(Reading time: 23 - 45 minutes)

ரத்னா அழவும் மனம் தாங்காமல், “என்ன அர்ச்சனா.. என்ன பேச்சு இது சாமியார்னு, உனக்கு கல்யாணம் ஏற்பாடு செய்யும் போதே மாப்பிள்ளை துபாய்ல தான் இருந்தாரு.. கல்யாணம் ஆனா நீங்க பிரிஞ்சு இருக்க வேண்டி வருமேன்னு யோசிச்சேன்.. ஆனா உனக்கு அந்த கல்யாணத்தில் விருப்பம்னு தான் நாங்க அந்த கல்யாணத்தை நடத்தி முடிச்சோம்..

கல்யாணம் ஆகி ஒரு மாசம் தான் நீங்க ஒன்னா குடித்தனம் நடத்தினீங்க.. அதுக்குப்பிறகு மாப்பிள்ளை துபாய்ல, நீ இங்க, மாமியார் வீட்ல கூட கொஞ்ச நாள் தான் இருந்த, இது என்னடா இப்படி ஒரு வாழ்க்கைன்னு நீயும் மாப்பிள்ளையும் நினைச்சீங்களா? உங்க எதிர்காலத்துக்காக தானே அதையெல்லாம் அனுசரிச்சி போறீங்க.. உங்களோடது சாமியார் போல வாழ்க்கைன்னு சொல்ல முடியுமா?” என்று மஞ்சுளா அர்ச்சனாவை பார்த்து கேட்கவும்,

“அம்மா இது வேற, அண்ணாவோட விஷயம் வேற ம்மா..” என்று அவள் கூறினாள்.

“எல்லாத்துக்கும் நம்ம மனசு தான் காரணம்..” என்றவர்,

“விபு இப்பவே உனக்கும் யாதவிக்கும் கல்யாணம் நடக்கிறதில் உனக்கு ஏதாச்சும் பிரச்சனை இருக்கா?” என்று மகனை பார்த்துக் கேட்டார்.

“பிரச்சனை தான் ம்மா..” என்று விபாகரன் சொல்லவும், ரத்னாவும் மஞ்சுளாவும் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டனர்.

“அம்மா யாதவிக்கு 18 வயசு முடிய ரெண்டு மாசம் இருக்கும்மா.. அதுக்கு முன்ன அவளுக்கு கல்யாணம் செய்றது தப்பு.. சட்டம் அந்த கல்யாணத்தை அனுமதிக்காது.. கோவில் இல்ல ரிஜிஸ்டர் ஆஃபிஸ்ல கல்யாணம் வச்சா எங்க சர்டிஃபிகேட்ல்லாம் காமிக்கணும், யாருக்கும் தெரியாம நடத்திக்கலாம்னுல்லாம் நினைக்க முடியாது. பின்னாடி அவங்க அப்பா இதை வச்சே பிரச்சனை செய்யலாம்..” என்று இப்போது நிலவரத்தை அவன் எடுத்து சொல்ல,

“அது தான் பிரச்சனையா தம்பி.. அப்போ இது பிரச்சனையாவே இருக்காது.. ஏன்னா சட்டப்படி போன மாசமே யாதவிக்கு பதினெட்டு வயசு முடிஞ்சாச்சு.. அதனால் தாராளமா இப்போ கல்யாணம் செய்யலாம்..” என்று ரத்னா கூறினார்.

யாதவியின் பிறந்தநாள் விபாகரனுக்கு நன்றாகவே ஞாபகம் இருந்தது. ஏனென்றால் போன பிறந்தநாளுக்கு அழகான பாவாடை தாவணியில் யாதவி அவர்கள் வீட்டுக்கு வந்து அவனுக்கும் அவன் வீட்டாருக்கும் இனிப்பு கொடுத்ததை அவனால் எப்படி மறக்க முடியும்?

