இப்படி இந்த செய்தி அறிந்து ஒவ்வொருவரும் ஒவ்வொரு மாதிரி நினைக்க, இதில் மகளுக்கு திருமணம் ஆன விஷயம் கூட தெரியாமல், இப்போது அந்த செய்தியை கேட்டு மகிழ்ச்சி அடைய முடியாமல் பன்னீர் அதிர்ச்சியில் உறைந்து போயிருந்தார்.
இது எப்படி சாத்தியம் அவரால் நம்பவே முடியவில்லை, “இல்லை இது உண்மையில்லை.. உங்க ரெண்டுப்பேருக்கும் கல்யாண ஏற்பாடு நடந்ததே தவிர, கல்யாணம் நடக்கல.. இப்போ என் பொண்ணு உன்னை வேண்டாம்னு சொல்லிட்டு விலகிட்டதால, அவ சாத்விக் கூட சேர கூடாதுன்னு நினைச்சு, அவளை பழி வாங்க.. அவளோட கல்யாணம் நடந்ததா பொய் சொல்ற..” என்று விபாகரனை பார்த்து பன்னீர் கூறினார்.
அவரது குற்றச்சாட்டில் சிரித்தவன், “எங்க ரெண்டுப்பேருக்கும் அந்த சூழ்நிலையில் அவசரமா கல்யாணம் நடக்க காரணமே நீங்க தான், அன்னைக்கு எங்களுக்கு கல்யாணம் நடக்கல.. அது நின்னுபோச்சுன்னு உங்களுக்கு சொன்னதும் நான் தான்.. இதில் இருந்தே புரியலையா? எங்களுக்கு நடந்த கல்யாணம் உங்களுக்கு தெரியக் கூடாதுன்னு நினைச்சேன்.. அதான் அப்படி சொன்னேன்..” என்று எந்த ஒரு பதட்டமும் இல்லாமல் சாதாரணமாக கூறினான்.
ஆனால் அதை அவரால் ஏற்றுக் கொள்ளவே முடியவில்லை, “அப்போ உன்னோட கல்யாணம் ஆன அப்புறம் தான் அவ உன்னை விட்டு ஓடிப் போனாளா?” என்று அவனை அவமானப்படுத்த வேண்டுமென்றே அந்த கேள்வியை கேட்டவருக்கு, அதில் அவரது மகளை அத்தனை பேர் முன்பும் அவமானப்படுத்துகிறோம் என்று உரைக்கவில்லை. அந்த அளவு சுயநலத்தில் ஊறிப் போயிருந்தார்.
ஆனால் தன் மனைவி இப்படி அத்தனை பேர் முன்பும் அவமானப்படட்டும் என்று நினைக்கும் கல் மனது படைத்தவன் இல்லை விபாகரன், அதனால் கோபமாக,
“நீங்க இங்க உங்க மகளைப் பத்தி பேசல.. என்னோட மனைவி யாதவியை பத்தி பேசறீங்கன்னு ஞாபகத்தில் வச்சுக்கோங்க.. என்னோட மனைவி என்னை விட்டு ஓடிப் போனதா யாரு சொன்னா.. அந்த நேரம் ஒரு அவசியத்துக்காக தான் எங்களோட கல்யாணம் நடந்துச்சு.. ஆனா அதால அவ படிப்பு பாதிக்கப்படக் கூடாதுன்னு தான் என்னோட ப்ரண்ட் வீட்ல அவளை தங்க வச்சிருந்தேன்.. அதுவும் நீங்க சேர்த்து வச்ச ஆபத்தால..” என்றவன்,
“என்ன பாலா அப்படித்தானே, நான் சொல்லித் தானே யாதவியை உங்க வீட்ல தங்கி படிக்க வச்சீங்க..” என்று பாலாவை பார்த்துக் கேட்டான். அந்த நேரம் இதுவரை தன் நிலையை எண்ணி கூனி குறுகி நின்றிருந்த யாதவி கூட தலை நிமிர்ந்து விபாகரனை பார்த்தாள்.
விபாகரன் சொன்னது உண்மையில்லை என்றாலும், யாதவியை அசிங்கப்படுத்தக் கூடாது என்பதை உணர்ந்து, “ஆமாம் விபா சொல்லி தான் யாதவியை எங்களோட தங்க வச்சு அவளை படிக்க வச்சோம்..” என்று பாலாவும் கூறினான்.
இருந்தாலும் அங்கு விபாகரன், யாதவிக்கு வேண்டியவர்கள் அனைவருக்கும் உண்மை என்ன என்பது தெரிந்திருந்தாலும், விபாகரனை நினைத்து வியக்காமல் இருக்க முடியவில்லை என்பதே உண்மை.
