(Reading time: 23 - 45 minutes)

மறுநாள் யாதவியிடம் பேசுவதற்காக விபாகரன் அவளை கோவிலுக்கு அழைத்து வந்திருந்தான். ஒன்றுக்கு நான்கு முறை பக்குவமாக அவளுக்கு புரியவைத்து தான் ரத்னா அவளை அனுப்பி வைத்திருந்தார்.

சாமி தரிசனத்தை முடித்துவிட்டு இருவரும் ஒரு இடத்தில் அமர்ந்தனர். “யது..” என்று அவன் அழைக்க, அதை எதிர்பார்க்காதது போல் அவள் திரும்பினாள்.

“உன்னை அப்படி கூப்பிடலாம் இல்ல.. உங்க அம்மா உன்னை அப்படி தானே கூப்பிடுவாங்க?” என்று அவன் கேட்டதும், சரியென்று தலையாட்டியவளுக்கோ ஒருமுறை சாத்விக்கின் முகம் வந்து மறைந்து, அன்று அவனுடன் பேசியதெல்லாம் ஞாபகத்திற்கு வந்தது.

“நாம இப்போ இங்க எதுக்கு வந்திருக்கோம் தெரியுமா யது..”

“ம்ம் தெரியும்.. நம்ம கல்யாணத்தை பத்தி பேச..”

“ம்ம் ரத்னா அத்தை சொல்லொயிருப்பாங்க.. இவ்வளவு சீக்கிரமா நமக்கு கல்யாணம் நடக்கறதில் எனக்கும் அவ்வளவா உடன்பாடு இல்லைதான், ஆனா உன்னோட அம்மாவா அவங்க கவலையை போக்க, உடனே இந்த கல்யாணம் அவசியம்.. அதான் நான் ஒத்துக்கிட்டேன்.. இதுல உனக்கும் சம்மதம் தானே..” என்று அவன் கேட்க, அவள் உடனே பதில் சொல்லவில்லை.

என்னத்தான் ரத்னா சொல்லி அனுப்பியிருந்தாலும், அவள் கொஞ்சம் குழப்பத்தோடு தான் இருந்தாள். ஒருபக்கம் சாத்விக்கின் நினைவுகள், அவனுக்கு அவளை பிடிக்குமா? காதலித்தானா? அவள் எதிர்பார்த்தது போல் திரும்ப வரமாட்டானா? இப்படியான கேள்விகள் மனதில் இருக்க,

இன்னொருப்பக்கமோ, தன் தந்தை செய்த காரியத்தால், எங்கே அவள் சினிமாவில், அதுவும் அப்படிப்பட்ட திரைப்படங்களில் நடிக்க வேண்டி வருமோ என்ற பயமும் இருந்தது. அவள் அமைதியாக இருக்க,

“இங்கப்பாரு இந்த கல்யாணம் இப்போதைக்கு இந்த பிரச்சனையை தீர்க்க மட்டும் தான்.. மத்தப்படி உன்னோட படிப்பு முடிஞ்சதும் தான் நம்ம வாழ்க்கையை ஆரம்பிப்போம்.. அதுவரைக்கும் நான் காத்திருப்பதில் எனக்கு பிரச்சனையே இல்லை..

உனக்கு தெரியுமா யது.. எனக்கு உன்னை ரொம்ப பிடிக்கும்.. எப்போதிலிருந்து உன்னை பிடிக்க ஆரம்பிச்சதுன்னா எனக்கு சொல்ல தெரியல.. ஆனா பிடிக்குது.. கல்யாணத்துக்கு பிறகு நான் உன்கிட்ட எப்படி நடந்துப்பேனோன்னு நீ பயப்பட வேண்டாம்.. உன்னை உங்கம்மா எப்படி பார்த்துக்கிட்டாங்களோ அப்படி பார்த்துப்பேன்.. நீ மேல படிக்கனுமா படிக்கலாம்.. இல்ல வேலைக்கு போகணுமா அதுவும் உன்னோட விருப்பம் தான்.. உனக்கு என்ன விருப்பமோ அதை நான் கண்டிப்பா நிறைவேற்றி தருவேன்..

