(Reading time: 21 - 42 minutes)

"இருக்காது.. அந்த பையன் கூட பார்த்து பேசியிருக்கா தான், ஆனா கல்யாணத்துக்கு பிடித்தம் அளவுக்கெல்லாம் இல்ல தம்பி.." என்று ரத்னா தயக்கமாக சொல்லவும்,

"ஓ இது வேற இருக்கா.. எவனையோ காதலிச்சுட்டு ஊரை சுத்தினவளை என்னோட அண்ணன் தலையில் கட்டிட்டீங்களே.. கல்யாணம் ஆகி முழுசா ஒருநாள் கூட முடியல.. அதுக்குள்ள புருஷனை விட்டுட்டு காதலனை தேடி போயிட்டாளே,

உங்களுக்கு எங்கம்மா நல்லது தானே செஞ்சாங்க.. அவங்களுக்கு இப்படி ஒரு துரோகம் செய்ய அம்மாக்கும் பொண்ணுக்கும் எப்படி மனசு வந்துச்சு.. என் அண்ணனோட வாழ்க்கையை இப்படி கேள்விக்குறியா ஆக்கிட்டு போயிட்டாளே, காதலனை தேடிப் போன உங்க பொண்ணு நல்லா வாழ்ந்துடுவாளா?" என்று அர்ச்சனா படபடவென்று பொரிந்தாள்.

அவளது பேச்சை கேட்டு, "அச்சு அமைதியா இரு.. எதுக்கு இப்படி பேசி ரத்னா மனசை கஷ்டப்படுத்துற.." என்று மஞ்சுளா அர்ச்சனாவை அடக்க,

"எந்த நேரம் எப்படி பேசணும்னு உனக்கு தெரியாதா அர்ச்சனா.. கொஞ்ச நேரம் வாயை மூடு.." என்று விபாகரனும் அவளை திட்டினான்.

"எப்படின்னா பேசாம இருக்க முடியும்? இவங்க உனக்கு அநியாயம் செஞ்சுட்டாங்க.. ஒழுக்கம் கெட்டவளை உனக்கு கட்டி வச்சு நமக்கு துரோகம் செஞ்சுட்டாங்க.. இனி நாம எப்படி வெளிய தலை காட்ட முடியும்.." என்று அப்போதும் அர்ச்சனா ஆவேசமாக பேச,

"இல்லை.. என் பொண்ணு அப்படில்லாம் செஞ்சுருக்க மாட்டா.. அவ அப்படிப்பட்ட பொண்ணு இல்ல.. அவ தப்பானவ இல்ல.." என்று ரத்னா படபடத்தார்.

"அப்போ இந்த தாலிக்கு என்ன சொல்றீங்க?" என்று அர்ச்சனா அவரை பார்த்துக் கேட்க,

"அர்ச்சனா சொன்னா நீ கேக்கவே மாட்டீயா?" என்று விபாகரன் அவளை அடக்க பார்க்க,

"விபு அவளை அடக்கறது இருக்கட்டும்.. முதலில் நடந்தது என்னன்னு சொல்லு.." என்று மஞ்சுளா கேட்கும் போதே ரத்னா முற்றிலும் தளர்ந்து போனார்.

"அம்மா.. அது.." என்று தயங்கியவன்,

"அத்தை.. நான் யாதவிக்கிட்ட இந்த கல்யாணத்துக்கு சம்மதம் கேட்கும் போது, சம்மதம்னு தான் சொன்னா.. அதனால தான் இந்த கல்யாணத்தை இத்தனை சீக்கிரம் நடத்த ஏற்பாடு செஞ்சேன்.. கல்யாணம் முடியறவரை கூட அவ இதை ஏத்துக்கிட்டது போல தான் தெரிஞ்சுது.. ஆனா கோவிலில் அவளோட ப்ரண்ட பார்த்தா, அந்த பொண்ணு என்ன சொல்லி குழப்பிவிட்டுச்சுன்னு தெரியல.. அதுல இருந்து தான் யாதவி முகம் தெளிவில்லாமல் இருந்தது.

