(Reading time: 9 - 17 minutes)

“நீ கூட்டிட்டுப் போ கண்ணா இவளை.. எங்களைவிட இவளை நல்லா பார்த்துப்ப நீ.. எனக்கு நம்பிக்கை இருக்கு..”, எதிர்பாராத இடத்திலிருந்து கிடைத்த ஆசியில் விழிகள் விரிந்துபோனது தாரிகைக்கு..!!

“அம்மாவா இது..?? அதுவும் என்கூட பேசறாங்களா..?? எப்படி..??”, இதுவரை தன்னிடம் நேரடியாக பேசாதவர் தன்னிடம் பேசியதும் சிலையாகவே மாறிப்போயிருந்தாள் தாரிகை..!!

முழுதாக மூன்றரை வருடங்கள் இருக்குமா இவர் அவளிடம் நேரடியாகப் பேசி..??

அதிலும் அவரது அந்த “கண்ணா”..!! எத்தனை முறை இப்படி அவர் தன்னை அழைக்கமாட்டாரா என்று ஏங்கியிருப்பாள்..??

கடந்தமுறை மதுரை வந்தபொழுது நிஷாவிற்கு அவர் பார்த்துப் பார்த்து அனைத்தும் செய்ய.. ஒருபுறம் மகிழ்ச்சி ஒருபுறம் ஏக்கம் என அலைந்துகொண்டிருந்தாளே இவள் ஒருவித தேடலுடன்..!! அனைத்தும் அவரது வார்த்தைகளில் நிறைவேறிவிட்டதே..!!

துன்பத்திலும் நன்மை என்பார்களே.. இதுதானோ..??

“அ..ம்..மா..”, ஒவ்வொரு எழுத்துக்களையும் பெண்ணவள் அழுத்தமாய் உச்சரிக்க.. வாஞ்சையாய் அவளது தலையை வருடிக்கொடுத்தார் அவர் விரல்களில் நடுக்கத்துடன்..!!

போதும்.. இதுவே போதும்.. யாரிடமிருந்து இந்த அரவணைப்பு கிட்டவேண்டும் என்று எதிர்பார்த்தாளோ அவரிடமிருந்து ஒரு அரவணைப்பு..!! இனி எதையும் எந்த தடையையும் எதிர்கொள்வாள் இவள்..!!

வருடம் : 2017..

திரவனின் வரவைக்கூட உணராது தனது நினைவுகளுடன் மேலும் மேலும்  போராடிக்கொண்டிருந்தாள் தாரிகை..!!

எத்தனை அவமானங்கள்..?? எத்தனை போராட்டாங்கள்..?? எல்லாம் இன்னும் இன்னும் அவளைத் தொடர்ந்துகொண்டிருக்கும் தொடர்கதைதான்..!! ஆனால் அனைத்தையும் எதிர்கொள்ளும் திடம் இப்பொழுது..!! கூடவே சமூகத்தைப் பற்றிய அத்தனை தெளிவு..!!

கால்கள் தானாகவே வீட்டை நோக்கி எட்டிப்போட.. அவளே எதிர்பாரா வகையில் அவளெதிரில் நிதின்..!! சட்டென அவனை அடையாளம் காண இயலவில்லை அவளால்..!! காலம் மாற்றியிருந்தது அவன் உருவத்தை..!!

“இதென்ன இப்படி நடுரோட்டில் நடந்துவந்திட்டு இருக்க..?? ஓரமா போ.. காலங்காத்தால வந்திருச்சுங்க..”, முன்பாதியை சத்தமாகவும் பிற்பாதியை முணுமுணுப்பாகவும் பேசிவிட்டு தாரிகையைக் கடந்திருந்தான் நிதின்..!!

மாறவேயில்லை அவன் எனப் புரிந்ததும் புன்னகைத்தவள் அவனைக் கூர்மையாய் பார்த்தபடி கடந்து செல்லத்துவங்க.. அந்தப் பார்வையை எதிர்கொள்ள இயலாததாய் நிதினின் ஓட்டம்..!! சிரிப்புதான் வந்து தொலைத்தது தாரிகைக்கு..!! இவனெல்லாம் திருந்தவே மாட்டான் என்ற எண்ணமும்..!!

தான் சுற்றித்திரிந்த ஒவ்வொரு இடத்தையும் வேடிக்கை பார்த்தப்படி தனது வீட்டை அடைந்திருந்தாள் தாரிகை..!!

நெய்விட்ட பொங்கலின் மனம் ஆளை சுண்டியிழுக்க நேராக சமையல் அறைக்குள் நுழைந்திருந்தாள் அவள்..!!

கீதாஞ்சலியும் சமுவும் வடை சுட்டுக்கொண்டிருக்க அவர்களுடன் பம்பரமாய் சுழன்றுகொண்டிருந்தார் சமுவின் தாயார்..!! முதல் நாள் எழ முடியாமல் படுத்திருந்தவர் இன்று அத்தனை சுறுசுறுப்பாய்..!! சமுவின் வருகை செய்த மாயம்..!!

“இனி பெரியவர்களைத் தனியாக இங்கு விட்டுவைக்கக்கூடாது..”, முடிவு செய்திருந்தது தாரிகையின் மனது..!!

“நிஷாவுக்கு போன் பண்ணியா செல்வி..??”, கைகளைத் துடைத்துக்கொண்டே சமுத்திரா கேட்டிட்ட..

“இன்னைக்கு சண்டே சமூமா.. தூங்கட்டும் அவ கொஞ்ச நேரம்..”, என்றவள் விழிகளை சுழலவிட்டுக்கொண்டே, “அப்பா எங்கே..??”, என்று கேட்டிட்ட..

“மாமாவும் அப்பாவும் வெளிய போயிருக்காங்க பேபி..”, என்றபடி தாரிகையின் கழுத்தை கட்டிக்கொண்டான் வெற்றியின் புதல்வன் அபினவ்..!!  

“அபி.. எப்படா ஊருல இருந்து வந்த..??”, அவனது கைகளோடு தனது கைகளைக் கோர்த்துக்கொண்டாள் தாரிகை..

“இப்பத்தான்.. நானும் அம்மாவும் வந்தோம்..”, என்று அபினவ் சொல்லி முடிக்க.. அங்கு வெற்றியின் மனைவி துளசியின் வருகை..

“வா தாரிகை.. நல்லா இருக்கியா..??”, சம்பிரதாய அழைப்புடன் கூடிய விசாரிப்பு..!!

“நல்லா இருக்கேன் அத்தை..”, நிறுத்திக்கொண்டாள் தாரிகை.. தெரியும் அவளுக்கு.. தனது மாமனின் மனைவிக்கு தன் மீது அத்தனை பிடித்தம் இல்லை என்று..!!

பெரிதாக எல்லாம் தாரிகையிடம் பேசமாட்டாள் துளசி.. ஒரு புன்னகை.. அது மட்டுமே எப்பொழுதும்..!! தாரிகையை வேண்டாம் என்றும் ஒதுக்கியதில்லை.. அதே சமயம் வேண்டும் என்றும் ஒட்டியதும் இல்லை..!! எப்பொழுதும் ஒரு எல்லையே..!!

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.