(Reading time: 23 - 45 minutes)

“என்ன ரத்னா இதுக்கா இப்படி அழற.. நாங்கல்லாம் எதுக்கு இருக்கோம்.. உன்னோட வீட்டுக்காரர்க்கிட்ட முதலில் பேசறோம்.. நாங்க பேசினா புரிஞ்சுப்பாருன்னு தான் நினைக்கிறேன்..” என்று சமாதானமாக கூற,

“இல்லக்கா அவர் எடுத்து சொன்னால்லாம் கேட்கிற ஆள் இல்ல.. அப்படியே கேட்டாலும் அந்த படம் எடுக்கிறவங்க சும்மா இருப்பாங்களா? இவர் அவங்கக்கிட்ட கைநீட்டி காசு வாங்கியிருக்காரு.. அவங்க ஏதாச்சும் பிரச்சனை செய்ய மாட்டாங்களா? அதுவுமில்லாம அவங்கக்கூட போராட நம்மக்கிட்ட பண பலமோ ஆள் பலமோ இல்லையே, நீங்கல்லாம் பேசினா, அதை கேட்க நீங்க யாருன்னு அந்த மனுஷன் உங்களை அவமானப்படுத்தி அனுப்பிட்டா என்னக்கா செய்றது?” என்று தன் பயத்தை ரத்னா கூறினார்.

“யாதவி அப்பா தான் அவளை சினிமால நடிக்க வைக்க பேயா அலையுறாரு சரி.. ஆனா யாதவிக்கு எங்க போச்சு புத்தி.. அப்பா கூப்பிட்டா உங்கக்கிட்ட சொல்லாமலேயே போயிருக்கா.. அவ போனதால தானே இந்த பிரச்சனை.. இப்போ என்ன செய்ய போறீங்க?” எப்போதும் போல சிடுசிடுப்புடன் அர்ச்சனா கேட்டாள்.

“அச்சு கொஞ்சம் பேசாம இரு..” என்று மகளை கண்டித்த மஞ்சுளா,

“போய் உன்னோட வீட்டுக்காரர்க்கிட்டேயும் பேச வேண்டாம்னா இப்போ என்ன செய்ய சொல்ற ரத்னா.. இப்போ இந்த பிரச்சனையை எப்படி சரி செய்றது?” என்றுக் கேட்டார். பின் மகனை பார்த்து,

“விபு உனக்கு ஏதாவது யோசனை தோனுதாடா?” என்றுக் கேட்க,

“அம்மா யாதவியை கட்டாயப்படுத்தில்லாம் அவங்க சினிமால நடிக்க வைக்க முடியாது.. அட்வான்ஸ் தானே கொடுத்திருக்காங்க.. ஏதாவது அக்ரிமென்ட் போட்ருக்காங்களா? அப்படியே போட்ருந்தாலும் நாம கோர்ட்க்கு போய் பிரச்சனையை தீர்த்துக்கலாம் கவலைப்பட வேண்டாம்..” என்று யோசனை கூறினான்.

“கோர்ட் கேஸ்னு அலைஞ்சா யாதவியோட எதிர்காலம் என்னவாகும் தம்பி.. அதில்லாம அந்த மனுஷன் இதுக்கு மேலேயும் அடங்கி போவாரா? திரும்ப சினிமா அது இதுன்னு அவளை அலைக்கழிக்க மாட்டாருன்னு என்ன நிச்சயம்? அதனால இதுக்கு நான் யோசிச்சிருக்க வழி தான் சரி..” என்ற ரத்னா மஞ்சுளாவை பார்க்க,

“என்ன வழி ரத்னா..” என்று அவர் திருப்பிக் கேட்டார்.

“அக்கா யாதவிக்கும் விபு தம்பிக்கும் கல்யாணம் செஞ்சு வச்சுட்டா என்ன?” என்று ரத்னா சொல்லவும், மஞ்சுளாவும் விபாகரனும் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டனர்.

“யாதவி என்னைக்கு இருந்தாலும் உங்க வீட்டு மருமகன்னு நீங்க தானே க்கா சொன்னீங்க.. அதனால இப்பவே கல்யாணம் செஞ்சு வச்சுடலாம்.. அவ உங்க வீட்டு மருமகளா, விபு தம்பியோட மனைவியா ஆயிட்டா, அதுக்குப்பிறகு அந்த மனுஷனால என்ன செய்ய முடியும்?” என்று ரத்னா கேட்டார்.

“எல்லாம் சரி தான் ரத்னா.. இப்பவும் நான் முன்ன சொன்னதில் எந்த மாற்றமும் இல்லை தான், ஆனா? யாதவி இன்னும் சின்ன பொண்ணு, அவ இன்னும் காலேஜ் படிப்பையே முடிக்கல.. அதுக்குள்ள அவளுக்கு எப்படி கல்யாணம் செய்ய முடியும்?”

“ஆனா அதுக்குள்ள அவ எதிர்காலத்தை அந்த மனுஷன் நாசமாக்க பார்க்கிறாரே, அதுல இருந்து காப்பாத்தி என் பொண்ணை உங்க வீட்டு மருமகளாக்கறதுக்குள்ள அவளுக்கு ஏதாச்சு நடந்துடுமோன்னு பயமா இருக்குக்கா..

