“அங்கிள் நீங்க இதுக்கும் மேல பேசாம இருப்பது தான் நல்லது.. உங்க பொண்ணோட அமைதியே விபாகரன் சொன்னது உண்மைன்னு உங்களுக்கு புரியலையா?
இங்க நடந்தது முழுக்க என்னோட தப்பு.. யாதவியை எனக்கு பிடிக்கும், அவளை கல்யாணம் செஞ்சுக்க ஆசைப்பட்டேன்.. ஆனா அதை யாதவிக்கிட்ட தனிப்பட்ட முறையில் சொல்லியிருக்கணும்.. ஆனா இத்தனை பேர் முன்ன என்னோட காதலை சொல்றதா நினைச்சு யாதவிக்கும் விபாகரனுக்கும் நான் சங்கடத்தை கொடுத்திட்டேன்..
யாதவியை ரொம்ப வருஷம் கழிச்சு பார்த்ததும் அவ தனியா இருக்கவே அவளுக்கு கல்யாணம் ஆகியிருக்கும்னு நான் எதிர்பார்க்கல.. யாதவியோட நிச்சயதார்த்தம் செய்ய நினைச்சு இவ்வளவு தூரம் வந்த நான் யாதவிக்கிட்ட இதை சொல்லாதது தான் என்னோட தப்பு.. இதுக்கு விபாகரனும் யாதவியும் என்னை மன்னுக்கணும்..” என்று சாத்விக் இருவரையும் பார்த்து கையெடுத்து கும்பிட்டான்.
இதுவரை வீரராகவனே ஒருவித அதிர்ச்சியில் இருந்தவர், இனியும் அமைதியாக இருக்கக் கூடாது என்பதை உணர்ந்து, “இங்கப்பாருங்க இப்போ நடக்கற விஷயம் அவங்களோட பர்சனல், அதை அவங்களுக்குள்ள பேசி தீர்த்துப்பாங்க.. நாம சாப்பிட போகலாம் வாங்க..” என்று விருந்தினர்களை அழைக்க, அவர்களும் தங்களுக்குள் பேசியப்படியே கலைந்து போயினர்.
இப்போதும் தான் நினைத்தது நடக்கவில்லை என்ற கோபத்தில் பன்னீர் அந்த இடத்தை விட்டு கோபமாக வெளியேற, சாத்விக்கும் கிளம்புவதாக அனைவரிடமும் சொல்லிக் கொண்டு கிளம்பிவிட்டான். யாதவி இன்னுமே அந்த மேடை மீதே நின்றிருக்க, புவனாவும் மதுரிமாவும் அவளை ஆறுதலாக கைப்பிடித்து கூட்டி வந்தனர்.
அவர்கள் அருகில் சென்ற விபாகரன் பாலாவை பார்த்து, “பாலா இனி யாதவி உங்க வீட்ல இருக்க வேண்டாம்.. இனியும் அவளை வேலைக்காரி, ஓடிப் போனவன்னு எல்லோரும் பேசறதை என்னால கேக்க முடியாது.. அதனால அவளை நான் என்னோட வீட்டுக்கு அழைச்சிட்டுப் போகப் போறேன்..” என்று அனுமதி கேட்க, பாலாவோ புவனாவை பார்த்தான்.
“இதுவரைக்கும் யாதவிக்கு கல்யாணம் ஆன விஷயம் தெரியாததால எங்கக் கூட வச்சிருந்தோம்.. ஆனா இனியும் அவளை அப்படி வச்சிருக்கக் கூடாது.. தாராளமா உங்கக் கூட நீங்க அழைச்சிட்டுப் போகலாம்..” என்று புவனா கூறினார்.
அவர்கள் பேசிக் கொண்டிருந்ததை கவனித்துக் கொண்டிருந்த அர்ச்சனாவிற்கு உடலெல்லாம் பற்றி எரிவது போல் இருந்தது. அருகில் இருந்த மஞ்சுளாவிடம், “என்னம்மா இந்த அண்ணனுக்கு கொஞ்சமாவது மானம் ரோஷம் இருக்கா? இல்லையா?
வேணாம்னு தூக்கிப் போட்டு போனவ எக்கேடாவது கெட்டுப் போறான்னு விட்டுட்டு போகாம.. அவளை அத்தனை பேர் முன்னேயும் மனைவின்னு சொல்லி, அவ செஞ்ச தப்பப் பூசி மொழுகி, அவளை கூட்டிட்டு வரணுமா? நீ வேண்டாம்னு போய் சொல்லும்மா..” என்று தூண்டிவிட்டாள்.
