“என்னவாயிற்று இத்தனை அதிகாலையில் உனக்கு அங்கு என்ன வேலை?”
“ஷாகின் ஷா தங்களுக்கு ஆபத்து என..”
“என்ன கூறுகிறாய் எனக்கு ஆபத்தா யார்?? என்ன நடந்தது கங்காவை எங்கே?”,என்றவன் சரியாய் கணித்துக் கேட்டிருந்தான்.
“தங்களை சிறைசெய்து விட்டதாய் செய்தி வந்தது அதனால் அரசியார் வீரர்கள் இருவரோடு எல்லைக்குச் சென்றிருக்கிறார்.ஆனால் தாங்கள் இங்கு..”,அவளுக்குமே பயம் தொற்றிக் கொண்டது.அதை விட நஸீமை நினைத்துதான் உடல் அதிர்ந்தது.
“என்ன பைத்தியகாரத்தனம் இது?யாருக்கும் சிந்திக்கும் திறனற்றுப் போனதா?செய்தி மெய்யா இல்லையா என்பதுகூடத் தெரியாமல் எந்த நம்பிக்கையில் சென்றிருக்கிறாள்.!!!”
“நாங்கள் அனைவரும் எத்தனையோ கூறியும் தங்களின் உயிர் விடயத்தில் விஷப் பரீட்சை எடுக்கத் தயாராயில்லை என்று கூறிச் சென்றுவிட்டார்.அதுமட்டுமல்லாது ஏற்கவே தங்களை கொல்வதற்கு முயற்சி எடுக்கப்பட்டதால் இதை சாதாரணமாக எடுத்துக் கொள்ள முடியாது என்று கூறிவிட்டார்.”
மனம் சோர்ந்து போனது நஸீமிற்கு.எதற்காக இத்துனை போராட்டங்கள்.இவள் எதற்காக என்னைப் பற்றி இத்துனை சிந்திக்கிறாள்.சிறிதேனும் பயம் என்பதே இல்லாமல் இருக்கிறாளே!செய்தியை அனுப்பியது யாராக இருக்கும் இப்போது எங்கு சென்று யாரைக் கேட்பது!!அல்லாஹ் தாங்கள் தான் அவளை காப்பாற்ற வேண்டும்.என்னிடம் சேர்த்து விடுங்கள் என்னவளை!
எனும் போதே வீரர்கள் இருவரையும் ஏற்றிக் கொண்டு குதிரைகள் மெதுவாய் உள் நுழைந்தன.ஒரு வீரன் மூர்ச்சையாகி இருக்க மற்றவனுக்கோ பலத்த காயங்கள் மேனியெங்கும் இரத்த தடங்களோடு இருந்தது.
நஸீமைக் கண்டவன் தள்ளாத நடையோடு சென்று அவன் முன் மண்டியிட்டிருந்தான்.
“எங்களை மன்னித்து விடுங்கள் உசூர்.அரசியை எங்களால்..”
அதற்குமேல் எதையும் கேட்கும் துணிவிருக்கவில்லை நஸீமிற்கு ,இருந்தும் அவளை காப்பாற்றுவதற்காக நடந்த அனைத்தையும் கேட்டு தெரிந்து கொள்ள வேண்டும்.
“இருவருக்கும் அருந்துவதற்கு நீர் கொண்டு வா ஆயிஷா,அப்படியே சிகிச்சைக்காக அரச மருத்துவரை அழைத்து வா”,என்றவன் நடந்ததை தனக்குள் கிரகித்துக் கொள்ள முயன்று கொண்டிருந்தான்.
“உசூர் தங்களை சிறைப்பிடித்து விட்தாய் அரசியாருக்கு செய்தி வந்திருக்கிறது.அதைத் தொடர்ந்து எங்கள் இருவரோடும் அவர் அங்கு விரைந்தார்.அங்கு சென்ற பின்புதான் இது யாருடைய சதி வேலையோ என்பதை உணர்ந்தோம்.அங்கிருந்து புறப்பட எத்தனித்த நேரம் பத்து பேர் கொண்ட முகமூடிக் கூட்டம் எங்களை முற்றுகையிட்டு சண்டையிட ஆரம்பித்தது.
நாங்கள் அவர்களை தாக்குவதில் கவனமாய் இருந்த நேரத்தில்..”
“நேரத்தில்????!”
“நேரத்தில் அவர்களில் இருவர் மகாராணியை புரவியில் ஏற்றிச் சென்றிருக்கின்றனர்.இதையறியாத நாங்கள் மற்வர்களுடன் யுத்தம் செய்த போது அவர்களின் எண்ணிக்கை குறைவதாய் தோன்றவே அப்போது தான் அரசியார் இல்லாததை உணர்ந்தோம்.அதற்குள் நிலைமை கைமீறி போய்விட்டது உசூர் எங்களை மன்னித்து விடுங்கள்.தாங்கள் என்ன தண்டனை கொடுத்தாலும் நிச்சயம் ஏற்றுக் கொள்கிறோம்.”
“தங்களை தண்டிப்தால் கங்கா கிடைத்து விடுவாள் எனில் அதை செய்வதில் நியாயம் இருக்கிறது.சரி போகட்டும் அவர்களின் அங்க அடையாளங்கள் வைத்து யார் என ஏதெனும் அறிந்து கொள்ள முடிந்ததா?”
“அவர்களின் கைகளில் ஒருவித முத்திரை பதிக்கப்பட்டிருந்தது உசூர்.அது மட்டுமன்றி நாங்கள் இருந்த இடத்திலிருந்து மேற்குப் புறமாய் அவர்கள் சென்றிருக்கின்றனர்.”
“இத்துனை நேரத்திற்கு அவர்களால் வெகுதூரம் சென்றிருக்க இயலாது..நான் இப்போதே படையை தயார் செய்கிறேன்.வீரர்களே தயாராகுங்கள்”,என்று குரல் கொடுத்தவாறே மனம் தாளா வேதனைகளை உள்ளடக்கிக் கொண்டு தன் கங்காவைத் தேடிச் சென்றான் இஷான் நஸீம்.
எதிரிகளின் மீதான அத்துனை வெறியையும் புரவியின் வேகத்தில் காட்டிக் கொண்டிருந்தான் நஸீம்.மனம் மொத்தமும் கங்கா கங்காவென ஓலமிட்டுக் கொண்டிருக்க விழிகள் அலைபாய முன்னேறிக் கொண்டிருந்தான்.
“ஏனடி எனக்காக இத்துனை அக்கறை கொள்கிறாய்!உனைப் பற்றிய கவலையேயின்றி ஒவ்வொரு முறையும் எனக்காக உனைப் பணயம் வைக்கத் துணிகிறாயே!என்னிடத்தில் யார் இருப்பினும் உன் இரக்க சுபாவம் இப்படிதான் செய்யும்படி பணிக்குமோ என்னவோ!!ஆனால் என்னிடத்தில் வேறு எவரும் இல்லை,நான் இந்த நஸீம் மட்டுமே இருக்கிறேன்.
என் உயிர் கொடுத்தேனும் உனைக் காப்பேன்.கலங்காமல் தைரியமாய் இரு இதோ உனை மீட்டெடுக்க வந்து கொண்டே இருக்கிறேன்.என் கைக்கெட்டும் தூரத்தில் தான் நீ இருக்கிறாய் என்று என் உள்மனம் அழுந்தக் கூறுகிறது.எந்நிலையிலும் என் மீதான நம்பிக்கையை மட்டும் விட்டுவிடாதே!!”