(Reading time: 23 - 45 minutes)

ஒருபக்கம் சாத்விக் பற்றிய சிந்தனைகள் இருந்தாலும், இன்னொரு பக்கம் செமஸ்டர் தேர்வுகள் ஆரம்பித்துவிட்டதால், அதில் கவனம் செலுத்த ஆரம்பித்துவிட்டாள். பின்னர் செமஸ்டர் விடுமுறை விடவும் வீட்டில் தான் இருந்தாள். இந்த சமயத்தில் பன்னீர் திரும்ப அவளை பட வாய்ப்புக்காக இரண்டு பேரிடம் கூட்டிச் சென்றார். சாத்விக் சொல்லியதை நினைத்து பார்த்து முதலில் மறுத்தவளை, அவள் கேட்டதை இந்த முறை கண்டிப்பாக வாங்கி தருவதாக சொல்லி அவளிடம் கெஞ்சிக் கூத்தாடி பன்னீர் அழைத்துச் செல்ல, வழக்கம்போல் நம்மை மீறி என்னவாக போகிறது என்ற அலட்சியத்தோடு யாதவி அவரோடு சென்றாள்.

பன்னீர் அழைத்து போன அந்த இரண்டு படக்குழுவில் ஒருவர் யாதவி தான் அந்த படத்திற்கு கதாநாயகி என்று முடிவு செய்து பன்னீருக்கு அட்வான்ஸ் எல்லாம் கொடுத்தனுப்பிவிட்டார். பன்னீருக்கோ மகிழ்ச்சி தாங்கவில்லை, யாதவிக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை, எப்போதும் போல நடித்து காட்டியதில் அவள் சொதப்பினாலும், அவர்கள் அவளை தேர்வு செய்துவிட்டனர். எப்படி என்று புரியாமல் குழம்பினாள்.

ஆனால் அவர்கள் பார்த்தது யாதவியின் அழகை மட்டும் தான், ஏனென்றால் அவர்கள் தயாரிப்பது இரண்டாந்தர படம், அதற்கு கொஞ்சம் கவர்ச்சியும் அழகும் மட்டும் இருந்தால் போதும், ஆனால் அவர்கள் அப்படிப்பட்ட படம் தயாரிப்பவர்கள் என்று பன்னீருக்கு தெரியாது. முன்பணத்தை பார்த்ததில் இதையெல்லாம் அவர் ஆராய்ந்து பார்க்கவில்லை, இதில் தன் அன்னைக்கும் தெரியாமல் தந்தையோடு சென்று வந்ததில் அவள் எப்படி சினிமாவில் நடிக்காமல் தப்பிப்பது என்று வழி தெரியாமல் யாதவி தவித்துக் கொண்டிருந்தாள். அவளுக்குமே அவர்கள் எப்படிப்பட்ட படம் தயாரிப்பவர்கள் என்பது தெரியாது.

ஆனால் பணத்தை கண்ணில் பார்த்ததும் சாராயக்கடையே கதியென்று இருந்த பன்னீர் குடிப்போதையில் உளறியதை சண்முகம் கேட்டான்.

சண்முகம் ரத்னாவும் மஞ்சுளாவும் வேலை பார்க்கும் பருப்பு கம்பெனியில் தான் வேலை பார்ப்பவன், அவன் முழுநேர குடிகாரன் இல்லையென்றாலும் எப்போதாவது கொஞ்சம் அதிக பணம் கையில் புழங்கினால் சாராயக்கடைக்கு வந்துவிடுவான். அவன் ரத்னா வீட்டின் அருகில் தான் இருப்பதால்,

“அக்கா.. அண்ணன் என்னன்னவோ சொல்றாரு.. ஏதோ பட ஆளுங்கக்கிட்ட அட்வான்ஸ் வாங்கியிருக்கார் போலக்கா, அவர் சொல்ற கம்பெனி பார்த்தா தப்பான படம் எடுக்கிறவங்க போல இருக்குக்கா.. அதுல நம்ம யாதவி நடிச்சா அவ எதிர்காலமே பாழா போயிடும்.. அண்ணன்க்கிட்ட என்னன்னு விசாரி.. கொஞ்சம் ஜாக்கிரதையா இருந்துக்க..” என்று ரத்னாவை எச்சரித்தான்.

