(Reading time: 14 - 28 minutes)

அவனது அந்த உறுதி வசந்தனுக்கு பிடித்தமில்லாமல் இருந்தாலும் இப்போது எதிர்மறையாக அவனிடம் எது பேசினாலும் அவன் முடிவில் அவன் உறுதியாக நிற்க கூடும் என்பதை புரிந்தவர், அவன் போக்கில் சென்று தான் இந்த பிரச்சனையை தீர்க்க வேண்டுமென்று மனதில் முடிவெடுத்தவர்,

"அப்போ அதுவரைக்கும் இந்த பொண்ணை உன்னோட வச்சிருப்பியா? அந்த பொண்ணு வீட்டை விட்டு வந்திருக்கு சாத்விக்.. அவளை தேடி அவங்க,அப்பா வந்தா என்ன நடக்கும் தெரியுமா? நீ ஒரு நடிகன் சாத்விக், இந்த விஷயம் மீடியாக்கு தெரிஞ்சா கண்டப்படி எழுதிடுவாங்க.. அந்த ஆளே மீடியாக்கு போயிடுவான்..

உனக்கு இந்த தொழில் பிடிச்சிருக்கோ இல்லையோ அதை நீ ஏத்துக்கிட்ட, அதை நீ நிலை நிறுத்திக்க வேண்டாமா? இந்த சமயத்தில் மீடியா வாய்க்கு நீ அவலா மாறணுமா? இதனால் உன்னோட எதிர்காலம் பாதிக்காதா?

அதுமட்டுமில்ல மீடியாவில் உன்னை மட்டுமில்ல இந்த பொண்ணையும் சேர்த்து எழுதுவாங்க.. பார்க்க சின்ன பொண்ணு மாதிரி தெரியுது.. அவளை பத்தி மீடியாவில் வந்தா அவ எதிர்காலம் என்னாகும்? என்னத்தான் நீயே அவளை கல்யாணம் செஞ்சுக்கிட்டாலும், அவங்க குடும்பத்து ஆளுங்க தன்னோட பொண்ணை பத்தி செய்தி வந்தா என்னாவாங்க.. அவங்க மானம் மரியாதை போகறது இல்லாம, நம்ம மானத்தையும் வாங்கிடுவாங்க..  அது நல்லதா? சொல்லு சாத்விக்.." என்று அவனை குழப்பி விட,

உண்மையில் அவர் சொல்வதெல்லாம் சாத்விக்கிற்கு நியாயமாக பட, "அப்போ இப்போ என்ன செய்றது ப்பா.." என்று அவன் குழப்பத்தோடு கேட்க,

இங்கப் பாரு அந்த பொண்ணு படிப்பை வேற விட்டுட்டு வந்திருக்கு.. உங்க கல்யாணம் நடக்கிற வரை அவளோட வாழ்க்கை படிப்பில்லாம சூன்யமாகணுமா? ப்ர்ஸ் அவளைப்பத்தி கிழிகிழின்னு கிழிச்சு அவ மானம் போகணுமா?

இங்கப்பாரு உங்க ரெண்டுப்பேருக்கும் இது கல்யாண வயசு இல்ல.. கொஞ்ச நாளா இருந்தா பரவாயில்லை.. ஆனா எப்படியோ ஒரு 3 வருஷமாவது நீங்க காத்திருக்கணும், அதுவரை அந்த பொண்ணை இங்க வச்சிருக்க கூடாது.. அதனால் இப்போதைக்கு அந்த பொண்ணை நீ கல்யாணம் செய்துக்கிற எண்ணத்தில் இல்லைன்னு சொல்லு, அப்போ தான் உன்னை மறந்திட்டு அந்த பொண்ணு படிப்பில் கவனத்தை செலுத்தும், அதைவிட்டுட்டு எனக்காக காத்திரு, நாம கொஞ்ச வருஷம் கழிச்சு கல்யாணம் செய்துக்கலாம்னு சொன்னா அது சரி வராது. அப்பா உங்க நல்லதிற்கு தான் சொல்றேன் சாத்விக்.." என்று தனது பேச்சால் அவன் மனதை மாற்ற அவர் மாற்ற முயற்சிக்க, சாத்விக்கிற்கும் வசந்தன் சொல்வது சரியென்றே பட, மனதில் ஒரு முடிவெடுத்தவனாக வெளியே வந்தான்.

அவன் வருகையை எதிர்பார்த்து காத்துக் கொண்டிருந்த யாதவி அவன் வந்ததும், "சாத்விக் நாம கல்யாணம் செஞ்சுக்க போறோம் தானே.. உங்கப்பா அதுக்கு ஒத்துக்க மாட்டேங்குறாரா? அவர் வேண்டாம்னு சொன்னா என்னை விட்டுடுவியா சாத்விக்.." என்று கேட்க,

"யாதவி நான் உனக்கு எப்படி புரிய வைக்கன்னு தெரியல.. என்னோட க்ரீடிங் கார்டை பார்த்துட்டு இத்தனை பெரிய முடிவெடுத்துருக்க, ஆனா உன்னை நான் காதலிக்கவே இல்லை யாதவி.." என்ற அவன் வார்த்தையை கேட்டு அவள் அதிர்ச்சியானாள்.

