(Reading time: 28 - 55 minutes)

சாத்விக்கை நம்பி தாலியைக் கழட்டி விபாகரனிடம் கொடுத்துவிட்டு வந்தாள். இப்போது அவன் ஏமாற்றிவிட்டதாக அங்கே போய் நின்றால் என்னவாகும்? ரத்னா விபாகரனிடம் பேசி அவனோடு இவளை வாழ வைப்பார்.

விபாகரன் நல்லவன் தான், நானே சாத்விக்கோடு உன்னை சேர்த்து வைக்கிறேன் என்று சொன்னவன் தான், ஆனால் அவன் வேண்டாம் என்று விட்டு சென்றவளை திரும்ப அவன் எப்படி ஏற்றுக் கொள்வான்? அப்படியே ரத்னா சொன்னதற்காக ஏற்றுக் கொண்டாலும் இன்னொருவனை தேடி சென்றவள் தானே, என்ற உறுத்தலோடு இவளுடன் வாழ்ந்தால் அந்த வாழ்க்கை எப்படி இருக்கும்?

அதில்லாமல் அவனின் அன்னை மற்றும் தங்கை இருவரும் இவளை மனதாத எற்றுக் கொள்வார்களா? இப்படியெல்லாம் அவள் மனம் யோசிக்க ஆரம்பிக்க, ரத்னாவையும் விபாகரனை  பொறுத்தவரை தான் ஓடிப் போனவளாகவே இருக்கட்டும் என்று நினைத்தவள், அந்த பேருந்தில் இருந்து அவசரமாக இறங்கியவள், இன்னொரு பேருந்தில் சென்று ஏறிக் கொண்டாள்.

அங்கே அவளுக்கு அருகில் அமர்ந்திருந்தவர் தான் தனம், அவசரமாக வந்து அருகில் அமர்ந்தவளை ஒரு பார்வை பார்த்துவிட்டு பின் ஜன்னலோரம் அவர் வேடிக்கை பார்க்க ஆரம்பிக்க, பேருந்தும் புறப்பட தயாரானது.

அதற்குள் நடத்துனர் அனைவருக்கும் பயணச்சீட்டு கொடுத்து கொண்டே வந்தவர் அவளிடமும், "எங்கம்மா போகணும்.." என்றுக் கேட்க,

முதலில் விழித்தவள், "இந்த பஸ் எங்க போகுது?" என்றுக் கேட்டாள்.

"இது ஆந்திரா பக்கம் போகுதும்மா.. தடா, சித்தூர், நெல்லூர் அப்படி போகுது.." என்று அவர் சொல்லவும்,

"ம்ம் ஆமாம் நெல்லூருக்கு ஒரு டிக்கெட் கொடுங்க.." என்றுக் கேட்டு வாங்கிக் கொண்டவள், கையில் கொண்டு வந்த பையை இறுக்கிப் பிடித்தப்படி அமர்ந்துக் கொண்டாள்.

அவள் நடத்துனரிடம் திணறியதை வைத்தே அவள் விஷயத்தில் எதுவோ சரியில்லை என்பதை உணர்ந்த தனம், "ஏன்ம்மா எந்த ஊருக்கு போகுதுன்னு தெரியாமலா இந்த பஸ்ல ஏறின.." என்று அவளைப் பார்த்து கேட்க,

"இல்லை தெரியும்.. பஸ் கிளம்புதேன்னு அவசரமா வந்து ஏறினேனா.. அதான் சரியான பஸ்ல ஏறினோமான்னு சந்தேகமா கேட்டேன்.. நான் நெல்லூர் தான் போகணும்.." என்றவள் வேறு பக்கமாக திரும்பிக் கொண்டாள்.

அவள் பதில் அவருக்கு திருப்தி தரவில்லை, ஆனால் யாரோ மூன்றாவது மனிதரின் விஷயத்தில் அதற்கு மேல் தலையிடக் கூடாது என்பதால் அதோடு அவளிடம் கேள்விக் கேட்டு தொல்லை செய்யவில்லையென்றாலும் அவளை கவனித்தப்படி தான் வந்தார்.

அவள் மிகவுமே சோர்ந்து போயிருந்தது போல் அவர் கண்ணுக்கு தெரிந்தது. ஏனோ அவளை பார்க்கவும், சிறிது நாட்களுக்கு முன் பறிகொடுத்த தன் மகள் தேவியை பார்ப்பது போலவே அவருக்கு தோன்றியது. ஒரு விபத்தில் தன் ஒரே மகளை தனம் சிறிது நாள் முன்பு தான் பறிகொடுத்திருந்தார்.

