(Reading time: 21 - 42 minutes)

அதைப்பார்த்து தான் மஞ்சுளா "ரத்னா.." என்று பதற, விபாகரன் உடனே செயல்பட்டு அவரை தூக்கிக் கொண்டு வண்டி பிடித்து மருத்துவமனையில் சேர்த்தான்.

அவருக்கு தீவிர நெஞ்சுவலி, இப்போதைக்கு கவலைக்கிடமாக தான் இருக்கிறார். ஒன்றும் சொல்வதற்கில்லை என்று மருத்துவர் சொல்லிவிட்டுச் செல்ல,

"எல்லாம் உன்னால தான் அர்ச்சனா.." என்று விபாகரன் தன் தங்கை மீது கோபப்பட்டான்.

"நான் என்னன்னா செஞ்சேன்.. அவங்க பொண்ணு செஞ்ச தப்புக்கு என்ன சொல்வீயா?" என்று அவளும் பதிலுக்கு கோபப்பட்டாள்.

"நடந்தது பெரிய விஷயம் தான், ஆனா அதுக்காக அவங்கக்கிட்ட இப்படி கடுமையா பேசணுமா? ஏற்கனவே யாதவி செஞ்ச காரியத்தில் அவங்க மனசு வேதனையில் இருக்கும், இதில் நாம வேற அவங்களை காயப்படுத்தணுமா?" என்று அவன் கேட்க,

"பாதிப்பு நமக்கு தான் ண்ணா.. இவங்களுக்கு தெரியாம நடந்த விஷயம்னா பரவாயில்லை.. ஆனா யாதவி ஒருத்தனை காதலிச்ச விஷயம் தெரிஞ்சும் அவளை உனக்கு கல்யாணம் செஞ்சு வச்சிருக்காங்க.. அப்போ நாம கேக்க கூடாதா?" என்று அவளும் விடாமல் அவனை திருப்பிக் கேட்டாள். ஒருபக்கம் மகனின் வாழ்க்கை கேள்விக்குறியாக இருக்க, இன்னொருபக்கம் ரத்னா உயிருக்கு போராட இரண்டையும் தாங்கிக் கொள்ள முடியாமல் மஞ்சுளா அமைதியாக அமர்ந்திருந்தார். தன் பிள்ளைகள் இருவரும் வாதாடிக் கொண்டிருந்ததை கூட கவனிக்கவில்லை.

தங்கை பேசியதற்கு, "நீ கேட்டதெல்லாம் போதும், கொஞ்சம் நேரம் அமைதியா இரு.." என்றவன் அங்கிருந்து கொஞ்சம் தள்ளி வந்து தனியாக நின்றான்.

என்னத்தான் ரத்னாவிற்கு யாதவி மீது கோபம் இருந்தாலும், மகள் மீது அதிக பாசம் இருப்பதால், அவள் திரும்ப வந்தால் ஒருவேளை ரத்னாவிற்கு விரைவில் குணமாக வாய்ப்பிருப்பதாக விபாகரன் நம்பினான்.

எப்படியோ யாதவி சாத்விக்கை தேடி சென்னைக்கு தான் சென்றிருக்க வேண்டுமென்பதை அவன் சரியாக யூகித்திருந்தான். ஆனால் சென்னையில் சாத்விக்கின் வீடு எங்கு இருக்கிறது என்று எப்படி கண்டுபிடிப்பது? முதலில் யாதவிக்கு சாத்விக்கின் வீடு தெரிந்திருக்குமா? அவள் எப்படி அவனை பார்க்கச் சென்றிருப்பாள்? என்று குழம்பினான்.

யாரிடம் சாத்விக்கின் முகவரி கேட்பது என்று அவனுக்கு தெரியவில்லை, யாதவியை எப்படி கண்டுபிடிப்பது என்பது புரியவில்லை, அவளது அலைபேசியையும் அவள் எடுத்துக் கொண்டு செல்லவில்லை, பின் அவளை எப்படி கண்டுபிடிப்பது? காலையில் யாதவி பார்த்து பேசிய அவள் தோழியிடம் ஏதாவது விசாரிக்கலாம் என்று நினைத்தவன், தன் வீட்டில் உள்ள யாதவியின் அலைபேசியை எடுத்து அதில் அவளது தோழியின் முகவரி இருக்கிறதா? என்று பார்க்கலாம் என்று நினைத்திருக்க, அதற்குள் அவனிடமிருந்த ரத்னாவின் அலைபேசி ஒலியெழுப்பியது.

ரத்னாவை மருத்துவமனைக்கு கொண்டு வரும்போது அவரது அலைபேசியை அவனே எடுத்து வைத்திருந்தான், அதில் யார் அழைக்கிறார்கள் என்று பார்த்தால், பெயரில்லாமல் வெறும் எண்கள் மட்டும் அதில் மிளிர்ந்தது.

ஒருவேளை யாதவியாக கூட இருக்கலாம் என்று நினைத்து அவன் அழைப்பை ஏற்க, "ஹலோ யாதவி அம்மாவா?" என்று ஒரு ஆண் குரல் கேட்டது.

"ஹலோ நீங்க யாரு?" என்று விபாகரன் கேட்க, அந்தப்பக்கம் அமைதியாக இருந்தது.

