(Reading time: 28 - 55 minutes)

தொடர்கதை - மையலில் மனம் சாய்ந்த வேளை.. - 30 - சித்ரா. வெ

Maiyalil manam saaintha velai 

சாத்விக் வீட்டில் யாதவிக்கு நடந்தது என்ன என்பது தெரியாமல் விபாகரன் அவளை தேடி சென்னை வந்தான். அவன் சென்னையில் காலடி எடுத்து வைத்த போது மாலை மறைந்து இருள் தொடங்கியிருந்தது.

ஒரு ஆட்டோ பிடித்து சாத்விக் வீட்டை சென்றடைந்தவன், சாத்விக்கை காண வேண்டுமென்று சொல்வதற்கு முன்னரே அங்கிருந்த காவலாளியிடம் தன் அலைபேசியில் உள்ள யாதவியின் புகைப்படத்தை காட்டி, அவள் இங்கு வந்தாளா? என்றுக் கேட்டான்.

தினம் பல பேரை பார்ப்பவர் என்றாலும், சோர்வை தாங்கிய முகத்தில் சாத்விக் அழைத்ததுமே புத்துணர்வுடன் புன்னகை பூத்த யாதவியின் முகம் அவருக்கு நன்றாகவே ஞாபகம் இருந்தது.

"ம்ம் இந்த பொண்ணு சாயந்திரம்  ஒரு 3 மணி போல வந்துச்சு தம்பி.. சின்ன முதலாளியை பார்க்கணும்னு சொல்லுச்சு, அவரும் உள்ளே கூப்பிட்டாரு, அப்புறம் கொஞ்ச நேரத்தில் கிளம்பிடுச்சு தம்பி.." என்று அவர் சொல்ல,

"என்ன கிளம்பிட்டளா? எங்க கிளம்பினா? திரும்ப வீட்டுக்கா?" என்று மனதில் கேள்விக் கேட்டுக் கொண்டவன்,

"தனியா தான் வெளிய வந்தாளா?" என்று அவரிடம் கேட்டான்.

"இல்ல தம்பி இங்க வேலை செய்யும் ஒருத்தர் கூடத் தான் போச்சு.. அதுக்கு மேல ஒன்னும் தெரியாது.." என்று சொல்லிவிட்டார்.

யாதவி வந்தாளோ, இல்லை யாதவி பற்றிய ஏதாவது தகவல் என்றாளோ, தனக்கு அழைத்து சொல்லும்படி மஞ்சுளாவிடம் அவன் சொல்லிவிட்டு தான் வந்தான். அதற்கு எந்த உணர்ச்சியையும் காண்பிக்காமல் அவர் வெற்று பார்வை பார்க்க,

"ரத்னா அத்தைக்காகவாவது சொல்லுங்க ம்மா.." என்று சொல்லிவிட்டு தான் வந்திருந்தான்.

அதனாலேயே காவலாளி சொன்ன நேரத்தை வைத்து பார்த்தால், இன்னேரம் அவள் பாண்டிச்சேரி போய் சேர்ந்திருக்க வேண்டும், ரெண்டு வீட்டில் எங்கு சென்றாலுமே ரத்னா அத்தை மருத்துவமனையில் இருப்பது தெரிந்திருக்கும், அங்கு போயிருந்தால் அன்னை அழைத்து சொல்லியிருப்பார். அப்படியிருக்க யாதவி எங்கே போயிருப்பாள்? அவளுக்கு எதுவும் பிரச்சனை நேர்ந்திடக் கூடாதே என்று மனம் பதைக்க,

"நான் சாத்விக்கை பார்க்கணுமே.." என்று அவசரமாக காவலாளியிடம் கூறினான்

"முதலாளி வீட்ல இல்லங்க.. அவர் பட ஷீட்டிங்க்காக வெளிநாடு போறாரு.. கொஞ்ச நேரத்திற்கு முன்ன தான் கிளம்பி ஏர்ப்போர்ட்டுக்கு  போனாரு.." என்று காவலாளி கூற,

"என்ன.." என்று அதிர்ச்சியானவன்,

"இப்போ வீட்ல யாரு இருக்காங்க.." என்றுக் கேட்டான்.

"முதலாளியம்மா ரெண்டு நாளா ஊர்ல இல்ல.. பெரிய முதலாளி மட்டும் தான் இருக்காரு.." என்று அவர் கூற,

"நான் அவரை பார்க்கணும்.." என்றான்.

"இருங்க கேட்டுச் சொல்றேன்.." என்றவர், இண்டர்காம் மூலம் வசந்தனை அழைத்து விஷயத்தை சொல்ல,

"அந்த பொண்ணு தான் போயிட்டாளே.. அப்புறம் இப்படி வந்து ஏன் தொல்லை கொடுக்கிறாங்க.." என்று சலித்துக் கொண்டவர், ஏதோ நல்ல மூடில் இருக்கவே விபாகரனை உள்ளே அனுப்ப அனுமதி கொடுத்தார்.

உள்ளே வந்தவன், "எங்க வீட்டுப் பொண்ணு யாதவி, சாத்விக்கை தேடித்தான் வந்தா.. அவளை பார்க்கணும்.." என்று அவரை பார்த்துக் கேட்க,

"அதெல்லாம் எந்த பொண்ணும் இங்க இல்ல, புத்திமதி சொல்லி அனுப்பிச்சாச்சு.." என்று அலட்சியமாக பதில் கூறினார்.

"இங்கப்பாருங்க யாதவி இன்னும் ஊருக்கு போகல.. அங்க அவங்க அம்மா அவ இங்க கிளம்பி வந்தது தெரிஞ்சு நெஞ்சு வலி வந்து ஹாஸ்பிட்டலில் இருக்காங்க.. ப்ளீஸ் அவ எங்க இருக்கான்னு சொல்லுங்க.. அவளைப் பார்த்தா அவங்க குணமாக வாய்ப்பிருக்கு.." என்று அவன் கெஞ்ச,

"அந்த பொண்ணு அம்மாக்கு உடம்பு சரியில்லன்னா அதுக்கு நான் என்ன செய்ய முடியும்? என்னோட பையன் ஒரு நடிகன், அவனுக்கு நிறைய பெண்கள் ரசிகர்களா இருக்காங்க.. தினம் எத்தனை லெட்டர் வருது தெரியுமா? ரத்தத்தால கூட எழுதி அனுப்புறாங்க.. டெய்லி பத்து பேராவது வீட்டுக்கு முன்ன வந்து காத்துக்கிடக்கறாங்க..

அதில் எத்தனை பேர் அவனை காதலிக்கிறதா சொல்றாங்க தெரியுமா? கல்யாணம் செஞ்சுக்கலாம்னு கேட்கிறவங்க எத்தனை பேர்? இதில் வீட்டுக்கு தெரியாம கிளம்பி வர்றவங்க எத்தனை பேரோ? அவங்க வீட்ல என்ன ஆகுதுன்னு நாங்க கவலைப்பட்டுக்கிட்டு உட்கார்ந்திருக்க முடியுமா?" என்று அவர் அலட்சியமாக பதில் கூறினார்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.