அம்மா சொன்னாங்க.. அப்பா செய்த பிரச்சனையில் இருந்து தப்பிக்கணும்.. இப்படியெல்லாம் குழப்பிக்காம.. உனக்கு இந்த கல்யாணத்தில் விருப்பம் இருக்கான்னு மட்டும் சொல்லு.. உனக்கு விருப்பம் இல்லன்னா இதை அப்படியே விட்டுடலாம்.. நீ வேண்டாம்னு சொல்றதால நான் உன்னை அப்படியே விட்டுடமாட்டேன்.. வேற வழியில் இந்த பிரச்சனையை தீர்க்க நான் உதவுவேன்..” என்று அவன் சொல்ல,

அவளுக்கு படிப்பு, வேலை பற்றியெல்லாம் பெரிய கனவுகளே கிடையாது. ஒரு டிகிரி முடித்தால் போதும் என்ற மனநிலை தான், சாத்விக் பற்றிய எதிர்பார்ப்புகளும் கனவுகளும் கூட நாளுக்கு நாள் குறைகிறது தான், அதனால் ரத்னா சொன்னதை ஒன்றுக்கு இரண்டு முறை யோசித்தவள்,

“எனக்கு சம்மதம் தான்..” என்று விபாகரனிடம் கூறிவிட்டாள். பின்,

“அப்புறம் விபு..” என்று அழைத்தவள், அவனை பேரிட்டு கூப்பிட்டதை மனதில் கொண்டு அவசரமாக நாக்கை கடித்தாள்.

அவன் அதை சுவாரசியமாக பார்க்கவும், “நான் உங்களை எப்படி கூப்பிட..” என்றுக் கேட்டாள்.

“அத்தான், மாமா, செல்லம், குட்டி, பட்டு, டார்லிங்.. இப்படி எப்படி கூப்பிட்டாலும் பரவாயில்லை..” என்று அவன் சொல்லவும், அவள் ஒருமாதிரி விழிக்க, புன்னகைத்தவன்,

“உனக்கு இப்படி விபுன்னு கூப்பிட்றது வசதின்னா கூப்பிடு.. எனக்கு நீ மரியாதை கொடுக்கணும்னுல்லாம் நான் எதிர்பார்க்க மாட்டேன்.. நமக்குள்ள என்ன இருக்கு..” என்றுக் கேட்டான்.

அவளும் தலையாட்டியவள், “விபு உங்க தாத்தா சொத்து வேணும்னு கேஸ் போட்டிருக்கீங்களாமே, அந்த கேஸ்ல நீங்க ஜெயிக்க சான்ஸ் இருக்கா.. அப்படி ஜெயிச்சிட்டா, நீங்க உங்க தாத்தா கம்பெனியை எடுத்து நடத்துவீங்களா?” என்று விழி விரிய கேட்டாள்.

“கண்டிப்பா நாங்க தான் ஜெயிப்போம்னு வக்கீல் சொல்றாரு.. ஆனாலும் எனக்கு கம்பெனியை எடுத்து நடத்தணும்னு ஆசையில்லை.. எனக்கு திறமை இருக்கு.. அதை வச்சு என்னால முன்னேற முடியும்.. அது பங்குதாரர்கள் சேர்த்து நடத்தும் கம்பெனி.. அங்க என்னை சேர்த்துப்பாங்களான்னு தெரியல.. அதனால் நானும் அதை எதிர்பார்க்கல.. ஆனா கேஸ் ஜெயிச்சா வீடு, சொத்துன்னு கிடைக்கும், அது என்னோட அப்பாக்கு உரிமையானது.. அதனால் அதை வேண்டாம்னு சொல்ல மாட்டேன்..” என்றான்.

அவனின் அந்த பதிலுமே அவளுக்கு திருப்தி தான், எப்படியோ வீடு, சொத்து என்று வந்தால் வசதியாக வாழலாமே என்று கணக்கு போட்டாள். அவனுடனான வாழ்க்கை நன்றாக இருக்கும் என்ற நம்பிக்கை அவளுக்கு வந்தது. ஆனால் அந்த நம்பிக்கை அன்பாலோ, காதலாலோ அமைந்தது இல்லையே, அதனால் அதன் அஸ்திவாரம் பலமானது இல்லை, அது எப்போது வேண்டுமானாலும் ஆட்டம் காணலாம் என்பதை அவளே அறியாத போது, அவன் மட்டும் எப்படி அறிந்துக் கொள்வான். அதனால் அவளது சம்மதம் கிடைத்ததும், திருமண வேலைகளை துரிதமாக ஆரம்பித்தான்.

மையல் தொடரும்..

Episode # 24

Episode # 26

Go to Maiyalil manam saaintha velai story main page

{kunena_discuss:1211}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.