(Reading time: 14 - 28 minutes)

ஆனால் வடபழனியில் எங்கு சென்று சாத்விக்கின் வீட்டை கண்டுபிடிப்பது, அதனால் ஒரு ஆட்டோ பிடித்து செல்ல முடிவு செய்து ஆட்டோ ஓட்டுனரிடம் சாத்விக் வீட்டின் முகவரியை காண்பித்தாள். அவருக்கு நல்ல தெரிந்த இடம் என்பதால் அவளை தன் ஆட்டோவில் அழைத்துச் சென்றார்.

அவருக்கு அந்த இடம் மட்டுமல்ல, அது சாத்விக்கின் வீடு மட்டுமல்ல, தயாரிப்பாளர் வசந்தன் வீடு என்பதும் தெரியும், 15 வருடமாக அவர் ஆட்டோ தான் ஓட்டுகிறார். இங்கு பல திரைத் துறையை சார்ந்தவர்கள் வீடு இருக்கிறது.  எத்தனை பேர் வாய்ப்பு தேடி இந்த பகுதிக்கு வந்திருக்கிறார்கள். அதில்லாமல் நடிகர்களை நேரில் காண வேண்டுமென்று ரசிகர்களும் அவ்வப்போது வருவார்கள். அவர் அனுபவத்தில் இதுபோல் அதிகம் பார்த்திருப்பதால்,

அவளை சரியாக சாத்விக் வீட்டு வாசலில் இறக்கிவிட்டு, "இங்கப்பாரும்மா.. நல்லா படிச்சோமா, வேலைக்கு போனோமா, வீட்ல பார்க்கிற மாப்பிள்ளையை கல்யாணம் கட்டிக்கிட்டோமான்னு இருக்கணும்.. அதைவிட்டுட்டு இந்த சினிமா, சினிமா சம்பந்தப்பட்டவங்களை நம்பக் கூடாதும்மா.. அதெல்லாம் ஒரு மாயை.. வெளிய இருந்து பார்க்க பிரம்மிப்பா இருக்கும், உள்ள போனா தான் அதுல இருக்க பிரச்சனை தெரிய வரும்.. பிரச்சனைல சிக்கிட்டா அப்புறம் வெளிய வரவே முடியாதும்மா.." என்று அறிவுரை கூறினார்.

அவள் திரைப்படத்தில் நடிக்கும் ஆசையில் வந்திருக்கிறாளா? இல்லை சாத்விக்கின் ரசிகையாக அவனை காண எண்ணி வீட்டுக்கு தெரியாமல் வந்திருக்கிறாளா? என்பது தெரியாமல் அந்த ஆட்டோ ஓட்டுனர் பொதுவாக சொல்லிவிட்டு கிளம்பிவிட்டார். அதில் அவளை இன்னும் பயம் பிடித்துக் கொள்ள தவிப்போடு நின்றிருந்தவள், சாத்விக் தன்னை உள்ளே வரச் சொல்லி அழைத்தது தெரிந்ததும்,

"என்னோட சாத்விக் என்னை ஏமாத்தமாட்டான்.." என்ற கர்வத்தோடு சென்றாள்.

காவலாளி இண்டர்கம் மூலம் தகவல் சொல்ல, அதை கேட்டு சாத்விக் முகம் மகிழ்ந்து, பின் யோசனைக்குள்ளாகி, பின் அந்த நபரை வரச் சொன்னவரைக்கும் அனைத்தையும் வசந்தன் கவனித்துக் கொண்டு தான் இருந்தார். அதை வைத்து,

"யாரு சாத்விக் வந்திருப்பது.." என்றுக் கேட்டார்.

"ப்ரண்ட் ப்பா.." என்று சர்வ சாதாரணமாக கூறினான்.

ஆனால் அப்படி அவருக்கு தோன்றவில்லை, வேறெதோ என்று தான் நினைக்க தோன்றியது. அதற்கேற்றார் போல், "சாத்விக்.." என்று கத்தியப்படி அங்கு வந்த யாதவி கண்களில் கண்ணீர்,

அதுமட்டுமில்லாமல், "ஏன் சாத்விக் என்கிட்ட சொல்லாம வந்த.. உன்னை நான் எவ்வளவு தேடினேன் தெரியுமா? உன்னை ரொம்பவே எதிர்பார்த்து காத்துக்கிட்டு இருந்தேன். ஆனா நீ சொல்லாம கொல்லாம பாண்டிச்சேரியிலிருந்து கிளம்பி வந்துட்ட..