"இல்ல இதை நான் ஒத்துக்க மாட்டேன்.. அந்த கவிதையை நான் நல்லா படிச்சேன்.. அதில் இருந்த வார்த்தைகள், நீ என்னை காதலிக்கிறதா தான் சொல்லுச்சு… நீ இப்போ பொய் சொல்ற சாத்விக், உங்கப்பா ஒத்துக்க மாட்டார்னு மாத்தி பேசற.."

"அவரே நாம காதலிக்கிறோமான்னு தான் கேட்டார்.. ஆனா அது உண்மையா இல்லாதப்ப நான் எப்படி அதை ஏத்துக்க முடியும்? எனக்கு உன்னை பிடிக்கும் ஒரு தோழியா, அதை தான் கவிதையா எழுதி இருந்தேன்.."

"வாழ்க்கை முழுதும் கை கோர்க்கணும்னு சொன்னதுக்கு என்ன அர்த்தம்? வெறும் தோழின்னா எப்படி கடைசி வரை வர முடியும்?"

"ஏன் நாம நல்ல ப்ரண்ட்ஸா கடைசி வரை இருக்க முடியாதா? அப்படி ஆணும் பெண்ணும் நட்பா இருப்பது தவறா?"

"உன் கூட நான் விவாதம் பண்ண இங்க வரல சாத்விக்.. நான் வீட்டை விட்டு வந்திருக்கேன்.. அது தெரிஞ்சும் இப்படி பேசறீயே.. நீ என்னை காதலிக்கலன்னு சொன்னது பொய் தானே, சொல்லு சாத்விக் நீ சொன்னது பொய் தானே.."

"இல்ல யாதவி.. நான் சொல்றது உண்மை.. ஒரு க்ரீட்டிங் கார்டை நம்பி நீ இத்தனை தூரம் வந்தது தப்பு யாதவி.. உன்மேல அன்பா இருக்க அம்மாவை விட்டு ஒரு வாழ்த்து அட்டையை நம்பி நீ வந்திருக்கக் கூடாது.. இப்போதே உன்னை ஊர்ல கொண்டு போய் விடச் சொல்றேன்.."

"நான் திரும்ப ஊருக்கு போக முடியாது சாத்விக்.. நான் எந்த மாதிரி சூழ்நிலையில் இங்க வந்திருக்கேன் தெரியுமா? என்னை புரிஞ்சுக்கோ.." என்றவளால் தன் திருமண விஷயத்தை சொல்ல முடியவில்லை.

"எந்த மாதிரி சூழ்நிலையா இருந்தாலும் நீ வீட்டை விட்டு வந்திருக்க கூடாது யாதவி, அதுவும் இல்லாத காதலை நம்பி.. இப்பவே நீ ஊருக்கு கிளம்பு.." என்று அவன் பேசவும், அவன் மீது கடுகளவு இருந்த நம்பிக்கையும் காணாமல் போக,

"அப்போ நிஜமா நீ என்னை காதலிக்கவே இல்லையா?" என்றுக் கேட்டாள்.

அவனும் மனதை கல்லாக்கி கொண்டு "இல்லை.." என்று மறுக்கவும், வசந்தன் புன்னகைத்துக் கொண்டார்.

அதற்கு மேல் நிற்க முடியாதவளாக அவள் அங்கிருந்து கிளம்ப போக, "காதல் இல்லைன்னு தான் சொன்னேனே தவிர, நான் உனக்கு எப்போதும் நல்ல தோழன் தான் யாதவி.. அதை நல்லா ஞாபகத்தில் வச்சிக்கோ.. நல்லா படி.. இரு தனியா போக வேண்டாம்.." என்றவன்,

மேனேஜர் போல் இருந்த ஒருவரை அழைத்து, "இவங்களை பாண்டிச்சேரி பஸ்ல ஏத்தி விடுங்க.." என்று அவளை அனுப்பி வைத்தான்.

சாத்விக்கின் பதிலில் பிரம்மை பிடித்தாற் போல் இருந்தவள், அவன் அனுப்பி வைத்த ஆளோடு கிளம்பினாள்.

கடைசி வரை அவள் எந்த சூழ்நிலையில் கிளம்பி வந்தாள் என்று அவன் கேட்கவேயில்லை. ஒருவேளை அதை கேட்டால் அவளை விட முடியாது என்பதினால் தான் அவன் கேட்கவில்லை. ஆனாலும் என்னவாக இருக்கும் என்று யோசித்து பார்த்தவன், ஒருவேளை அவளுக்கு திருமண ஏற்பாடு செய்கிறார்களோ என்று யோசித்தவன், அப்போது கூட அவளுக்கு திருமணம் ஆகியிருக்கும் என்று நினைக்கவில்லை. யாதவியின் அன்னையை பற்றி ஓரளவுக்கு அறிந்தவன், அவர் இப்படி ஒரு முடிவெடித்திருக்க மாட்டார் என்று நினைத்து அமைதியாகினான்

அவளை பேருந்தில் ஏற்றி விட்டதை அந்த வேலையாள் வந்து சொல்லும் வரை காத்திருந்தவன், மனம் நிறைய பாரத்தோடு வெளிநாடு கிளம்பினான்.

ஆனால் அன்றே அவள் எந்த சூழலில் தன்னை தேடி வந்தாள் என்பதை கேட்டு தெரிந்திருக்க வேண்டும் என்று நினைத்து இப்போது வருந்தினான். 

மையல் தொடரும்..

Episode # 28

Episode # 30

Go to Maiyalil manam saaintha velai story main page

{kunena_discuss:1211}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.