(Reading time: 14 - 27 minutes)

"எனக்கென்ன தெரியும்? உங்களைத் தான் மீ கேட்டாங்க!" தரதரவென இழுத்து வந்தான் அவன்.

"வரேன்டா! வரேன்!" கத்திக் கொண்டே வந்தவர் பேச்சிழந்து நின்றார்.

"நான் போய் குடிக்க எதாவது கொண்டு வரேன்." தாயின் காதில் கிசுகிசுத்துவிட்டு சமையலறைக்குள் சென்றான் உடையான்.

"உன் அனுமதி இல்லாம உன்னைப் பார்க்க வந்தது தப்புத்தான்! என்னை அதற்காக மன்னிப்பியா தர்மா?" என்றதும் நொறுங்கிப் போனார் தர்மா.

"அத்தை!" கண்ணீரோடு சென்று அவர் பாதம் வணங்கினார் அவர்.

"எழுந்திரிம்மா! உனக்கு நாங்க பண்ணதுக்கு நான் தான் உன் காலில்..." அவர் பேசி முடிக்கும் முன்பே அவர் வாயைப் பொத்தினார் தர்மா.

"வேணாம்! நீங்களும்என்னை வேதனைப்படுத்தாதீங்க!"

"நீ...இங்கே வந்து மூணு மாசம் ஆக போகுது! என்னைக் கூட பார்க்க வரணும்னு தோணலை தானே உனக்கு?"

"நடந்தது எல்லாம் தான் உங்களுக்குத் தெரியுமே! என் மகனுக்கான அதிகாரம் கிடைக்கிற வரைக்கும் நான் அந்த வீட்டு படியை மிதிக்க மாட்டேன்." மனம் வலித்தது அந்த மூத்தோருக்கு!!

"நீ போன அப்பறம் அந்த வீடே கலையிழந்துப் போயிடுச்சு! எவ்வளவு கஷ்டப்பட்டு இருப்ப! இந்தப் பாவத்தை எல்லாம் எங்கே கழுவ போறோமோ!" கண்கலங்கியது.

"அம்மா!" அவர் பேசி முடிக்கவும், சரியாக உள்ளே நுழைந்தான் ஆதித்யா. எதிர்நோக்காத பாட்டியாரின் வருகை அவனை வியப்படைய வைத்தது.

"இது...?"

"ஆதி!" பதிலுரைத்தார் தர்மா.

"அப்போ அவன்?"

"உடையான்!" முகம் முழுக்க பூரிப்போடு தனது பெயரனைப் பார்த்தார் அவர்.

"வா கண்ணா!" அவன் சிலையென வாயிலில் நின்றான்.

"வா ஆதி!" தாயாரின் அனுமதி கிட்டிவிட தயக்கத்துடன் உள்ளே நுழைந்தான் அவன்.

"எப்படி வளர்ந்துட்ட? உன்னை சீராட்டி வளர்க்கிற பாக்கியம் இல்லாதவளா போயிட்டேனே!"

"உள்ளே இருக்கிறவனும் உங்க பெயரன் தான்!" எங்கோ வெறித்தப்படி கூறினான் அவன். அவன் குத்திக் காட்டுகிறான் என்பதனை அறியாதவராய்,

"ஆமாம்! அவனும் என் பெயரன் தான்! எவ்வளவு துருதுருன்னு வந்துட்டான். அவன் அம்மாவுடைய பெயர் சொன்னா கூட விரோதியை பார்த்துப் போல தானே பார்க்கிறான்!"

"இதோ வந்துட்டேன்! வந்துட்டேன்!" என்று கூவியப்படியே கையில் பழரசத்தை தட்டில் வைத்து கொண்டு வந்தான் உடையான்.

"என்ன எல்லாரும் பனிஷ்மண்ட் கொடுத்தா மாதிரி நிற்கிறாங்க?யாராவது கூப்பிட்டிங்களா?" என்றான் சிறுப்பிள்ளையாய்!!

"அண்ணா! நீங்க எப்போ வந்தீங்க? உங்களுக்கு ஜூஸ் கொண்டு வரலையே! இருங்க கொண்டு வரேன்!"

"அதெல்லாம் வேணாம்! நானே வரேன்!" தரதரவென பிடித்து இழுத்தான் ஆதி.

"இருண்ணா!இருண்ணா! அம்மாக்கிட்ட சேலஞ்ச் பண்ணிட்டு வரேன்!" என்றுத் தொண்டையை செறுமியவன்,

"நான் சமைக்க மாட்டேன்னு சொன்னீங்கல்ல? இதை குடித்துப் பார்த்துவிட்டு என் கைப்பக்குவம் எப்படின்னு சொல்லுங்க!" என்றதும் சிரிப்பை தர்மாவால் அடக்க இயலவில்லை.

"சரி போதும் வா!" என்று அவனை இழுத்துச் சென்றான் ஆதித்யா.

"ஒருத்தன் அமைதியானவன், இன்னொருத்தன் அட்டகாசம் பண்றவனா?"புன்னகைத்தார் அகிலாண்டேஷ்வரி.

"நீ இராகவனை இன்னும் மன்னிக்கலைன்னு எனக்குத் தெரியும்! உன்னால உடையானை ஏற்கும் முடியும்னா, இராகவனை மன்னிக்க முடியாதா தர்மா?" அந்தத் தாயின் விழிகளில் ஆயிரமாயிரம் கவலை ரேகைகள்!

"அவன் நீ இல்லாம தினந்தினம் செத்துக்கிட்டு இருக்கான்மா! அவனுடைய குற்றவுணர்வு, நீ அவனைவிட்டு போனது எல்லாம் ஒன்று சேர்ந்து எல்லாரும் அவனை அவமானப்படுத்துறாங்கம்மா!" அவர் கூறுவதை கேட்க கேட்க மனம் துடித்தது அவருக்கு!!

"அவனுக்கு நாங்க தான் உன்னை கல்யாணம் பண்ணி வைத்தோம். ஆனா, அவனுக்கு உன் மேலே தனிப்பட்ட அன்பு இருந்ததுன்னு உனக்கே தெரியும். யார் பேச்சுக்கும் கட்டுப்படாதவன் நீ சொன்னா கேட்பான்! நீ இல்லாம அவன் ரொம்ப கஷ்டப்படுறான் தர்மா! கோபத்தை விட்டுட்டு வந்துடும்மா!" கரம் குவித்து வேண்டினார் அவர்.

"என்னை சங்கடத்துல தவிக்க வைக்காதீங்க! நாங்க பிரிந்தது உடல் அளவுல மட்டும் தான்! மனதளவுல எங்களைப் பிரிக்கிற சக்தி யாருக்கும் இல்லை. அவர் மேலே கோபம் எதுவும் இல்லை அத்தை! ஆனா, தன்னுடைய குழந்தையை அவர் ஏற்றுக் கொள்ள மறுக்கிறது தான் என்னால தாங்கிக்க முடியலை! உடையானுக்கு நான் தான் உலகம்! இந்த நிமிஷம் வரைக்கும் அவனுக்குத் தான் யாருன்னு தெரியாது!" என்றதும் தூக்கிவாரிப் போட்டது அவருக்கு!

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.