அப்போது தான் மஞ்சுளா யாதவிக்கும் அவனுக்கும் திருமணம் செய்வதை பற்றி பேசிக் கொண்டிருந்தார். அதனாலேயே அவளை கொஞ்சம் ஆர்வமாக பார்த்தவன், அவள் வயது, பிறந்த வருடம், படிப்பு பற்றியெல்லாம் கேட்டறிந்தான். அதில் அவள் சொல்லும் தேதியை வைத்து பார்த்தால், இன்னும் இரண்டு மாதம் இருக்கிறதே, என்று அவன் சிந்தனை வயப்பட,

“பிரசவ வலி அதிகமாகி ஹாஸ்பிட்டல் போறதுக்கு நேரமாகும்னு பக்கத்தில் இருந்த நர்ஸ் வீட்ல அவங்க பிரசவம் பார்த்து தான் யாதவி பொறந்தா.. அதுக்குப்பிறகு அவளை ஸ்கூலில் சேர்க்கும் போது தான் பர்த்  சர்டிபிகேட் வாங்கினோம், அதுக்கு அந்த மனுஷனை தான் அனுப்பினேன்.. அவர் தேதி, வருஷமெல்லாம் கரெக்டா சொன்னவர், மாசத்தை மட்டும் மாத்தி சொல்லி சர்டிபிகேட் வாங்கிட்டு வந்துட்டாரு.. நாங்களும் அதை வச்சே யாதவியை ஸ்கூலில் சேர்த்துட்டோம்.. அதனால ஸ்கூல், காலேஜ்லல்லாம் அவ பிறந்தநாள் போன மாசம்னு தான் இருக்கும் தம்பி..” என்று விவரத்தை சொல்லவும்,

“அப்புறம் என்ன விபு.. அப்போ இந்த கல்யாணம் நடக்கறதுல ஒன்னும் பிரச்சனை இல்லையே, இந்த கல்யாணத்தில் உனக்கு சம்மதம் தானே..” என்று மஞ்சுளா கேட்கவும்,

“எனக்கு சம்மதம் தான் ம்மா.. ஆனா இதுக்கு யாதவியும் சம்மதிக்கணும், அதுவும் நானே அவக்கிட்ட நேரா கேக்கணும், யாதவிக்கு சரின்னா உடனே கல்யாணம் வச்சுக்கலாம்..” என்று விபாகரன் கூற,

ரத்னா அதற்காக மகிழ்ந்தாலும், யாதவியை எப்படி சம்மதிக்க வைக்கப் போகிறோம் என்று ஒருபக்கம் கவலையாக, அர்ச்சனாவோ பட்டு தான் இவர்கள் உணர்ந்துக் கொள்வார்கள் என்று அமைதியாகிவிட்டாள்.

ரத்னா நினைத்தது போல யாதவி திருமணத்திற்கு ஒத்துக் கொள்ள மாட்டேன் என்று அடம்பிடித்தாள்.

“என்னம்மா நீங்க.. எதுக்கு எனக்கு இவ்வளவு அவசரமா கல்யாணம் செய்யணும்.. அதுவும் உங்க ப்ரண்டோட பையன் கூட.. நான் பிறந்ததிலிருந்து கஷ்டம் கஷ்டம்னு சொல்லிக்கிட்டே இருக்கீங்க.. சரி கல்யாணத்துக்குப்பிறகாவது நல்ல வசதியா இருக்கணும்னு தான் நான் ஆசைப்பட்றேன்.. ஆனா நீங்க நம்மள போல இருக்க அந்த குடும்பத்துக்கு என்னை கல்யாணம் செஞ்சு அனுப்பி வைக்கப் பார்க்கீறீங்க.. அதுக்கு அப்பா ஆசைப்பட்டது போல நான் சினிமாலேயே நடிக்கலாம்..”

