என்பதாய் இருந்தது தாரிகையின் பதில்..!!

“கொஞ்சமாவுது யோசிச்சு பேசு தாரு நீ.. இந்த வருஷத்தோட உனக்கு காலேஜ் முடிய போகுது.. நீ ஐஏஎஸ் கோச்சிங்கு எப்படி இருந்தாலும் வெளிய பொய்தான் ஆகனும்.. இவளையும் உன்னோடவே கூட்டிட்டுப் போக முடியுமா சொல்லு..??”, வெற்றியின் கேள்வியில் திகைத்தவளுக்கு ஒன்றும் புரியவில்லை..!!

நிஷாவை அவளால் இனி பிரிந்தும் இருக்க முடியாது.. அதே சமயம் பிரியாமலும் இருக்க முடியாது..!! அப்படியொரு தாக்கத்தை ஏற்படுத்தி இருந்தது இந்த நிகழ்ச்சி..!!

“தாரிக்கா.. என்னால தனியா என்னைப் பார்த்துக்க முடியும்க்கா.. நீங்க என்னைப் பத்தி கவலைப்பட வேண்டாம்..”, தாரிகையின் முகம் சோர்வை தத்தெடுத்துக்கொள்ள.. அதைத் தாங்கமாட்டாமல் உதட்டில் வரவழைத்தப் புன்னகையுடன் சொல்லியிருந்தாள் நிஷா..

“எப்படி இப்பவரை உன்னை நீயே பார்த்துக்கிட்ட மாதிரியா..?? ஒன்னும் வேண்டாம்..”, பட்பட்டென்று சொன்னவள் வெற்றியிடம், “படிக்கற புள்ள எங்க இருந்தாலும் படிக்கும்னு நீதானே மாமா சொல்லுவ.. நான் படிச்சுப்பேன்..”, தீர்மானமாய் விழுந்தன வார்த்தைகள்..!!

“அ..க்கா..”  

“தாரு..”

வெற்றியும் நிஷாவும் ஒரே நேரத்தில் தங்களின் கருத்துக்களை பதியவைக்க முயல.. இருவரையும் இடையிட்டவள், “இவ என் பொறுப்புன்னு நான் இவங்க அம்மாக்கு வாக்கு கொடுத்திருக்கேன் மாமா..”, நொடிநேர மௌனத்திற்குப் பிறகு, “ஒத்துக்கறேன்.. அதுல இருந்து விலகிட்டேன் நான்.. அதனால இவ காயப்பட்டுட்டா.. தப்புதான்.. எல்லாம் என் தப்புத்தான்.. நான் சரி பண்ணனும்னு நினைக்கறேன்.. தப்பில்லையே..??”, வேண்டாம் என்று சொல்லிவிடாதீர்கள் என்ற மன்றாடல் அப்பட்டமாய்..!!

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.