(Reading time: 14 - 28 minutes)

தொடர்கதை - மையலில் மனம் சாய்ந்த வேளை.. - 29 - சித்ரா. வெ

Maiyalil manam saaintha velai 

யாதவி தன்னை காண வந்திருக்கிறாள் என்ற செய்தியை கேட்டு சாத்விக்கின் மனம் மகிழ்ச்சியில் துள்ளி குதித்திருந்தாலும், அடுத்து அவள் இங்கு எப்படி வந்தாள்? என்ற கேள்வி அவன் மனதில் எழாமல் இல்லை.

அவளை காண வேண்டுமென்று அவளை பிரிந்து வந்ததிலிருந்து அவன் கண்கள் தவத்தை மேற்கொண்டிருந்தாலும், இப்படி எதிர்பார்க்காத தருணத்தில் அவள் தன்னை காண வந்திருக்கிறாள் என்றால், ஏதோ பிரச்சனை என்றே மனம் சொல்ல,

"வரச் சொல்லுங்க செக்யூரிட்டி.." என்று காவலாளியிடம் கூறியவனின் மனம் சிந்தனையில் ஆழ்ந்தது. தன் மனம் காதல் கொண்டிருந்தாலும், அதனால் அவளுக்கு தொல்லை நேரக் கூடாது, படிப்பு பாதிக்கக் கூடாது என்பதால் தான் அப்போதே பாண்டிச்சேரியிலிருந்து கிளம்பி வந்தான். கிளம்புவதற்கு முன் ஒருமுறை அவளை பார்த்துவிட்டு வர வேண்டுமென்று தான் நினைத்தான்.

ஆனால் அவளை பார்க்க முடியவில்லை. அதுவும் நல்லதிற்கு தான், அவள் மனதில் எந்த சலனத்தையும் ஏற்படுத்திடக் கூடாது என்று நினைத்திருந்தான். ஆனால் அமைதியாக வரவும் முடியவில்லை. அவளை விட்டு இப்போது விலகி வந்தாலும், என்றுமே அவளை நினைவில் வைத்திருப்பான். அவளை காண வருவான் என்பதை அவளுக்கு உணர்த்திட வேண்டுமென்று தான் வாழ்த்து அட்டையில் மறைமுகமாக காதலை தெரியப்படுத்தும் விதமாக, அதே சமயம் நட்பை யாசிப்பது போல் எழுதி அவளுக்கு சேரும்படி அவள் தோழியிடம் கொடுத்து விட்டு வந்தான். அப்படியிருக்க இப்போது யாதவி எதற்காக இங்கு வந்திருப்பாள் என்று புரியாமல் தவித்துக் கொண்டிருந்தான்.

அதே தவிப்போடு சாத்விக்கை பார்த்து விட வேண்டுமே என்ற நிலையில் அவன் வீட்டு வாசலில் யாதவி நின்றிருக்க,"உன்னை உள்ள வரச் சொன்னாங்கம்மா.." என்ற காவலாளியின் பதிலில் உள்ளம் பூரித்துப் போனாள்.

கிளம்பும் போது தைரியமாக கிளம்பிவிட்டால் தான், ஆனால் இங்கு வந்து சேர்வதற்குள் தான் பயத்தில் பரிதவித்து விட்டாள்.

திருமண ஏற்பாட்டை விபாகரன் பார்த்துக் கொண்டாலும் பெண்ணை அப்படியே அனுப்பிடக் கூடாதென்று ரத்னா தெரிந்தவர்களிடம் கடன் வாங்கி பன்னீருக்கு தெரியாமல் யாதவிக்கு தங்கத்தில் தோடு, மோதிரம், சங்கிலி எல்லாம் வாங்கிக் கொடுத்து கொஞ்சம் பணமும் கையில் கொடுத்து வைத்திருந்தார். அந்த பணத்தை தன் வீட்டில் தான் வைத்திருந்தாள்.

விபாகரன் வீட்டிலிருந்து கல்யாண கோலத்தில் கிளம்பியவள், நேராக தன் வீட்டிற்கு தான் சென்றாள். மதிய நேரம் என்பதால் தெருவில் ஆள் நடமாட்டம் இல்லாததால் அவள் அங்கு வந்ததை யாரும் கவனிக்க வாய்ப்பில்லை. ஆனால் வீட்டில் பன்னீர் இருக்க கூடாதே என்று பயந்தப்படியே செல்ல, அங்கு பன்னீரும் இல்லை.