வீட்டுக்கு வந்து கிடைச்ச தனிமையில் என்னன்னு கேட்டப்ப தான், எனக்கு சாத்விக்கை தான் பிடிச்சிருக்கு.. ஆனா அம்மா சொல்லி தான் உங்களை கல்யாணம் செஞ்சுக்கிட்டேன்னு யாதவி சொன்னா.. சரி நடந்தது நடந்துடுச்சு, இந்த டீன் ஏஜ்ல உனக்கு வந்தது காதலே இல்லன்னு புரிய வைக்க முயற்சி செஞ்சேன்.. அப்போ தான் அதை ஏத்துக்க முடியாம யாதவி அவ கழுத்தில் இருந்த தாலியை கழட்டி கொடுத்தா..

அப்போதும் சரி உனக்கு சாத்விக்கை பிடிச்சிருந்தா நானே கல்யாணம் செஞ்சு வைக்கிறேன் பொறுமையா இருன்னு தான் சொன்னேன்.. ஆனா அவ இப்படி அவசரப்படுவான்னு தெரியாம போச்சு.." என்று அவன் சொல்லி முடிக்கவும்,

"அய்யோ பாவிப் பொண்ணே.. நீயே உன்னோட தலையில் மண்ணை வாரி போட்டுக்கிட்டியே, அந்த பையனோட அதிகம் பழகாதன்னு சொன்னேனே, ஆனா அவன் மேல காதல்னு சொல்லி போயிட்டீயே.. அதுவும் நடந்த கல்யாணத்தை வேண்டாம்னு சொல்லிட்டீயே, நீ என்னோட வயித்துல வந்து தான் பொறந்தீயா? நீ இப்படி சீர்கெட்டு போவேன்னு தெரிஞ்சிருந்தா உன்னை கருவிலேயே அழிச்சி இருப்பேனே..

இப்படி ஒரு அப்பனுக்கு பொறந்ததால தான் இவ இப்படி இருக்கான்னு யாரும் சொல்லிடக் கூடாதுன்னு உன்னை பொத்தி பொத்தி வளர்த்தேனே, நீ இப்படி ஒரு காரியத்தை செஞ்சு அந்த ஆளுக்கு பொறந்தவன்னு நிரூபிச்சிட்டீயே.." என்று ரத்னா தலையில் அடித்துக் கொண்டு அழுதார்.

ரத்னா அடித்துக் கொண்டு அழுதாலும், பாதிக்கப்பட்டது தன் மகன் வாழ்க்கை என்பதால் மஞ்சுளா ரத்னாவின் கதறலை வெறுமனே வேடிக்கை பார்த்தப்படி நின்றிருக்க,

"அய்யோ எதுக்கு அத்தை இப்படி அழறீங்க.. யாதவி கண்டிப்பா சாத்விக்கை தேடி தான் போயிருப்பா.. நாம அவளை கூட்டிட்டு வந்துடலாம் கவலைப்படாதீங்க.." என்று விபாகரன் தான் அவரை தேற்ற முயற்சித்தான்.

"அண்ணா ஓடிப்போனவளை கூட்டிட்டு வந்து என்ன செய்ய போற.. அவங்க ரெண்டுப்பேருக்கும் கல்யாணம் செஞ்சு வைக்கப் போறீயா? நீ என்ன பெரிய தியாக செம்மலா? போனவ போனவளாகவே இருக்கட்டும்.. அவளை முதலில் தலை முழுகு.." என்று அர்ச்சனா கோபத்தோடு பேசினாள்.

"நீ கொஞ்சம் நேரம் வாயை திறக்காம இருக்கியா அர்ச்சனா.." என்று விபாகரன் அவளை அதட்ட,

"அர்ச்சனா சொல்றது சரி தான் தம்பி.. இப்படி ஒரு காரியம் செஞ்சவ என்னோட பொண்ணே இல்ல.. அவளை நானே தலை முழுகிட்றேன்.. அவளை உங்களுக்கு கல்யாணம் செஞ்சு வச்சு பெரிய தப்பு பண்ணிட்டேன்.. முடிஞ்சா என்னை மன்னிச்சிடுங்க தம்பி.." என்று உணர்ச்சிவசப்பட்டு நெஞ்சை பிடித்துக் கொண்டு ரத்னா மயங்கி சரிந்தார்.

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.