நீ கொடுத்த கார்ட் கூட சக்தி அப்போ என்கிட்ட காட்டவே இல்லை தெரியுமா? அதை பார்க்கததால நீ திரும்ப வருவியா வரமாட்டீயான்னு தெரியாம எனக்கு என்னல்லாம் நடந்துச்சு தெரியுமா? நீயேன் என்கிட்ட கொடுக்காம அந்த கார்டை சக்திக்கிட்ட  கொடுத்த சாத்விக்.. அம்மா பேசினதுக்கு பயந்துட்டீயா? ஆனா இனி பயம் வேண்டாம், நான் நீ தான் வேண்டும்னு சொல்லிட்டு வந்துட்டேன்.. நாம கல்யாணம் செஞ்சுக்கலாம்.." என்ற அவள் உணர்ச்சிகரமான பேச்சில் வசந்தன் அதிர்ந்துவிட்டார்.

யாதவியை எங்கோ பார்த்திருக்கோமே என்று குழம்பியவர், பின் அவள் தன்னிடம் வாய்ப்பு தேடி வந்தவள், அவள் தந்தை பன்னீர் என்பதையெல்லாம் ஞாபகத்தில் கொண்டு வந்தார். ஆரம்பத்திலேயே வசதி படைத்தவர் தான், ஆனால் புகழ் தன் மகனால் தான் அவருக்கு கிடைத்திருக்கிறது. நடிகன் சாத்விக்கின் தந்தை என்பது மட்டுமில்லாமல், அவனது திரைப்படத்தை தயாரித்து தயாரிப்பாளர் அந்தஸ்தும் கிடைத்திருக்கிறது. அதை எல்லாம் கெடுக்கும் விதமாக யாதவியின் பேச்சு இருக்கவும்,

"சாத்விக் என்னடா இதெல்லாம்.." என்று கோபமாக கத்தினார்.

யாதவி சொன்ன விஷயம் முதலில் சாத்விக்கிற்கே அதிர்ச்சியை தான் கொடுத்தது. அவளை உயிருக்குயிராக காதலிக்கிறான் தான், ஆனால் அதற்காக இப்போதே அவளை திருமணம் செய்துக் கொள்ள முடியுமா? அவள் இப்போது தான் கல்லூரி வாழ்க்கையை ஆரம்பித்திருக்கும் சிறியப் பெண், அவனுக்கோ 21 வயது முழுமையாக முடிந்து இருபத்திரண்டு நடந்துக் கொண்டிருக்கிறது. அப்படியிருக்க இது இருவருக்கும் திருமணம் செய்துக் கொள்ளும் வயதா? என்று அவன் அதிர்ச்சியில் உறைந்திருக்க,

"சாத்விக் ஒரு இக்கட்டான சூழ்நிலையில்  நீதான் வேணும்னு நான் வீட்டை விட்டு வந்துட்டேன்.. நாம கல்யாணம் செஞ்சுக்கலாம் சாத்விக்.." என்றவளுக்கு, விபாகரனுடன் திருமணமான விஷயத்தை வெளிப்படையாக் கூற முடியவில்லை.

அவளின் தவிப்பு புரிந்தாலும் இந்நேரம் திருமணம் என்பது ஒரு தீர்வா என்ற குழப்பத்தில் சாத்விக் அமைதியாக இருக்க, "சாத்விக் கொஞ்சம் இங்க வா.." என்று கட்டாயமாக வசந்தன் அவனை அறைக்குள் அழைத்துச் செல்ல, யாதவி செய்வதறியாது திகைத்து நின்றாள்.

உள்ளே அழைத்துச் சென்றவனை நிறுத்தி, "என்ன நடக்குது சாத்விக் இங்க.. அந்த பொண்ணை ப்ரண்ட்னு சொன்ன, ஆனா அவ கல்யாணம் செஞ்சுக்கலாமான்னு கேட்கிறா.. நீயும் அதுக்கு அமைதியா இருக்க என்ன இதெல்லாம்.." என்றுக் கேட்க,

"நான் யாதவியை காதலிக்கிறேன் ப்பா.. அவளை தான் கல்யாணம் செய்துக்க போறேன்.." என்று தைரியமாகவே கூறினான்.

தன் அனைத்து விஷயங்களிலும் தந்தையின் முடிவுக்கே விட்டவன், தன் திருமண விஷயத்தில் மட்டும் தன் விருப்பம் தான் என்பதை முடிவு செய்துக் கொண்டு அப்படி பதில் கூறினான்.

"அப்போ இப்பவே நீ அந்த பொண்ணை கல்யாணம் செய்துக்க போறீயா?" என்று அவர் கேட்க, அவனுக்கே அதற்கு பதில் தெரியாமல் முதலில் அமைதி காத்தவன்,

"யாதவிக்கு ஏதோ சிட்டுவேஷன்னு இப்படி உடனே கல்யாணம் செய்துக்கலாம்னு சொல்றா.. அவளுக்கு புரிய வச்சா புரிஞ்சுப்பா.. ஆனா எனக்கு கல்யாணம்னு ஒன்னு நடந்தா அது யாதவி கூட தான்.." என்று தீர்மானமாக பதில் கூறினான்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.