(Reading time: 21 - 42 minutes)

தொடர்கதை - மையலில் மனம் சாய்ந்த வேளை.. - 28 - சித்ரா. வெ

Maiyalil manam saaintha velai 

யாதவி கழுத்தில் தாலிக் கட்டி சில மணி நேரங்களே ஆகியிருக்க, அந்த கயிற்றில் பூசியிருந்த மஞ்சளின் ஈரம் கூட காயாமல் இருக்க, அவள் அதை கழட்டி தன் கையில் கொடுப்பாள் என்று விபாகரன் சுத்தமாக எதிர்பார்க்கவில்லை.

திருமணம் சொர்க்கத்தில் முடிவானது என்று சொல்வார்கள். ஆனால் அதை இப்படி சில மணி நேரத்திலேயே அவள் முடித்து கொள்ள விரும்புவாள் என்று அவன் நினைத்து பார்த்திருப்பானா? இனியும் அவளிடம் தங்களது உறவை தக்க வைத்துக் கொள்ள அவளுக்கு புரிய வைக்கும் எண்ணத்தை கைவிட்டு,

"சரி உனக்கு சாத்விக்கை தானே பிடிச்சிருக்கு, அதேபோல சாத்விக்கும் உன்னை கல்யாணம் செஞ்சுக்க ஆசைப்பட்டா கண்டிப்பா உங்களை நான் சேர்த்து வைக்கிறேன்.. உன்னோட சார்பா நான் சாத்விக்கிடம் பேசறேன்.. ஆனா எதுவும் உடனுக்குடன் செய்ய முடியாது.. பொறுமையா தான் செய்யணும்,

முதலில் உங்க அப்பா பிரச்சனையை சரி செய்வோம், அடுத்து இதைப்பத்தி நானே எல்லோரிடமும் பேசறேன்.. அதுவரை பொறுமையா இரு யது..

நான் சும்மா உன்னை சமாதானப்படுத்த சொல்றதா நினைக்காத.. நிச்சயமா செய்வேன்.. நீ என்னை நம்பணும் புரியுதா? இப்போ மனசை போட்டு குழப்பிக்காத.. கொஞ்சம் நேரம் தூங்கு.." என்றவன், கையிலிருந்த தாலி கயிறை திரும்ப அவள் கழுத்தில் போட்டு கொள், என்று கொடுக்க மனமில்லாமல் அதை தன் சட்டை பாக்கெட்டில் வைத்துக் கொண்டான்.

"கதவை சாத்திக்கிட்டு நல்லா தூங்கு.. யாரும் உன்னை தொந்தரவு செய்ய வேண்டாம்னு சொல்றேன்.." என்று அவளிடம் சொல்லியவனுக்கு அடுத்து என்ன செய்வது? என்ற குழப்பம் இருந்ததால், மன அமைதிக்கு கடற்கரையை நாடிச் சென்றான்.

என்ன தான் கடல் அலைகளின் சத்தத்தில் தன் மன குழப்பத்தை அவன் தொலைக்க நினைத்தாலும் முடியவில்லை, இரு அன்னையர்களின் அவசரத்திற்காக திருமணம் செய்துக் கொண்டாலும் யாதவியின் மீது நேசத்தை வளர்த்திருந்தானே, ஆனந்தமாக அவளுடன் ஆரம்பித்த இல்வாழ்க்கை அன்றே முடிந்துவிடும் என்று கனவில் கூட எதிர்பார்த்திருக்க மாட்டான் அவன், அந்த ஏமாற்றத்தை எப்படி அத்தனை சீக்கிரம் அவன் மனம் ஏற்றுக் கொள்ளும், எத்தனை யோசித்தாலும் அடுத்து என்ன செய்வது என்று புரியவில்லை.

இப்போது வீட்டுக்கு சென்றால் இரு அன்னைகளிடமும் என்னவென்று சொல்வது? இப்போதைக்கு வரும்போது "யாதவி தூங்கட்டும்.. அவளா எழுந்து வர்ற வரைக்கும் அவளை எழுப்பாதீங்க.." என்று சொல்லிவிட்டு வந்திருந்தான்.

