(Reading time: 28 - 55 minutes)

"எல்லாரையும் போல யாதவி கிடையாது.. அவ உங்க பையனை விரும்புறா.. உங்க பையனுக்கும் அவளை பிடிச்சிருக்கு.. பாண்டிச்சேரில ரெண்டுப்பேரும் ஒருத்தருக்கொருத்தர் பேசி பழகியிருக்காங்க.. அதை நம்பி தான் அவ இங்க கிளம்பி வந்தா.. அவளை உங்களுக்கும் தெரியும்? அவளை கூட்டிக்கிட்டு அவளோட அப்பா உங்கக்கிட்ட அவளுக்கு வாய்ப்பு கேட்டு வந்திருக்காரு.." என்று அவன் விஷயங்களை எடுத்து சொல்ல,

"அய்யோ இத்தனை பேசியும் உனக்கு புரியலயே.. என் பையனை தேடி பேன்ஸ் கூட்டம் எப்படி வருமோ, அதேபோல என்கிட்ட வாய்ப்பு தேடி வர்றவங்களும் நிறைய பேர்.. எல்லோரையும் நாங்க ஞாபகம் வச்சிருக்க முடியாது..

ஆமாம் என்னோட பையன் அந்த பொண்ணு கூட சுத்தினதுக்கும் காதலிச்சதுக்கும் என்ன சாட்சி.. நீயா வந்து ஏதோ உளர்ற.. இங்கப்பாரு அந்த பொண்ணு காதல்னு உளரிக்கிட்டு வந்து நின்னப்போ, அந்த பொண்ணுக்கு புத்தி சொல்லி ஆளைவிட்டு அவ ஊருக்கு பஸ் ஏத்தி விடச் சொல்லிட்டு தான் என் பையன் போனான்.. இப்படி அறியாத்தனமா வீட்டை விட்டு வர்றவங்களுக்கு எப்போதுமே நல்ல புத்தி சொல்லி தான் அனுப்புவோம்.. ஆனா அதுக்குப்பிறகு அவங்க எங்க போறாங்கன்னு நாங்க பார்த்துக்கிட்டா இருக்க முடியும்,

இத்தனை நேரம் உன்னை உள்ள கூப்பிட்டு உனக்கு பதில் சொல்லணும்னு அவசியம் கிடையாது.. இருந்தாலும் சொல்றேன்.. அதிலேயே எங்களை நீ புரிஞ்சிக்க.." என்று அவர் திமிராகவே பேசினார்.

அதில் கோபம் வந்தவனாக, "இங்கப்பாருங்க நான் பொறுமையா பேசிக்கிட்டு இருக்கேன்.. யாதவி மட்டும் திரும்ப ஊருக்கு வரல.. அப்புறம் உங்களையும் பிள்ளையையும் சும்மா விட மாட்டேன்.." என்று அவன் கோபப்பட,

"என்ன மிரட்டிறீயா.. முதலில் அந்த பொண்ணுக்கு நீ யாரு? அவளோட அப்பா, அம்மா வந்து கேட்டா பரவாயில்லை.. நீயேன் வந்து கேட்கிற.. நீ என்ன அவங்க குடும்பத்துக்கு சொந்தமா?" என்று கேட்டார்.

"நான் அவளோட புருஷன்.. எனக்கு தான் அவக்கிட்ட எல்லா உரிமையும் இருக்கு.." என்று மனதிற்குள் சொல்லிக் கொண்டானே தவிர, அதை வெளியில் சொல்லவில்லை.

என்னத்தான் அவர் நடந்ததை அப்படியே சொல்லியிருந்தாலும், அவரது அலட்சிய பேச்சில் விபாகரனுக்கு அதையெல்லாம் நம்புவதற்கு கஷ்டமாக இருந்தது. ஒருவேளை தந்தைக்கு தெரியாமல் சாத்விக் யாதவிக்கு பாதுகாப்பு கூட கொடுத்திருக்கலாம் அதனால் அவளுக்கும் தனக்குமான உறவை இப்போதல்ல, எப்போதுமே வெளியில் சொல்லக் கூடாது என்று நினைத்துக் கொண்டான்.

ஒருபக்கம் மகன் சாதாரண பெண்ணை காதலிக்கிறான் என்பதால் இவரே யாதவியை ஏதாவது செய்துவிட்டாரா? என்றும் அவனுக்கு சந்தேகமாக இருந்தது.

அதற்குள் அவரோ, "நீ சொந்தமாவே இருந்தாலும் எனக்கு கவலையில்லை, உன்னால என்ன முடியுமோ பார்த்துக்கோ, அந்த பொண்ணு இங்க இல்ல.. அவளை அனுப்பி வச்சாச்சு.. அது தான் சொல்ல முடியும்.. முதலில் இங்க இருந்து கிளம்பு.." என்று அவனை துரத்துவதில் குறியாக இருந்தார்.