“கல்யாணம் ஆகிடுச்சுன்னு சொல்ற.. அப்போ யாதவி கழுத்தில் நீ கட்டின தாலி எங்க?” என்று இன்னும் அவர்களை அவமதிக்கிம் நோக்கோடு பன்னீர் கேள்விகளை கேட்டுக் கொண்டிருந்தார்.
“என்ன மிஸ்டர் பன்னீர் இந்த காலத்தில் தாலிக்கு அவ்வளவு முக்கியத்துவம் கொடுத்து பேசிக்கிட்டு இருக்கீங்க.. எங்களுக்கு கல்யாணம் நடந்ததற்கான நிறைய ஆதாரம் என்கிட்ட கேளுங்க வேணும்னா காட்டறேன்.. ஆனா தாலி இருக்கா? இல்லையான்னு சில்லியா கேக்காதீங்க.. காலேஜ்க்கு போகும் போது அவளை எல்லாம் வித்தியாசமா பார்க்கக் கூடாதுன்னு நான் தான் தாலி வேணாம்னு கழட்ட சொல்லிட்டேன்.. இப்போ அதுக்கு என்ன செய்யலாம்?” என்றுக் கேட்டான்.
“அப்போ இவளை நீதான் பாதுகாப்பா தங்க வச்சிருந்தேன்னா.. எதுக்கு ரத்னா சாகணும்.. பொண்ணு ஓடிப்போயிட்டாங்கிற அவமானமும் அதிர்ச்சியும் தானே அவ நெஞ்சு வலியில் செத்து போனா.. அந்த சாவுக்கு கூட இவ வரலையே.. ஏன் வரல?”
“பொண்ணை நல்லப்படியா கட்டிக் கொடுத்து பெரிய ஆபத்தில் இருந்து காப்பாத்திட்ட மன நிம்மதியோட தான் ரத்னா அத்தை உயிரை விட்டாங்க.. அவங்களை சாகறவரைக்கும் கஷ்டப்படுத்தினது நீங்க தான்.. ரத்னா அத்தை சாவுக்கு யாதவி வந்தாளான்னு கேக்கறீங்களே, அந்த நேரம் நீங்க நிதானாமாவா இருந்தீங்க?” என்று அவன் கேட்க,
உண்மையில் அன்று மது அருந்திவிட்டு விழுந்து கிடந்த பன்னீருக்கு இப்போது பேச்சே வரவில்லை, ஒருவேளை யாதவி அன்று ரத்னா சாவிற்கு வந்து போனாளோ? என்று தனக்குள்ளேயே கேள்வியெழுப்பிக் கொண்ட பன்னீருக்கு, விபாகரன் பொய் சொல்வதாகவே தோன்றியது.
விபாகரனுக்கும் யாதவிக்கும் நடந்த திருமணத்தை அவரால் ஏற்றுக் கொள்ளவே முடியவில்லை. இதற்கும் சாத்விக்கை விட விபாகரன் இப்போது அந்தஸ்தில் உயர்ந்தவன், ஆனால் கண்டிப்பாக தன்னை அவன் அருகில் கூட சேர்த்துக் கொள்ள மாட்டான் என்பதை உணர்ந்தவராக, இந்த திருமணம் நடக்கவில்லை என்பதை உறுதிப்படுத்த என்ன செய்யலாம் என்று சிந்தித்துக் கொண்டிருந்தவரின் மூளையில் உதித்த விஷயம் அவரது முகத்திற்கு பிரகாசத்தை கொண்டு வந்தது.
“அப்படியே உங்களுக்கு அன்னைக்கு கல்யாணம் நடந்திருந்தாலும் அது செல்லாத கல்யாணமா தான் இருக்கும், ஏன்னா அப்போ யாதவிக்கு 18 வய்சு முடியக் கூட இல்ல.. அப்புறம் எப்படி இந்த கல்யாணம் சட்டப்படி செல்லும்?” என்று அவர் கேட்க,
“அவளோட பர்த் சர்ட்ஃபிகேட்ல இருக்க தேதிப்படி பார்த்தா, அப்போ எங்களுக்கு கல்யாணம் நடந்தப்போ யாதவிக்கு பதினெட்டு வயசு முடிஞ்சிடுச்சு.. அவளோட பர்த் சர்டிஃபிகேட்டை நீங்க தானே வாங்கிட்டு வந்தீங்க.. அது கூட உங்களுக்கு ஞாபகம் இல்லையா?” என்று விபாகரன் திருப்பிக் கேட்கவும், பன்னீருக்கு அதை அவ்வளவு விரைவில் விட மனம் வரவில்லை, மேற்கொண்டு ஏதோ பேச போக,