“என்ன பேசற யது.. சினிமாங்கிற பேர்ல உங்கப்பா உன்னை பாழுங்கிணத்துல தள்ளப் பார்க்கிறாரு.. ரெண்டு நாளா அதை தானே உனக்கு சொல்லிக்கிட்டு இருக்கேன்.. விபு தம்பி உங்க அப்பா மாதிரி பொறுப்பில்லாத ஆள் கிடையாது.. பொறுப்பா குடும்பத்தைப் பார்த்துக்கும்.. மஞ்சுளா அக்காவும் உன்னை தங்கமா பார்த்துப்பாங்க.. நம்ம இருக்க நிலைமைக்கு இப்படி ஒரு சம்மந்தம் கிடைச்சதே எவ்வளவு பெரிய குடுப்பிணை தெரியுமா? நம்ம தகுதிக்கு தகுந்தது போல தான் வரன் பார்க்கணும்.. அதை விட்டுவிட்டு கிட்ட வானம் இருக்குன்னு நினைச்சு அதை பிடிக்க  நினைச்சா முடியாது டா..”

“ நாம ஒன்னு வேணும்னு ஆசைப்பட்டு அது நிறைவேறணும்னு அதையே குறிக்கோளா வச்சுருந்தா அது கண்டிப்பா நடக்கும் ம்மா..”

“அது எல்லாத்துக்கும் ஒத்து வராதுடா.. நீ அந்த சினிமாக்கார பையனை மனசுல வச்சு இப்படி பேசறேன்னு நினைக்கிறேன்.. அவங்கல்லாம் சினிமால நடிக்கிறது போல நம்ம மாதிரி ஆளுங்கக்கிட்டேயும் நடிச்சிட்டு போயிடுவாங்க டா.. அதை நம்பி நம்ம வாழ்க்கையை பணயம் வைக்கக் கூடாது.. நாம ஆயிரம் கனவு காணலாம்.. ஆனா தூங்கி எழுந்ததும் அதை தூரப் போட்டுட்டு அன்னைக்கு என்னவோ அதை தான் பார்க்கணும்..

நம்ம மேல அன்புக் காட்டி, நம்மள பாசமா பார்த்து, நமக்கு ஒன்னுன்னா துடிச்சு போய், நமக்காக எல்லாம் செய்ற ஒருத்தர் தான் ம்மா நம்ம வாழ்க்கை துணையா வரணும்.. அந்த அதிர்ஷ்டம் எனக்கு இல்ல.. ஆனா விபு தம்பி மட்டும் உனக்கு புருஷனா வந்தா நீ அந்த அதிர்ஷ்டத்தை செஞ்சவடா.. அதை புரிஞ்சிக்க..

அப்புறம் விபு தம்பி குடும்பம் ஒன்னும் சாதாரண ஆளுங்க கிடையாது.. விபு தம்பியோட தாத்தா ஒரு பெரிய கம்பெனி வச்சி நடத்தி அதுல ஆயிரத்துக்கு மேல வேலை செய்றாங்க.. அவங்க அப்பா மஞ்சுளா அக்கா மேல இருக்க காதலில் எல்லாம் வேணாம்னு தூக்கிப் போட்டுட்டு வந்தவர்.. அவரோட பையன் எப்படி இருப்பான்னு புரிஞ்சிக்க..

அதுமட்டுமில்லாம தாத்தா சொத்து எங்களுக்கு தான்னு விபு தம்பி கேஸ் போட்ருக்கு,கண்டிப்பா அந்த கேஸ்ல தம்பி தான் ஜெயிக்கும்.. அதுக்குப்பிறகு நீ கோடீஸ்வரனோட பொண்டாட்டி.. அதாவது நீயும் கோடிஸ்வரி..”

“நிஜமாவா ம்மா..”

“ஆமாண்டா.. அம்மா எல்லாம் யோசிச்சு தான் இந்த கல்யாணத்தை ஏற்பாடு செஞ்சுருக்கேன்.. அதனால இதுக்கு ஒத்துக்கோடா.. விபு தம்பி உன்கிட்ட சம்ம்தம் கேட்டா, நீ சம்மதம்னு சொல்லு சரியா?” என்றுக் கேட்க அவளும் சரியென்று தலையாட்டினாள்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.