மஞ்சுளாவிற்குமே இப்போது ஒன்றும் புரியாத நிலை தான், யாதவியே நடந்த திருமணத்தை பொருட்டாக நினைக்காமல், வேண்டாம் என்று தன் மகனை விட்டுவிட்டுச் சென்ற போது, ஆரம்பத்தில் இப்படி ஆகிவிட்டதே என்று வருத்தப்பட்டாலும், வருடங்கள் கடந்தப்பின் நடந்த திருமணத்திற்கு அர்த்தம் இல்லை, அதையே நினைத்து மகன் தனியாகி விடக் கூடாது என்று தான், சிறிது நாளாக அவனுக்கு இன்னொரு திருமணம் செய்வதை பற்றி பேசிக் கொண்டிருந்தார்.
ஆனால் அவனால் நடந்த திருமணத்தை ஒதுக்க முடியாது என்றால், அவரால் என்ன செய்ய முடியும்? இத்தனை பேர் முன்பு யாதவியோடு நடந்த திருமணத்தைப் பற்றி அறிவித்த பின்பு ஒன்றும் சொல்வதிற்கில்லை என்று அமைதியாக இருந்தார். அவர் மனதிற்குள் நினைப்பதை புரிந்தவனாக விஜயோ,
“இத்தனை பேர் முன்ன உங்க அண்ணன் அவனோட கல்யாண விஷயத்தை சொல்லியாச்சு.. இதுக்கு மேல யாதவியை வீட்டுக்கு கூட்டிட்டு வர வேண்டாம்னு சொன்னா அது நமக்கு தான் அசிங்கம் அர்ச்சனா.. அதனால அமைதியா இரு.. அத்தையும் அது புரிஞ்சு தான் அமைதியா இருக்காங்க..” என்று நிலைமையை விளக்கவும், தன்னால் ஒன்றுமே செய்ய இயலாத நிலைமையில் அர்ச்சனா உள்ளுக்குள் கொதித்துக் கொண்டிருந்தாள்.
“அப்போ சரி இன்னைக்கே நான் யாதவியை என்னோட வீட்டுக்கு கூட்டிட்டுப் போறேன்..” என்று விபாகரன் புவனாவிடம் சொல்ல, அவரும் சரியென்று தலையாட்டினார்.
இதுவரையுமே யாதவியை நேருக்கு நேராக பார்க்கவோ, அவளோடு பேசவோ விபாகரன் முயலவில்லை. அதை யாதவியும் உணர்ந்து தான் இருந்தாள். அவன் தன்னிடம் பேச வேண்டுமென்றும் அவள் எதிர்பார்க்கவில்லை. ஆனால் இப்போது அவனோடு அவன் வீட்டுக்கு செல்வதை நினைத்து தான் அவள் சிந்தித்துக் கொண்டிருந்தாள்.
ஒருப்பக்கம் அவள் விருப்பத்தை கேட்காமல் சாத்விக் அவளோடு நிச்சயம் நடப்பது வரை வந்துவிட்டான். இன்னொருப்பக்கம் அவளை கேட்காமலேயே அவளைப் பற்றிய உண்மையை கூறி அவளை தன்னோடு அழைத்துச் செல்ல விபாகரன் முடிவே செய்துவிட்டான். ஆனால் இந்த நேரம் யாதவியின் மனநிலையை யாருமே அறியவில்லை.
இப்படி ஒரு நிலையை அவள் சந்திக்க விரும்பாமல் தான் அவள் இத்தனை நாள் யாரையும் காணாமல் ஒதுங்கியே இருந்தாள். அவள் தெரிந்தும் தெரியாமலும் செய்த தவறுக்கு இதுவரை அனுபவித்தது தண்டனையாக அவள் நினைக்கவில்லை. இதற்கு மேல் தான் அவளுக்கு தண்டனை காத்திருக்கிறதோ என்று அவள் மனதிற்குள் பயம் சூழ்ந்தது.
அத்தனை பேர் முன்பு அவளுக்காக பேசி, அவள் தவறை விபாகரன் சரி செய்துவிட்டான். ஆனால் அதுவே அவள் மனதில் குற்ற உணர்வை வரவழைத்ததை அவன் அறியவில்லை. அதுமட்டுமில்லாமல் அவன் மனதில் இருப்பதும் அவளுக்கு புரியவில்லை. இனி தன் வாழ்க்கை அவனோடு எப்படி இருக்கும்? என்பது புரியாமல் கால்கள் அவன் பின்னால் செல்ல, மனமோ காலத்தின் பின்னோக்கி சென்று அவனுடன் தனக்கு நடந்த திருமணத்தை நினைத்துப் பார்த்தது.
மையல் தொடரும்..
Go to Maiyalil manam saaintha velai story main page
{kunena_discuss:1211}
The above article / story / poem is a copyright material and is published with the consent of the author. If you find any unauthorized content do let us know at
Chillzee is an entertainment website and all the content published here are for entertainment purpose only. Most of the content are fictional work and should be treated accordingly. Information on this website may contain errors or inaccuracies; we do not make warranty as to the correctness or reliability of the site's content. The views and comments expressed here are solely those of the author(s) in his/her (their) private capacity and do not in any way represent the views of the website and its management. We appreciate your high quality of listening to every point of view. Thank you.