ஆனால் எழுந்து வந்தவளின் கழுத்தில் தாலி இல்லையென்றால் இருவரும் கேட்பார்கள். அவர்களுக்காகவது இந்த தாலியை போட்டுக் கொள் என்று சொல்வதற்கு கூட அவனுக்கு ஒருமாதிரி இருந்தது. வேண்டாம் என்பவளை வற்புறுத்தியா வாழ வைக்க முடியும்? ஆனால் அவள் காதலிப்பதாக சொல்வது ஒரு நடிகனை, சாத்விக் என்ற பெயரில் ஒரு நடிகன் இருக்கிறானா? என்பது கூட அவனுக்கு தெரியாது.

கல்லூரி காலங்களில் நண்பர்களோடு அடிக்கடி திரைப்படங்கள் பார்ப்பான். அதன்பின் வேலையில் சேர்ந்ததும் அதற்கெல்லாம் அவனுக்கு நேரமிருந்ததில்லை. எப்போதாவது அர்ச்சனாவிற்கு வீட்டில் இருப்பது போர் அடிக்கும் என்பதால், நல்ல படம் என்று தெரிந்துக் கொண்டு அதற்கு மஞ்சுளாவையும் அர்ச்சனாவையும் அழைத்துச் செல்வான். தொலைக்காட்சியில் கூட அவ்வளவாக திரைப்படங்களை பார்க்க மாட்டான்.  அடிக்கடி திரைப்படங்கள் பார்ப்பதோ, திரைப்படங்கள் சம்மதமான செய்திகளை தெரிந்துக் கொள்ளவோ அவ்வளவாக அவன் ஆர்வம் காட்டியதில்லை.

இப்போதோ தன் வாழ்க்கையை கேள்விக் குறியாக ஆக்கிய அந்த திரைப்படத் துறையை அக்கணமே வெறுக்க ஆரம்பித்தான். ஆம் ஒருப்பக்கம் இத்தனை விரைவாக திருமணம் நடக்க காரணம் யாதவியின் தந்தை அவளை திரைத்துறையில் நடிக்க வைக்க ஆசைப்பட்டது, இல்லையென்றால் யாதவிக்கு தன்னை திருமணம் செய்துக் கொள்ள ஆசையில்லை என்பது ஏதாவது ஒரு நேரம் அவனுக்கு தெரிய வந்திருக்கும், இப்போதோ ஒரு சினிமா நடிகனால் அவனது யாதவி அவனுக்கு இல்லை என்ற நிலை வந்துவிட்டதே, அப்படியிருக்க திரைத் துறை அவனுக்கு எப்படி பிடிக்கும்?

இருந்தும் இப்போது சாத்விக்கை பற்றி தெரிந்துக் கொள்ள வேண்டியது அவசியம் என்பதால் தன் அலைபேசியை எடுத்து சாத்விக் என்ற பெயரை வைத்து வலைத்தளத்தில் அவனை பற்றி அறிந்துக் கொள்ள முயற்சித்தான். அதுவும் தப்பாமல் அவனைப் பற்றிய செய்திகளையும் மற்றும் புகைப்படம் உள்ளிட அனைத்தையும் அவனுக்கு தெரியப்படுத்தியது.

பார்ப்பதற்கு மிகவுமே அழகாக இருந்தான். நடிகனல்லவா அழகாக இல்லால் எப்படி? ஆனால் யாதவிக்கு அவனை எப்படி தெரியும்? உண்மையிலேயே அவனை காதலிக்கிறாளா? சாத்விக்கிற்கும் அவள் மேல் காதல் உண்டா? இல்லை தனது பொழுது போக்கிற்காக யாதவியுடன் பழகினானா? இருவருக்கும் எப்படி அறிமுகம்? இப்போது தான் முதல் படமே வெளிவந்திருக்கிறது. பெரிய நடிகன் என்ற அளவில் அவனுக்கு பெண் ரசிகர்கள் இருக்கிறார்களா என்ன? இப்படி பல கேள்விகள் அவன் தனக்குள்ளே கேட்டுக் கொண்டான்.

யாதவிக்கு நடிகனோடு பழக்கம் வேண்டாமென்று தான் ரத்னா அத்தை யோசித்திருக்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டான். ஆனாலும் திருமணத்திற்கு முன் சாத்விக் பற்றி என்னிடம் பேசியிருக்கலாம், இல்லை யாதவியாவது சொல்லியிருக்கலாம், அப்படி சொல்லியிருந்தால் இப்போது இப்படி ஒரு சூழ்நிலை அமைந்திருக்காது என்று சிந்தித்தவன் விரக்தியாக சிரித்துக் கொண்டான்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.