"ஹலோ நான் யாதவி அம்மாக்கு வேண்டியவன் தான், எதுக்காக பேசீனிங்க ப்ளீஸ் சொல்லுங்க, யாதவியை பத்தி உங்களுக்கு ஏதாச்சும் தெரியுமா?" என்று அவன் விளக்கமாக கேட்க,

"சார் நான் யாதவியோட காலேஜ்மெட் ஜகதீஷ் பேசறேன்.. யாதவி பத்தி கொஞ்சம் பேசணும் சார்.." என்று அந்தப் பக்கமிருந்து பதில் வர,

"நீங்க எங்க இருக்கீங்கன்னு சொல்லுங்க, கொஞ்ச நேரத்தில் வரேன்.." என்று சொல்லி விவரத்தை கேட்டுக் கொண்டவன், மஞ்சுளாவிடம் சொல்லிவிட்டுச் செல்வதற்காக அங்கு போக, அந்த இடத்தில் பன்னீர் நின்றுக் கொண்டு அவர்களிடம் கேள்விக் கேட்டுக் கொண்டிருந்தார்.

ரத்னாவை மருத்துவமனையில் சேர்க்கும் போது ரத்னாவிற்கும் பன்னீருக்கும் தெரிந்த ஒருத்தர் ரத்னாவை பார்த்துவிட்டு பன்னீருக்கு தகவல் சொல்லவே, அந்த நேரம் மதுவின் மயக்கத்தில் இல்லாமல் தெளிவாக இருக்கவே, கோவிலுக்கு செல்வதாக மனைவியும் மகளும் சொல்லிவிட்டுச் சென்றிருக்க, இப்போது மனைவி மருத்துவமனையில் இருக்கிறாள் என்றால் எதுவோ சரியில்லை என்பதை உணர்ந்த பன்னீர் ரத்னாவை பார்க்க மருத்துவமனைக்கு வந்தவர், அங்கு மஞ்சுளாவையும் அர்ச்சனாவையும் பார்த்து,

"என் பொண்டாடிக்கு என்ன ஆச்சு.. அவளை என்ன செஞ்சீங்க? கோவிலுக்கு போறதா சொல்லிட்டு போனவ எப்படி ஹாஸ்பிட்டல் வந்தா, என் பொண்ணு எங்க?" என்று அவர்களை பார்த்து அவர் கேள்விகளை கேட்டார்.

ஏற்கனவே கடுப்பில் இருந்த அர்ச்சனா அவர் தொடர்ந்து கேள்விகளை கேட்கவும், "இங்கப்பாருங்க எங்களை கேள்வி கேட்க நீங்க யாரு? உங்க பொண்டாட்டி இப்படி ஒரு நிலைமையில் இருக்க காரணம் காதலனை தேடி ஓடிப் போனாளே உங்கப் பொண்ணு அவ தான், அவளை தேடிப்பிடிச்சு கேள்விக் கேளுங்க, இல்லை அப்படிப்பட்டவளை எங்க அண்ணனுக்கு கல்யாணம் செஞ்சு வைக்க நினைச்ச உங்க பொண்டாட்டி கண் முழிச்சா அவங்களை கேளுங்க.. அதை விட்டுட்டு எங்கக்கிட்ட எகிறாதீங்க.." என்று அவரிடம் கோபமாக பேசினாள்.

"என்ன என்னோட பொண்ணுக்கு கல்யாணமா? யாரைக் கேட்டு இப்படி ஒரு முடிவு செஞ்சீங்க? அவ பெரிய நடிகையா ஆகப் போறா.. அவளுக்கு கல்யாணம் செஞ்சு வச்சிட்டீங்களா? என் பொண்டாட்டியை ஏமாத்தி என் பொண்ணை உங்க பையனுக்கு கல்யாணம் செஞ்சு வச்சிட்டீங்கன்னு நான் இப்பவே போலீஸ்ல போய் கம்ப்ளெயிண்ட் கொடுக்கிறேன்.." என்று பன்னீர் எகிற,

"தாராளமா போய் கம்ப்ளெயிண்ட் கொடுங்க.. ஆனா நீங்க நினைக்கிறது போல எந்த கல்யாணமும் நடக்கல.. அதுக்குள்ள உங்க பொண்ணு இந்த கல்யாணம் வேண்டாம்னு சொல்லிட்டு போயிட்டா, முடிஞ்சா அவளை தேடி கூட்டிட்டு வாங்க.. இங்க சும்மா தகறாரு செய்யாதீங்க.. அப்படி மீறி ஏதாவது பிரச்சனை செஞ்சா இங்க இருக்கவங்களே உங்களை போலீஸ்ல பிடிச்சு கொடுத்திடுவாங்க.." என்று அவர் அருகில் வந்த விபாகரன் அவரை மிரட்டினான்.

"என்னோட பொண்டாட்டி கண்ணு முழிக்கட்டும், என் பொண்ணு வரட்டும், அப்புறம் இருக்கு உங்களுக்கு.." என்று சொல்லிவிட்டு பன்னீர் சென்றுவிட்டார்.

"இங்கப்பாருங்க.. இப்போதைக்கு எனக்கும் யாதவிக்கும் கல்யாணம் நடந்த விஷயம் யாதவி அப்பா உட்பட யாருக்கும் தெரியக் கூடாது.. முதலில் ரத்னா அத்தை சரியாகட்டும், அப்புறம் இந்த விஷயத்தில் என்ன செய்யலாம்னு பார்த்துக்கலாம், அவர் திரும்ப வந்து தகறார் செஞ்சா எனக்கு போன் பண்ணுங்க, நான் முக்கிய வேலையா வெளியில் போயிட்டு வரேன்.." என்றவன் ஜகதீஷை பார்க்க கிளம்பினான்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.