ஏற்கனவே கணவன் இறந்து ஒரே மகளுக்காக தான் வாழ்ந்துக் கொண்டிருந்தார். ஆனால் அவளும் இப்போது தன்னை விட்டு செல்வாள் என்று எதிர்பார்க்காதவருக்கு இந்த உலகில் இருக்கவே பிடிக்கவில்லை, இருந்தும் நினைக்கும் போது உயிரை போக்கிக் கொள்ள முடியாதே, அதனால் மகளோடு இருந்த ஊரில் இருக்க பிடிக்காமல் ஒரு வீட்டோடு தங்கி வேலைப் பார்க்க நெல்லூருக்கு சென்று கொண்டிருக்கிறார்.

மகள் வயதில் இருக்கும் யாதவியை பார்த்தப்படியே அவர் பேருந்தில் பயணம் செய்ய, ஏனோ அவர் தன்னை பார்த்துக் கொண்டு வந்ததில் இயற்கையாகவே பயம் சூழ, அவர் பக்கம் திரும்பாமல் வந்தவளுக்கு மொழி தெரியாத ஊருக்கு சென்று என்ன செய்ய போகிறோம் என்பது புரியாமல் எதிர்காலம் குறித்த அச்சமும் சூழ்ந்துக் கொண்டது. இப்படி இருவரும் ஏதேதோ நினைவுகளுடன் பயணிக்க, திடீரென பேருந்து விபத்திற்குள்ளானது.

நல்லவேளையாக பயணிகளின் உயிருக்கு எந்தவித ஆபத்தும் இல்லையென்றாலும், பயணிகள் காயங்களுக்கு உள்ளானதால், அனைவரையும் அங்கு அருகில் இருந்த பொது மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். யாதவி, தனம் இருவருக்குமே பெரிதாக காயம் ஒன்றுமில்லை, பேருந்து விபத்துக்குள்ளான செய்தி அறிந்து தங்கள் உறவினர்கள் அந்த  பேருந்தில் பயணம் செய்த தகவல் தெரிந்தவர்கள் நேராக அங்கு வந்துவிட்டனர். சில பேரிடம் அலைபேசி எண் வாங்கி மருத்துவர்களே தகவல் சொல்லினர்.

இதில் உறவினர்களுக்கு தகவல்கள் தெரிவிக்கபடாமல் இருந்தவர்களை மருத்துவர்கள் விசாரித்தனர். அதில் தனம், யாதவியும் அடக்கம், தனத்திடம் வந்து அவர்கள் விசாரிக்க, "நான் நெல்லூருக்கு ஒருவேலையா போறேன்.. எனக்கு ஒன்னுமில்ல, நீங்க டிஸ்சார்ஜ் செஞ்சா போயிடுவேன், என்னை பார்க்கல்லாம் சொந்தக்காரங்க யாரும் வர மாட்டாங்க.." என்றார்.

பின் அவர்கள் யாதவியிடம் விசாரிக்க போக, "இவ என்னோட பொண்ணு தான்ம்மா.. பேரு தேவி இவளும் என்கூட நெல்லூருக்கு தான் வரா.." என்று தனமே பதில் கூறிவிட்டார். அதில் யாதவி அவரை திகைப்பாக பார்க்க,

"உன்னைப் பார்த்தா ஏதோ பிரச்சனையில் இருக்கன்னு தோனுது.. உன்னை தனியா விட்டுட்டு போக மனசில்லை, பார்க்க என்னோட பொண்ணு தேவி மாதிரியே இருக்க, காலம் ரொம்ப கெட்டு போயிருக்கு, தெரியாத ஊரில் என்ன செய்வ? நான் அந்த ஊர்ல ஒரு வீட்டுக்கு வேலைக்கு போறேன்.. அங்கேயே தங்கிக்கலாம், என்கூட என்னோட குடும்பத்தாரும் வரலாம்னு சொல்லியிருக்காங்க.. எனக்கு இப்போதைக்கு யாருமில்ல.. அதனால் நீ வேணும்னா என்கூட வந்து தங்கிக்கலாம்.." என்று அவர் சொல்ல, யாதவிக்கும் அதுதான் சரியென்று பட்டது.

அவளைப் பற்றி அவர் கேட்க, தனக்கு யாருமில்லை என்று சொல்லிவிட்டாள். பின் அவரோடு நெல்லூருக்கு கிளம்பிச் சென்றாள். அவள் தேவி என்ற பெயரில் சென்றதால் தான், அன்று அந்த நேரம் கிளம்பிய பேருந்தில் சென்றவர்களை பற்றி விபாகரன், சாத்விக் விசாரித்த வரைக்கும் அவளைப் பற்றிய தகவல் அவர்களுக்கு கிடைக்கவில்லை.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.