விஷயத்தை கேட்டு ரத்னாவிற்கு திக்கென்று ஆனது. பன்னீர் இல்லாத நேரத்தில் யாதவியை விசாரிக்க, அவளும் தந்தையோடு சென்றதை ஒத்துக் கொண்டாள். ஆத்திரத்தில் இரண்டடி அடித்தவர், புலம்பி தீர்த்தார். பின் பன்னீர் வந்ததும் அவரை கொஞ்சம் திட்டித் தீர்க்க, எப்போதும் ரத்னாவின் திட்டுக்கு அடங்குபவர், இந்த முறை யாதவிக்கு வாய்ப்பு கிடைத்த மகிழ்ச்சியில் ரத்னாவிடம் திமிறாக பேசி, யாதவியை அந்த படத்தில் நடிக்க வைக்க தான் போகிறேன் என்று பிடிவாதமாக கூறினார்.

ரத்னாவிற்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை, வயதுக்கு வந்த பெண்ணை வைத்துக் கொண்டு ஆண் துணையில்லாமல் வாழ்வது கடினம் என்பதால் தான் பன்னீர் எப்படியிருந்தாலும் பொறுத்துக் கொண்டு இருந்தார். ஆனால் இப்போது இப்படி ஒரு ஆபத்து சூழ்ந்திருக்கும் போது அவருக்கு ஒன்றுமே புரியவில்லை, இரண்டு நாட்களாக வேலைக்கு கூட செல்லாமல் யாதவியை பாதுகாத்துக் கொண்டு என்ன செய்வது என்று சிந்தனையில் இருந்தவர், பின் ஒரு முடிவுக்கு வந்தவராக, பன்னீர் வீட்டில் இல்லாத சமயமாக  யாதவியை கையோடு அழைத்துச் சென்று அவளோடு பள்ளியில் படித்த தோழி ஒருத்தியின் வீட்டுக்கு அழைத்து போய் அவளை கொஞ்ச நேரம் இருக்கச் சொல்லிவிட்டு அவரோ நேராக மஞ்சுளாவின் வீட்டுக்குச் சென்றார்.

ரத்னா வீட்டிற்கு போகும் போது விபாகரனும் வீட்டில் தான் இருந்தான். “வாங்க அத்தை..” என்று அவன் ரத்னாவை வரவேற்க, சத்தம் கேட்டு உள்ளிருந்து வந்த மஞ்சுளா,

“அடடே வா ரத்னா..” என்றுக் கேட்டவர், “ஏன் ரெண்டு நாளா வேலைக்கு வரல..” என்றுக் கேட்டார்.

ரத்னாவின் வீட்டுக்கு ஒன்றிரண்டு முறை தான் அவர் போயிருக்கிறார். அப்போதெல்லாம் பன்னீர் வீட்டிலேயே மது அருந்திவிட்டு ஏதாவது பேசிக் கொண்டு, யாரையாவது திட்டிக் கொண்டு இருப்பார். “ஒரு வயதுக்கு வந்த பெண்ணை வைத்துக் கொண்டு வீட்டிலேயே இப்படியெல்லாம் செய்வார்களா? இவனெல்லாம் ஒரு மனுஷன்னு சொல்லிக்கிட்டு திரியறானே..” என்று மனதிற்குள்ளேயே புலம்பிக் கொள்வார். அதனாலேயே அவர் ரத்னாவின் வீட்டுக்கு தேவையில்லாமல் செல்ல மாட்டார்.

ரத்னாவின் கையிலும் அலைபேசி இல்லாததால் என்ன பிரச்சனை என்பது தெரியாமல் குழம்பிக் கொண்டிருந்தவர், நாளைக்கும் ரத்னா வேலைக்கு வரவில்லையென்றால் வீட்டிற்குச் சென்று தான் பார்க்க வேண்டும் என்று நினைத்திருக்க, இன்றே ரத்னா வீட்டுக்கு வரவும் அவர் கேள்விகளை கேட்க, ரத்னாவோ ஓ வென்று கதறி அழுதார்.

“என்னாச்சு ரத்னா?” என்று மஞ்சுளாவும், “எதுக்கு அழறீங்க அத்தை..” என்று விபாகரனும் அவர்கள் அருகில் செல்ல,

“ஏதாவது பிரச்சனையோடு தான் இவங்க வீட்டுக்கு வருவாங்களா?” என்பது போல் அர்ச்சனா எரிச்சலோடு பார்த்துக் கொண்டிருந்தாள்.

“என்னத்தான் ஆச்சு ரத்னா? ஏன் இப்படி அழற?” மஞ்சுளா கொஞ்சம் அதட்டலாக கேட்கவும் ரத்னா பிரச்சனையை விளக்கமாக கூறினார்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.