எனக்கு நம்ம விபு தம்பியை பத்தி நல்லா தெரியும் க்கா.. யாதவி மேல தம்பிக்கு அன்பும் அக்கறையும் இருக்கு, இப்போதைக்கு கல்யாணம் நடந்தாலும், அவ வயசையும் படிப்பையும் மனசுல வச்சு விபு தம்பி நடந்துக்கும்.. அதை தெரிஞ்சதால தான் நானே தைரியமா இப்போ கல்யாணம் செய்யலாம்னு சொல்றேன்..” என்று ரத்னா தான் நினைத்ததை கூற,

“ஓ அப்போ எங்க அண்ணன் உங்க பொண்ணை கல்யாணம் செஞ்சுக்கிட்டு சாமியாரா வேற இருக்கணுமா?” என்று அர்ச்சனா கேட்டாள்.

அவள் கேள்வியில் ரத்னா கூனி குறுகி போனார். அவருக்கு மட்டும் என்ன? இந்த சின்ன வயதிலேயே மகளுக்கு திருமணம் செய்ய வேண்டும் என்ற எண்ணமா? இல்லை இவ்வளவு விரைவில் திருமணத்தை நடத்தி மகளுடன் தாம்பத்ய வாழ்க்கை நடத்தாமல் விபாகரனை பிரித்து வைக்க நினைக்கும் சீரியல் வில்லியா? இப்போதைக்கு இந்த பிரச்சனைக்கான தீர்வாக தான் இந்த திருமணத்தை பார்த்தார்.

என்னத்தான் மஞ்சுளா முன்பே இந்த திருமணத்தை பற்றி சொல்லியிருந்தாலும், இந்த இக்கட்டான சூழலில் கூட தானே வந்து இவர்களிடம் இந்த திருமணப் பேச்சை ஆரம்பித்ததற்கு எவ்வளவு யோசித்தார் என்பது அவருக்கு தான் தெரியும்,

17 வயதில் தான் அவருக்கு திருமணம் ஆனது, 20 வயதில் யாதவியை பெற்றார். ஆனால் மகளுக்கு இவ்வளவு விரைவில் திருமணம் செய்து வைக்க வேண்டும் என்று அவர் நினைத்ததேயில்லை, அவள் நன்றாக படித்து நல்ல வேலைக்கு சென்று பிறகு தான் அவளுக்கு திருமணம் முடிக்க வேண்டும் என்பது அவர் ஆசை,

ஆனால் நினைத்ததெல்லாம் நடந்துவிடுமா? யாதவி படிப்பில் சுமார் தான், இதில் வசதியாக வாழ வேண்டுமென்ற பெரிய பெரிய ஆசைகள் மனதில் உள்ளது. அதை நிறைவேற்றும் சக்தி தன்னிடம் இல்லை, கணவனோ பொறுப்பில்லாமல் இருப்பவர், அப்படியிருக்க, மகள் வாழ்க்கை எப்படி இருக்குமோ என்று அன்னையாக பரிதவிக்கும் போது, யாதவி தன் வீட்டு மருமகள் என்று மஞ்சுளா நம்பிக்கை கொடுத்திருக்க, அதையே பிடித்துக் கொண்டவர், இப்போது இந்த சூழ்நிலையில் அதை நிறைவேற்ற நினைத்தார்.

ஆனால் அர்ச்சனா சொல்வது போல் தங்களின் சுயநலத்திற்காக விபாகரனை கஷ்டப்படுத்த வேண்டுமா? யாதவிக்கு இது திருமண வயது இல்லை, ஆனால் விபாகரன் அந்த வயதை நெருங்கிவிட்டான் தானே, அவனுக்கும் திருமணம் பற்றிய ஆசைகள் இருக்கும் இல்லையா? அவனை சில வருடங்களுக்கு உன் ஆசாபாசங்களை ஒதுக்கி வை என்று சொல்ல அவருக்கு என்ன உரிமை இருக்கிறது. அதை புரிந்தவராக,

“இப்போ எங்க சூழ்நிலை சரியில்லை அதான் இப்படி ஒரு எண்ணம் என்னோட மனசுக்கு தோனுச்சு.. எங்க கஷ்டத்தை யோசிச்சு தம்பியை பத்தி நினைக்காம விட்டுட்டேன்.. நான் பேசினதை பெருசா எடுத்துக்க வேண்டாம்.. இந்த பிரச்சனைக்கு இன்னொரு வழியும் இருக்கு, பேசாம நானும் யாதவியும் எங்கேயாவது கண் காணாத இடத்துக்கு போயிட்டா, மேற்கொண்டு அந்த மனுஷனால என்ன செய்ய முடியும்?” என்றவர், தன் நிலையை நினைத்து திரும்ப கண்ணீர் வடித்தார்.

அதைப்பார்த்த அர்ச்சனாவிற்கு, “அப்பா அழுதே சாதிச்சுக்கிறாங்க..” என்று தான் நினைக்க தோன்றியது.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.