(Reading time: 10 - 20 minutes)

ஆரம்ப காலத்தில் எனை சிறைப்பிடித்த எதிரிநாட்டு அரசராய் உங்கள் மேல் கட்டுக்கடங்காத கோபம் இருந்தது.ஆனால் அதை எந்த சூழலிலும் வெளிக்காட்ட விரும்பவில்லை நான்.ஏனெனில் இதுவே விதி எனும்போது தங்களைப் பழித்துப் பேசி ஒன்றும் ஆகப் போவதில்லை என்பது என் எண்ணம்.

அதை தொடர்ந்து பல சூழலில் உங்களின் சில நற்குணங்களை கண்டு வியந்திருக்கிறேன்.அதில் எப்போதுமே முதன்மையானது என் பாதுகாப்பு.எந்த சூழலிலும் எனை நான் காத்துக் கொள்ள வேண்டிய அவசியத்தை எனக்கு அளிக்கவில்லை.இன்னும் கூற வேண்டுமானால் என் கழுத்திலிருந்த அந்த விஷம் எங்களிடத்தில் இருந்தே நான் கொண்டு வந்தது.

எத்துனை பெரிய துணிவு கொண்ட பெண்ணாய் உங்களை எதிர்த்து போர் புரிய வந்தாலும் அதை தாண்டிய பிரச்சனை நேர்ந்தால் சற்றும் யோசியாது என்னை மாய்த்துக் கொள்ள வேண்டும் என்பதற்காகவே அதை எடுத்து வந்தது.

அதன் பின் தந்தையின் பிரிவைப் பற்றி நான் தங்களிடம் கூறியபோது என் கடமையை செய்வதற்கு எவ்வித எதிர்ப்பும் காட்டாமல் இருந்தபோது தான் முதன்முறையாய் என் மனதில் இடம் பிடித்திருக்க வேண்டும்.

அத்தனை துக்கத்திலும் என்னால் இதை நினைத்து வியக்காமல் இருக்க முடியவில்லை.அதன் பிறகு அடியோடு உங்களை வெறுத்த நொடி நம் திருமணம்.ரத்தன் அண்ணாவை குறி வைத்து என்னிடம் விருப்பம் கூட கேட்காது இந்த திருமணத்தை ஏற்பாடு செய்தது.

அப்போதும் ரத்தன் அண்ணாவிற்காக இதற்கு சம்மதித்தேன் என்று எண்ணியிருந்தேன்.ஆனால் தங்களிடத்தில் வேறு ஒருவர் இருந்திருந்தால் நிச்சயம் இதற்கு அடிபணிந்திருக்க மாட்டேன் என்பது தாமதமாகவே புரிந்தது.

எப்போதுமே தங்கள் மீது ஒரு தனிப்பட்ட அன்பும் மரியாதையும் எனக்கு இருந்திருக்கிறது தான் ஆனால் அவ்வப்போது ஏற்படும் கசப்பான நிகழ்வுகள் அந்த அன்பை உணர விடாமல் செய்துவிட்டன என்றே தோன்றியது.

அனைத்திற்கும் மேலாக அன்று விஷத்தை உண்டநொடி என் ஈசனிடம் மனதளவில் மன்றாடினேன் ஒருமுறையாவது தங்களைப் பார்க்க வேண்டும் இல்லை உங்களோடு என் வாழ்வின் பல திங்கள்களை மகிழ்ச்சியாய் கழிக்க வேண்டும்.

அதற்காகவே நான் உயிர் வாழ வேண்டும் எப்படியாவது எனை என்னவரோடு சேர்த்துவிடு ஈசனே என்று மனமார வேண்டினேன்”,எனும்போதே கண்கள் பனித்திருந்தது சிவகங்காவதிக்கு.