வெளியே வந்தவனுக்கு ஒன்றுமே புரியவில்லை, ஒருவேளை யாதவி பாண்டிச்சேரிக்கே போயிருப்பாளா? தனக்கு தான் சொல்லாமல் விட்டுவிட்டார்களா? என்பது போல் யோசித்தவன், திரும்ப வீட்டுக்கே செல்லலாமா? இல்லை விமான நிலையத்திற்கு சென்று சாத்விக்கை பார்த்து கேட்கலாமா? அப்படி சென்று அவனை பார்க்க முடியுமா? பார்த்தாலும் தனியாக பேச முடியுமா? என்று அவன் யோசிக்கும் போது தான், மஞ்சுளாவிடம் இருந்து அழைப்பு வந்தது.

யாதவியை பற்றி சொல்லத்தான் அழைக்கிறாரோ என்று அவன் எதிர்பார்த்திருக்க, அவரோ மிகவும் வருத்தமான செய்தியை கூறினார். ஆம் மருத்துவமனையில் கவலைக்கிடமாக இருந்த ரத்னாவின் உயிர் பிரிந்தது என்ற செய்தியை அவர் அழுதுக் கொண்டே கூறியதை கேட்டு அவனுமே மிகவுமே வருந்தினான்.

அடுத்து யாதவியை பற்றி நினைக்காமல், அவன் உடனே பாண்டிச்சேரிக்கு செல்ல வேண்டியதாக இருந்தது. அங்கே மருத்துவமனைக்கு சென்று செய்ய வேண்டிய வேலைகள் முடித்து ரத்னாவின் இறுதி ஊர்வலத்திற்கான வேலையை கவனிக்கலானான்.

ஒருபக்கம் அன்னை இறந்தது கூட யாதவிக்கு தெரியவில்லையே, அவளை எங்கே என்று தேடுவது? சாத்விக்கும் இந்நேரம் வெளிநாட்டில் இருப்பான். அதனால் அவளைப் பற்றி எப்படி அறிந்துக் கொள்வது?  என்று நினைத்தவன், அவள் வருவாளா? என்று எதிர்பார்த்தான். இன்னொருபக்கம் கணவனாக இருந்து தன் மனைவியின் இறுதி சடங்கில் கூட ஒழுங்காக கலந்துக் கொள்ளாமல், மனைவியும் மகளும் தன்னை ஏமாற்றிவிட்டார்கள் என்ற வெறுப்பில் பன்னீர் குடித்துவிட்டு போதையில் இருந்தார். அவரை எத்தனை சரிப்படுத்த முயற்சித்தும் முடியவில்லை. அதனால் மருமகன் என்ற முறையில் விபாகரனே அத்தனை சடங்குகளையும் செய்து ரத்னாவை இறுதி யாத்திரைக்கு அனுப்பிவைத்தான்.

அதுவரையிலுமே யாதவி வரவில்லை என்றதும் அவனுக்கு கவலையாகிவிட்டது. சாத்விக்கை தேடிப் போனவள் அவனோடு சேர்ந்திருந்தால் கூட, அவள் எப்படியோ போகட்டும் என்று அவன் விட்டிருப்பான். ஆனால் அவள் எங்கே என்று தெரியாதப்பட்சத்தில், அவளிடம் காதல் கொண்ட மனது சும்மாயிருக்கவில்லை.

மீண்டும் சாத்விக் வீடு வாசல் வரை சென்றவன், காவலாளியிடம் சாத்விக் பற்றி விசாரித்தான். ஆனால் அவன் இன்னும் இந்தியா திரும்பவில்லை என்று தெரிந்ததும், அவனால் அமைதியாக இருக்க முடியாமல், காவல் நிலையத்தில் புகார் அளிக்கச் சென்றான்.

விபாகரனுக்கு சாத்விக் மேல் ஏனோ இனம் புரியாத கோபம் அப்போதே உருவானது. தன்னை தேடி வந்த பெண்ணை பற்றிய அக்கறை இல்லாமல் அவன் பாட்டுக்கு வெளிநாடு சென்றுவிட்டானே என்ற கோபத்தணல் உள்ளுக்குள்ளேயே இருந்தது. காதலித்த பெண் மீது அக்கறை இல்லையா? என்ற கேள்வி பிறந்தது. ஒருபக்கம் தந்தைக்கு பயந்து மறைமுகமாக யாதவியை பாதுகாத்து வருகிறானோ என்ற சந்தேகமும் இருந்தது.

ஆனாலும் யாதவியை பற்றி ஏதாவது தெரிய வாய்ப்பு இருக்காதா? என்று தான் அவன் காவல் நிலையத்தில் புகார் அளிக்க வந்தான். ஆனால் அங்கு அவனுக்கு சரியான அணுகுமுறை கிடைக்கவில்லை.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.