புடவையை களைந்து ஒரு சுடிதாருக்கு மாறியவள், அம்மா வாங்கிக் கொடுத்த தோடு சங்கிலியெல்லாம் கழட்டி பீரோவில் வைத்தவள், அவர் கொடுத்த பணத்தோடு இரண்டு மூன்று நாட்களுக்கு தேவையான உடைகளையும் தன் பள்ளி சான்றிதழ்களையும் ஒரு பையில் எடுத்துப் போட்டுக் கொண்டு கிளம்பியவளுக்கு தான் செய்வது தப்பா? சரியா? என்ற குழப்பம் இருந்தாலும், தன் அன்னையின் முகம் கண்களில் வந்து போனாலும்,

"சாத்விக்கை விரும்பிட்டு விபாகரன் கூட வாழறது தான் தப்பு.. இப்போ அம்மா என்னை புரிந்துக் கொள்ளவில்லையென்றாலும், நான் சாத்விக்கோட சந்தோஷமா வாழறதை பார்க்கும் போது என்னை புரிஞ்சுப்பாங்க.." என்று மனதில் நினைத்துக் கொண்டு அங்கிருந்து யாரும் பார்க்காதப்படி கிளம்பியவள், பேருந்து நிலையம் சென்று சென்னை செல்லும் பாயிண்ட் பாயிண்ட் பேருந்தில் ஏறி அமர்ந்த பின்பு தான் நிம்மதி பெருமூச்சு விட்டாள்.

ஆனால் பயணச்சீட்டு எடுக்கும் போது மொட்டையாக சென்னைக்கு பயணச்சீட்டு வேண்டும்  என்று நடத்துனரிடம் கேட்கவும், "சென்னையில் எங்க இறங்கணும்.. திருவான்மியூரா, கிண்டியா, கோயம்பேடா.." என்று அவர் கேட்டதும் திருதிருவென விழித்தாள்.

அவள் விழிப்பதை பார்த்தவர், "சென்னையில் நீ எந்த இடத்துக்கு போகணும் ம்மா.." என்றுக் கேட்டார்.

தன் நண்பனிடம் கேட்டு எழுதி வைத்திருந்த முகவரியை எடுத்து பார்த்து, "வடபழனி ண்ணா.." என்றாள்.

"அப்போ கோயம்பேடுல இறங்கிக்கோ ம்மா.." என்றவர், அதற்கான பயணச்சீட்டு கொடுக்கவும் வாங்கிக் கொண்டு அமைதியாக வேடிக்கை பார்த்தப்படி வந்தாலும், மனம் முழுக்க அச்சம் சூழ்ந்துக் கொண்டது.

இதில் சென்னை வந்து சேர்ந்ததும், அவளிடம் நடத்துனர் கேட்ட ஒவ்வொரு இடத்திலும் பயணிகள் இறங்கி, கோயம்பேடை நெருங்கிய போது சில பயணிகள் மட்டும் இருக்கவே இன்னுமே பயந்துப் போனாள்.

தன் அலட்சியத்தாலும், திமிர் பேச்சாலும் மற்றவர் பார்வைக்கு அவள் தைரியமானவள் போல் தெரிந்தாலும், ரத்னா பொத்தி பொத்தி வளர்த்ததால் இயல்பிலேயே எதையும் துடுக்காக செய்துவிட்டு பின் அதன் விளைவு என்னவாகுமோ என்று மனதால் பயந்து நடுங்குபவள் தான் அவள், அப்படி இருப்பவள் இப்போது இப்படி ஒரு பெரிய காரியத்தை செய்தபின் எப்படி இருப்பாளாம்?

எப்படியோ பேருந்து கோயம்பேடு பேருந்து நிலையத்தை அடைந்ததும் அரக்க பரக்க இறங்க முயற்சிக்க, அவள் உடல்மொழிகளை அவ்வப்போது நோட்டம்விட்ட நடத்துனர் அவள் சென்னைக்கு புதிது என்பதை அறிந்துக் கொண்டார். அதனால் எங்கு சென்று வடபழனி செல்லும் பேருந்தில் ஏற வேண்டும், பேருந்து எண் என்ன? என்று அனைத்தையும் கூறினார். அவருக்கு நன்றி சொல்லி அவர் சொன்னப்படியே பேருந்தில் ஏறி வடபழனி வந்து சேர்ந்தாள்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.