ஆதரவாய் அவள் கரம் பற்றியவன் நின்று அவள்புறம் திரும்பினான்,”போதும் கங்கா நிறையவே கண்ணீர் வடித்துவிட்டாய்.அத்தனைக்கும் காரணம் நான் ஒருவனே.நான் கொடுத்த இன்னல்கள் அனைத்திற்கும் காரணம் காதல் என்று கூறினால் அது நம் காதலுக்கு நான் கொடுக்கும் அவமரியாதை.

சத்தியம் உரைக்கிறேன் கங்கா உனக்கான என் காதலை உணராமலே பாதிகாலம் இருந்திருக்கிறேன்.அதையும் மீறி தாதி அவர்கள் உண்மையை எனக்கு புரிய வைக்க முயன்றபோது மதத்தை காரணம்காட்டி மனதை அடக்கினேன்.”

என்ன பாட்டி அவர்களுக்கு தெரியுமா!!!அப்படியென்றால் தாங்கள் வெகு காலமாகவே என் மீது??!”

ஆம் உன்னைக் கண்ட முதல் சணத்திலிருந்து நீ எனக்குள் வாழ்ந்து கொண்டிருக்கிறாய் கங்கா.உன் துணிவு திமிர் நேர் பார்வை இப்படி பல காரணங்கள் உண்டு.ஒரு மனம் அதை ஆராதிக்க விழையும் நேரம் அரசனான ஒரு மனம் அதை அடக்கி ஆள நினைத்தது.

அந்த இயலாமை கோபமாய் மாறி அதை தண்டனை என்ற பெயரில் உன் மீது திணித்திருக்கிறேன்.பின் உன் தந்தையைப் பற்றிய செய்தி கூறிய அன்று தான் மிகவும் மனம் சோர்ந்து போனது.

தாதியிடம் தஞ்சமடைந்தேன் கிட்டத்தட்ட என் சிறுவயதில் அவர் மடியில் இளைப்பாறியது அதன் பின் அன்று தான் அப்படி நடந்து கொண்டேன்.அப்போதே தாதி உன்னை நிக்காஹ் செய்து கொள்ளுமாறு கூறினார்.

ஆனால் நான் தான் மதம் அது இதுவென்று கூறி பேச்சுக்கு முற்றுப் புள்ளி வைத்துவிட்டேன்.ஆனால் ரத்தன் வந்து உனை அழைத்துச் சென்றது நான் எதிர்பார்த்தே இருக்காத ஒன்று.நீ இங்கிருந்து சென்ற நொடி என் மனம் உன் பிரிவை வெகுவாய் உணர்ந்தது.

தாதியிடம் கூறிவிட்டு உனைக் காண கிளம்பிவிட்டேன்.ஆனாலும் உனை நேரில் கண்டபோது எனை நிக்காஹ் செய்ய விருப்பமா என என்னால் கேட்க முடியவில்லை.ஏதோ ஒரு தயக்கம்.

பொதுவாய் யாரிடமும் என் தேவையையோ விருப்பத்தையோ வெளிப்படுத்தி பழக்கமில்லை.சிறு வயதிலேயே பெரிய பொறுப்புகளை எதிர் கொள்ள வேண்டியிருந்ததும் ஒரு காரணமாக இருக்கலாம்.

ரத்தனிடமும் இதைப் பற்றி செய்தி போல் தான் கூறினேன்.அவன் அதிர்ந்தான் அதன் பின்னே என் நிலையை தெரிவித்தேன்.நீயில்லாத ஒரு வாழ்வு நிச்சயம் கிடையாது என்றே கூறினேன்.

ஆனாலும் இந்த நிக்காஹ் நடப்பதன் மூலம் உனக்கு ஆபத்துகள் அதிரிக்குமோ என்ற அச்சமிருந்தது.அதனாலேயே இதை வேண்டாத விருப்பமற்ற நிக்காஹ்ஹாகவே இருக்கட்டும் என்று முடிவெடுத்து அப்படியே செயல்படுத்தவும் செய்தேன்.

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.